

திறந்தவெளியில் படுத்தவாறு இரவு நேர வானத்தை நீங்களும் ரசித்திருக்கலாம். எவ்வளவு பெரிய வானம், எத்தனை யெத்தனை விண்மீன்கள்? இப்படி வான் நோக்குகையில் நமக்குள் ஒரு கேள்வி எழும். ‘வானுக்கு அப்பால் என்ன இருக்கிறது?’
‘கடவுள்’ என்பது பதிலானால், பேசாமல் குப்புறக் கவிழ்ந்து உறங்கிவிடுவதே நலம். ஏனெனில், அது நம்பிக்கை. எங்கே நம்பிக்கை வந்துவிடுகிறதோ, அங்கே மேற்கொண்டு சிந்தனைக்கு இடமில்லை. அதுவும் அறிவியல் சிந்தனைக்கு அறவே இடமில்லை. நாம் அறிவியல் சிந்தனையுடன் இந்த பிரபஞ்சத்தை நோக்குவோம்.
பிரபஞ்சம் என்பதைத் தமிழில், ‘புடவி’ என்று அழைக்கலாம். இதைப் பற்றிப் பேசுவது சற்று அலுப்பூட்டுவதுபோல் இருந்தாலும் நாம் கட்டாயம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அப்போதுதான் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்காக இயற்கை என்னென்ன முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது என்பது நமக்கு விளங்கும்.
உண்மை எது?
எட்டு கோள்களும் ஒய்யாரமாகச் சுற்றும் ஞாயிறு மண்டலத்தோடு நம் புடவியின் எல்லை முடிவதில்லை. ஒன்பதாவது கோளாகச் சிறிது காலம் பதவி வகித்து பின்பு பதவிநீக்கம் செய்யப்பட்ட புளூட்டோவுக்கு அப்பாலும் அது விரிந்துள்ளதை அறிவோம். அதற்கும் அப்பாலுள்ள ‘ஓபிக்-ஊர்ட்’ எனும் பகுதிதான் ஞாயிறு மண்டலத்தின் விளிம்பு. அது வால்மீன்கள் விளையாடித் திரியும் பரந்து விரிந்த விண்பரப்பு.
இதன் தொலைவை அளக்க ஒரு விண்ணியல் அலகு உள்ளது. அதை AU என்பர். இது ஞாயிற்றுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு. இதன்படி புளூட்டோ இங்கிருந்து 40 AU தொலைவில் உள்ளது என்றால், ஊர்ட் மேகத்தின் இதயப் பகுதியோ 50,000 AU தொலைவில் உள்ளது. நாம் ஒளி வேகத்தில் சென்றாலும்கூட அடுத்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஊர்ட் மேகத்தை நாம் சென்றடைந்துவிட முடியாது. எனவேதான், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை உலகை நம்புபவர்களுக்காகச் சூழலியலை இங்கு அறிவியல் மொழியில் பேச வேண்டியுள்ளது.
தொடரும் வேதிவினை
புடவி ஒன்றும் ஓய்வில் இருக்கவில்லை. அது தான் நிலைத்திருப்பதற்குத் தொடர் வேதிவினையை நிகழ்த்திக் கொண்டி ருக்கிறது. ஹைட்ரஜன், ஹீலியமாக மாற்றப் படுவதே அந்த வேதிவினை. ஹீலியமானது மொத்த ஹைட்ரஜன் நிறையில் 0.07% என்ற விழுக்காட்டில் அமைந்துள்ளது. இது இயற்கையே தேர்ந்தெடுத்துள்ள விழுக்காடு. இதை மாற்ற நினைத்து மின்விசிறியின் சீராக்கியை (ரெகுலேட்டர்) குறைப்பது போல் சற்றுத் திருகி 0.06% என்று குறைத்தால் என்ன நிகழும்? எதுவும் ஆகாது. புடவியில் ஹைட்ரஜனைத் தவிர வேறெதுவும் இருக்காது.
இப்போது அதே சீராக்கியை எதிர்பக்கமாகத் திருகி 0.08% என்று கூட்டுவோம். ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவது படுவேகமாக அதிகரித்து வெகுகாலத்துக்கு முன்பே அது தீர்ந்து போயிருக்கும். ஆக 0.01% என்கிற விழுக்காட்டு அளவில் புடவியின் இருப்பைத் தக்க வைத்துள்ளது இயற்கை. புடவிக்கே வாழ்வு இல்லையெனில் அதிலுள்ள புவிக்கும், புவியில் வாழும் புழுவுக்கும் என்ன வாழ்க்கை இருக்கும்?
எதற்கு இந்த இரண்டாம் பிறப்பு?
நாம் வாழும் புவி ஒரு மீவெடிப்பில் (Big bang) உருவானது என்கிறது அறிவியல். புவியில் உள்ள பொருட்களில் 98% மீவெடிப்பில் உருவானவையே. தொடக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் போன்ற இலகு வாயுக்கள் மட்டுமே இருந்தன. உயிர் வாழ்வுக்கு அடிப்படையான கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பிற தனிமங்கள் அப்போது இருந்திருக்கவில்லை. மீவெடிப்பின் வெப்பமும் ஆற்றலுமே அவற்றைத் தோற்றுவித்தன என்று அறிவியல் கூறுகிறது. இந்த மீவெடிப்பில் இருந்தே நமது ஞாயிறு மண்டலமும் தோன்றியது.
நமது ஞாயிறு மண்டலமே இரண்டா வது முறையாக உருவானது என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. புவியில் யுரேனியம் உள்ளிட்ட பல உயர் தனிமங்கள் கிடைப்பதால்தான், அந்த ஐயம் எழுகிறது. இது முதன்முறையாக உருவானதாக இருந்தால் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற இலகு வாயுக்கள் மட்டுமே இருந்திருக்கும். உயர் தனிமங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால்தான் அறிவியலாளர்கள் இப்படிக் கணிக்கிறார்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த ஒரு விண்மீன் இறந்தபோது அது வெடித்து, அவ்வெடிப்பிலிருந்து பரவிய உயர் தனிமங்கள் செறிந்த விண்முகிலில் இருந்தே மறுமுறை ஞாயிறு மண்டலம் உருவாகியிருக்க வேண்டும் என்பதே அக்கணிப்பு.
இப்போது நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. என்ன காரணத்துக்காக இயற்கை நமது ஞாயிறு மண்டலத்தை இரண்டாவது முறையாக உருவாக்க வேண்டும், உருவாக்கிய பின்னும் எதற்காக ஹீலியம் சீராக்கியைத் திருப்பாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்? கொஞ்சம் யோசிப்போம்!
(அடுத்த வாரம்: புவியில் வாழும் விண்மீன்கள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com