

மாடுகளுக்குப் புல் வெட்டுவதற்குத் தழைவெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அதன்மூலம் ஒரு மணி நேரத்தில், அரை ஏக்கர்வரை வெட்டிவிட முடியும் என்கிறார். இந்தக் கருவி மூலமாக நெல் அறுவடையும் செய்ய முடியும் என்கிறார். நம் நாட்டில் இந்த மாதிரியான சிறு உழவர்களுக்கு ஏற்ற கருவிகள் செய்யப்படுவதில்லை. நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் பரப்புள்ள இடங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட டிராக்டர் போன்ற பெரிய இயந்திரங்கள்தான், இங்கே ‘காப்பியடிக்கப்பட்டு' உருவாக்கப்படுகின்றன.
ஆள் பற்றாக்குறை
நம் நாட்டில் சராசரி நிலவுடைமை 1970-ம் ஆண்டளவில் 5.63 ஏக்கராக இருந்தது. 2010-ம் ஆண்டளவில் 2.86 ஏக்கராகக் குறைந்துள்ளது. அதற்கு ஏற்றாற்போலக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் சிறு, குறு உழவர்களை மனதில் வைத்து இயந்திரங்கள், கருவிகளை உருவாக்கவில்லை என்பதுதான் சோகம்.
வேலை ஆட்கள் பற்றாக்குறைதான் அச்சங்குளம் பிச்சைமுருகன் சந்திக்கும் மிகப் பெரிய சவால். அத்துடன் திறன்மிக்க வேலையாட்களும் மிக மிகக் குறைவு. முதியவர்களே பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலாளர்களாக உள்ளனர். இளைஞர்கள் இந்தத் துறையை எட்டிப் பார்ப்பதே இல்லை. இதனால் இவர் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு புறம் வேலை இல்லாத் திண்டாட்டம் கடுமையாக இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. மறுபுறம் இந்தியாவின் மிக இன்றியமையாத தொழிலான வேளாண்மைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதை, யாரும் கணக்கில் கொள்வதே இல்லை. இந்த முரண்பட்ட தொழிற்கொள்கை பற்றி நம் சமூகத்தில் பெரிய கவலையும் இல்லை.
இரண்டு பக்கமும் லாபம்
பல லட்சம் கோடி வெளிநாட்டு மூலதனங்களை வாங்கி நமது நாட்டை அவர்களுக்கு அடகு வைக்க முனையும் அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பாளர்களும், அந்த நிறுவனங்கள் தரும் வேலைவாய்ப்பு எவ்வளவு குறைவானது என்பதைக் கவனிக்காமல் கண்களை மூடி கொள்கிறார்கள். அதிக முதலீடு, நவீன இயந்திரம், குறைந்த வேலைவாய்ப்பு என்பதற்கு மாற்றாக, குறைந்த முதலீடு, அதிக வேலைவாய்ப்பு, அதிக மனித உழைப்பு என்கிற உற்பத்திக் கொள்கையை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கைகளில்கூட வலியுறுத்துவதில்லை.
ஒரு பண்ணையாளர் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் குறைந்தது இரண்டு ஆட்களுக்கு வேலை தர முடியும். நான்கு பால் மாடுகளைப் பராமரிக்க இரண்டு ஆட்களை மிகச் சிறந்த கண்ணியமான வசதிகளோடு வைத்துக்கொள்ள முடியும். அவர்களும் இப்படி உழைப்பதன் மூலம் சிறப்பான அடிப்படை வசதிகளோடு வாழ முடியும்.
அவர்களது உற்பத்திப் பொருட்களை நுகர்வோரிடம் செப்பமாகக் கொண்டுசேர்த்தால், இன்று வாங்கும் விலையைவிட குறைவான விலைக்கு நுகர்வோர் பொருட்களைப் பெற முடியும். ஆக, விலைவாசி உயர்வும் குறையும். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். பரவல்மயமான பொருளாதாரம் பெருகும்.
இவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பணமும் வேலைவாய்ப்பு பெருக்கமும், இயற்கைவளக் கொள்ளைத் தடுப்பும் வேறு எந்தத் துறையிலும் கிடைக்காது. ஒருசிலர் மட்டும் சில லட்சங்களைச் சம்பளமாக வாங்குவதற்கு மட்டுமே பிற துறைகள் உதவும்.
தீர்வில்லாத பயணம்
இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த நாட்டுக்கு உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட (labour intensive) தொழிற்கொள்கை வேண்டுமே அன்றி, மூலதனத்தையும் இயந்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட (capital, machinery intensive) தொழிற்கொள்கை தீர்வைத் தர முடியாது.
ஆனாலும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கையே பின்பற்றப்படுவதால் பிச்சைமுருகன் போன்ற உழவர்கள் இன்று ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
விவசாயி பிச்சைமுருகன் தொடர்புக்கு: 93627 94206