Published : 21 May 2016 03:51 PM
Last Updated : 21 May 2016 03:51 PM

முன்னத்தி ஏர் 32 - வெங்காயச் சாகுபடியில் தனி முத்திரை

அச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை இயற்கை முறையில் தொடங்கியபோது, ஐந்து ஏக்கரில் 84 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. பின்னர் இயற்கைவழி வேளாண்மை நுட்பங்கள் கைவந்த பின்னர், சராசரி முப்பது மூட்டைக்குக் குறைவில்லாமல் எடுக்கிறார். அது மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் ரசாயன வேளாண்மைக்கு இணையான விளைச்சலை இயற்கை முறையில் தன்னால் எடுத்துவிட முடியும் என்று அடித்துச் சொல்கிறார்.

18 கிலோ வாழைத்தார்

தான் முதன்முதலில் குறைவான விளைச்சல் எடுத்தபோதும் தஞ்சை சித்தர், கோமதிநாயகம் இருவரும் நல்ல விலை கொடுத்து வாங்கித் தன்னைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றினார்கள் என்று நெகிழ்ந்து கூறும் இவர், இயற்கை வேளாண்மையை அரசு கண்டுகொள்வதில்லை என்பதையும் கூறி வருத்தப்படுகிறார்.

வாழைச் சாகுபடியில் இவர் சாதனை விளைச்சலை எட்டியுள்ளார். ஒரு தார் 18 கிலோ எடைக்கு விளைந்தபோதும், தண்ணீர்த் தேவை என்பது மிகவும் அடிப்படையானது. பருவக் காலங்களில் மழை பெய்யாதபோது வாழைச் சாகுபடிக்குள் இறங்குவது மிகவும் ஆபத்து என்பது இவரது அனுபவம்.

கோடையில் வெங்காயம்

இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை, கோடையில் வெங்காயச் சாகுபடி. கடும் வெயில் காலத்தில் வெங்காயத்தை வளர்த்தெடுப்பது கடினமான காரியம். இவரது பண்ணையில் கடும் வெயிலில் வெங்காயம் வளர்ந்துள்ளது. ஆங்காங்கே நுனி கருகி இருந்தாலும் பயிர் திடமாகவே உள்ளது. இதற்குக் காரணம், இவர் கொடுக்கும் ஊட்டக் கரைசல்கள். குறிப்பாக அமுதக் கரைசல், பஞ்சகவ்யம் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கொடுக்கிறார்.

சரியான வடிகால் வசதியுடன் தனது நிலத்தை வைத்துள்ளார் பிச்சை முருகன். கோடைக் காலம் வெங்காயத்துக்குக் கடுமையான சவாலாகும் என்பது இவரது கருத்து. எனவே, பலரும் இதைத் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இவரோ துணிந்து வெங்காயச் சாகுபடி செய்துள்ளார்.

இயற்கை ஊட்டக் கரைசல்கள்

வெங்காயத்துக்கு நிலத்தை நன்கு உழுது பாத்திகள் அமைத்துள்ளார். அதனுள் மிளகாய் சாகுபடி செய்தாலும், அவை வெயிலில் கருகியுள்ளன. ஆனால், வெங்காயம் மட்டும் வளர்ந்துவருகிறது.

தொழுவுரமாகத் தனது மாடு, ஆடுகளிடமிருந்து கிடைக்கும் கழிவைப் பயன்படுத்துகிறார். இதனால் அடிஉரத் தேவை எளிதில் பூர்த்தியாகிவிடுகிறது. அடுத்ததாக மேலுரத்துக்குப் பல்வேறு கரைசல்களைத் தயாரித்துப் பயன்படுத்துகிறார். ரசாயன வேளாண்மையில் கொடுக்கப்படும் உரங்களுக்கு இணையாக, இவரது கரைசல்கள் அமைந்துள்ளன. பார்க்கும் இடம் எங்கும் பீப்பாய்களில் கரைசல்கள் ஊறிக்கொண்டு இருக்கின்றன.

சாதனை சாகுபடி

- பிச்சைமுருகன்

விதைகளை நான்கு விரற்கடை அல்லது ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்துள்ளார். இது சற்று முன்பின் ஆனாலும் தவறில்லை. பெரும்பாலும் காய்ச்சலும் பாய்ச்சலுமாகவே நீரைக் கொடுக்கிறார். இதனால் வேர்கள் நன்கு மூச்சு விட்டு வளருகின்றன. அது மட்டுமல்லாது இவர் தரும் இயற்கை எருக்கள் நீரை நன்கு பிடித்து வைத்துக்கொள்வதால், மண்ணில் வெப்பநிலை அதிகமாக உயர்வதில்லை. மண் பஞ்சுபோலச் செயல்படுகிறது.

களை எடுப்பதற்கு ஆட்களையே நம்பியுள்ளார். பொதுவாகக் கைக் களை எடுப்பதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துகிறார். பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தினாலும், இவரது பண்ணையில் பூச்சிகளின் தாக்குதல் மிகக் குறைவு. இயற்கை முறைக்கு மாறிவிட்டதால் பல நன்மை செய்யும் பூச்சிகள், பறவைகள் பெருகியுள்ளன.

ஏக்கருக்கு 6,000 கிலோ வெங்காய அறுவடை செய்துள்ளார். வெங்காயச் சாகுபடியைத் தனது சிறப்பான முத்திரை பயிராகக் கருதுகிறார். இந்த வெற்றியின் ரகசியம் தொடர்ச்சியாக ஊட்டக் கரைசல்களைத் தெளிப்பதுதான் என்கிறார்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
விவசாயி பிச்சைமுருகன் தொடர்புக்கு: 93627 94206

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x