Published : 21 May 2016 03:48 PM
Last Updated : 21 May 2016 03:48 PM

கிழக்கில் விரியும் கிளைகள் 31 - ஊட்டம் தரும் உள்நாட்டு தாவரம்

விளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், ஜாந்தோடாக்சின், அசிடிடிசிமின், ஸ்கோபோலெடின், ஐசோஇம்பெரபோரின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

மருத்துவ முக்கியத்துவம்

இவை இந்தத் தாவரத்தின் பின்வரும் மருத்துவப் பண்புகளுக்குக் காரணமாகத் திகழ்கின்றன:

வயிற்றுப் போக்கு, சீதபேதி, மூலம், குடல் கோளாறுகள், தொண்டைப் புண், ஒவ்வாமை, நீரிழிவு நோய், குமட்டல், சளி, உறுத்தல்கள், வலி, வீக்கம், தோல் நோய்கள், பல் நோய்களை, வலிப்பு, மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவற்றை நீக்குகின்றன.

மருத்துவ முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்தத் தாவரத்துக்கு இந்தியாவில் அதிக ஆன்மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற தாவரங்களுக்குப் பொதுவாக அதிகப் பாதுகாப்பும் பேணலும் இயற்கையாகவே கொடுக்கப்படுகின்றன.

பரத்வாஜ முனிவரின் ஆசிரமப் பூங்காவில் இந்தத் தாவரம் வளர்க்கப்பட்டதாக ராமாயணமும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற காட்டுப் பகுதிகளில் இது காணப்பட்டதாக மகாபாரதமும் குறிப்பிடுகின்றன. தென்னிந்தியாவில் இது சிவனுக்கு உரிய முக்கிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள திருக்காராயில் என்ற பாடல் பெற்ற கண்ணாயிரநாதன் திருக்கோவிலின் சிவபெருமானோடு இந்த மரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டிய முத்திரை

விளாமரம் பரதநாட்டியத்தோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டியக் கலையின் கபித்தா முத்திரை, மொத்தமுள்ள 28 ஒரு கை முத்திரைகளில் 11-வது முத்திரையாகக் கருதப்படுகிறது. இந்த முத்திரை பற்றி அபிநயதர்பனாவிலும், அபிநயசந்திரிகாவிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த முத்திரை ஒன்றில் ஒரு காட்சி சூழலை (Context) உருவாக்கி, அதன்மூலம் கணவன் அல்லது காதலனோடு கொண்ட உணர்வு நிலைகளை (குறிப்பாகப் பாலுணர்வை) அல்லது குறிப்பிட்ட செயல்பாடுகளை எடுத்துக்காட்ட உதவுகிறது.

இந்த முத்திரையில் நடனமாடுபவர் தன்னுடைய கட்டை விரலை ஆள்காட்டி மற்றும் நடு விரல்களுக்கு இடையில் நுழைத்து மற்ற விரல்களை மூடிவிடுகிறார். இந்த முத்திரையோடு விளாமரம் (கபித்தம்) ஏன் தொடர்புபடுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இந்தத் தாவரத்தின் பூ, முத்திரையின் பாவனை போன்று திருகிக் காணப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம்; அல்லது `கபித்தம்’ பாற்கடலைத் திருகிக் கடைவதையும் குறிப்பதால் அதன் காரணமாகவும் இருக்கலாம்.

மீட்க வேண்டும்

வெளிநாட்டுப் பழங்களான ஆப்பிள், கிவி, ஆரஞ்சு, சப்போட்டா போன்றவற்றின் நுழைவால் மிகவும் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் இயல்பான பழங்களில் ஒன்றான விளாம்பழம், நம் மக்களால் ஒதுக்கப்படுவது மிகுந்த வருத்தத்துக்குரியது. நல்ல பல ஊட்டம் சார்ந்த பண்புகளும் மருத்துவப் பண்புகளும் ஒருசேர அமைந்த விளாம்பழத்தை அதிக மக்கள் பயன்படுத்தி, அதை இயல்பு ஓட்டத்துக்குக் கொண்டுவந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். குறிப்பாகப் பழ வியாபாரிகளும், ஜாம், ஜூஸ் தயாரிப்பாளர்களும் விளாம்பழத்தை மீண்டும் பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்கலாம். உணவு சார்ந்த அரசுசாராத் தன்னார்வ அமைப்புகளும் விளாம் பழத்தைப் பிரபலப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.

(அடுத்த வாரம்: உடைந்து விழும் மரம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x