

பள்ளி மாணவர் சி.ஆர். ரமணகைலாஷ் (14) எழுதி அண்மையில் வெளியான ‘Fire of Sumatra’ (Zero Degree Publishing) நாவல், புலிகள், அவற்றின் வாழ்க்கை முறை, மனிதர்களால் அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது.
இந்த நாவலின் களம் சுமத்ரா தீவாக இருந்தாலும், புலிகள், அவற்றின் வாழிடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலக அளவில் பொதுவானவையே. கதைக்களமும் கதாபாத்திரங்களும் கற்பனையாக இருந்தாலும், சொல்லப்பட்டுள்ள கருத்துகளும் நிகழ்வுகளும் அறிவியல் துல்லியத்துடன் உள்ளன. இந்த நாவலின் முக்கியக் கதாபாத்திரங்கள்: ஒரு புலியின் குடும்பம், அவற்றைக் காப்பாற்ற முயலும் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆர்வலர்கள். புலிக் குடும்பத்தில் அம்மா, அப்பா, மூன்று குட்டிகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண் புலியே குட்டியைப் பேணுகின்றன. அரிதாகவே புலிக் குட்டிகளை ஆண் பராமரிக்கிறது.
பெண் புலியான சத்ரா குட்டிகளுக்காக இரைதேட, அவற்றை விட்டுவிட்டுச் செல்லும்போது காட்டுத்தீயில் சிக்கி மயங்கிவிடுகிறது. கண் விழித்துப் பார்க்கும்போது சில காட்டுயிர் ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்டு கூண்டில் அடைபட்டிருக்கிறது. அங்கே பொறியில் சிக்கி காலை இழந்த வாலி எனும் மற்றுமொரு புலியை அது சந்திக்கிறது. தங்களது நிலைமையைப் பற்றி ஒருவருக்கொருவர் அவர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். சத்ரா தனது குட்டிகளைப் பிரிந்து வாடுகிறது. அது மீண்டும் காட்டிற்குள் சென்றதா? குட்டிகளோடு சேர்ந்ததா என்பதை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது இந்த நாவல். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான ஆங்கில நடையில் இந்த நாவல் உள்ளது.
புலிகளின் வாழ்க்கை முறை, அவை குறித்த இயற்கை வரலாற்றுக் குறிப்புகள், அவற்றிற்கு மனிதர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்துப் புலிகளே கூறுவதுபோல அமைத்திருப்பது வாசகர்களைக் கவரும், ஆழமாகச் சிந்திக்கவும் வைக்கும். கதையின் ஓரிடத்தில் புலிக்குட்டிகளில் ஒன்று தன் தந்தையிடம், “மனிதர்கள் புத்திசாலிகளா?” எனக் கேட்கிறது. அதற்குத் தந்தைப் புலி சொல்லும் பதில்: ”நம்மைத் திறமையாகக் கொல்லுவதாலும், நமது வாழிடத்தை அழிப்பதனாலும் அவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்வதா, அல்லது இதையெல்லாம் செய்வதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகளை அறியாமல் இருப்பதால், அவர்களை மனப்பக்குவம் இல்லாத பித்துப் பிடித்தவர்கள் என்று சொல்வதா? எனத் தெரியவில்லை”.
பாமாயில் (எண்ணெய்ப்பனை) சாகுபடிக்காக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக் காடுகள் அழிக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த நாவல் பேசியுள்ளது. பாமாயில் தோட்டத்திற்காக, மழைக்காடுகளை வெட்டிச் சாய்த்து, தீ வைத்துக் கொளுத்தும் கொடுமை நடக்கிறது. இது இப்போதும் நிஜமாகவே நடந்துவருவதுதான். அந்தக் காடுகளில் தென்படும் அரியவகை வாலில்லாக் குரங்கினம் ‘ஒராங்ஊத்தன்’ (Orangutan). மரவாழ் உயிரினங்களான இவை காடழிப்புக் காரணமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நாவலின் ஒரு பகுதியில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்லும் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர், அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் கருகிப்போன ஒரு ஒராங்ஊத்தனின் சடலத்தைக் காண்கிறார். அது தனது இரு கைகளாலும் எதையோ கட்டிப்பிடித்துக்கொண்டே எரிந்து போயிருந்தது. அதன் கரங்களுக்குள் இருப்பது கருகிப்போன குட்டி ஒராங்ஊத்தன். இதைப் படிக்கும் போதே, கொடூரமான அந்தக் காட்சி கண்முன்னே வந்து நெஞ்சை உலுக்குகிறது. இது போன்ற நிலை இந்தியக் காடுகளுக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் நிகழ்வதற்கான எல்லாச் சாத்தியமும் இருக்கிறது.
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 13 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பாமாயில் பயிரிடுவதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அளித்துள்ளது. இந்த நோக்கத்துக்காகக் கவனம் செலுத்தப்படும் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் முதலான வடகிழக்கு மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும்¸ உலக அளவில் உயிரினப் பன்மை மிகுந்த இடங்கள். இங்குள்ள இயற்கை வாழிடங்களைச் சீர்குலைப்பது காட்டுயிர்களுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பாதி கருகிய நிலையிலிருந்த ஒராங்ஊத்தனின் படத்தை நாவலாசிரியர் ரமண கைலாஷ் கண்டிருக்கிறார். அதன் பாதிப்பில் விளைந்ததுதான் இந்த நாவல். காட்டுயிர்களின் இயற்கை வரலாறு, காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை இந்தச் சிறு வயதில் உள்வாங்கி நாவலை எழுதியுள்ள அவரை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் இவரைப் போன்ற இளைய தலைமுறை இயற்கை ஆர்வலர்களை எந்த அளவுக்கு எதிர்மறையான பாதிப்புகளுக்கு நாம் எல்லோரும் உள்ளாக்கியிருக்கிறோம் என்கிற கவலையும் எனக்கு மேலோங்கியிருக்கிறது.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org