பசுமை ஆஸ்கர் வென்ற பனிச்சிறுத்தை பாதுகாவலர் சாருதத்

பசுமை ஆஸ்கர் வென்ற பனிச்சிறுத்தை பாதுகாவலர் சாருதத்
Updated on
2 min read

'பசுமை ஆஸ்கர்' என்று அழைக்கப்படும் 'வைட்லி' விருதுகளை, வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர் (WFN) எனும் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. சூழலியல் பாதுகாப்பில் உலகளவில் பங்களிக்கும் களப்பணியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதே அந்த விருதின் நோக்கம். இந்த ஆண்டுக்கான 'வைட்லி' தங்க விருதை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் சாருதத் பெற்றுள்ளார். உலகின் முன்னணி பனிச்சிறுத்தை பாதுகாவலராகத் திகழும் சாருதத்துக்கு ஏப்ரல் 27 அன்று லண்டனில் நடைபெற்ற விழாவில் WFN அமைப்பு விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

சாருதத்தின் செயல்பாடுகள்

அருகி வரும் பனிச்சிறுத்தைகளைக் காப்பதற்காக இந்தியாவில் மக்களை மையமாகக் கொண்ட முன்னெடுப்புகளை சாருதத்தே முதலில் எடுத்தார். ஆசியாவின் உயரமான மலை சுற்றுச்சூழல் அமைப்புகளில் வசிக்கும் பனிச்சிறுத்தைகளின் வாழ்வை மீட்டெடுக்கும் அவருடைய செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. உள்ளூர் மக்களின் வருமானத்துக்கு ஊக்கமளிக்கும் கால்நடை காப்பீட்டுத் திட்டங்கள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடன் காட்டுயிர்களைக் கொல்லும் போக்கை மாற்றியமைத்தல், உள்ளூரிலேயே காட்டுயிர் காப்பிடங்களை நிர்வகித்தல் போன்ற அவரின் புதுமையான முன்னெடுப்புகள் பனிச்சிறுத்தைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்தன.

தொய்வின்றி தொடரும் களப்பணி

அவருடைய செயல்பாடுகள் 2005ஆம் ஆண்டிலேயே WFN விருது பெறக் காரணமாக அமைந்தன. அவருடைய குழுவினர் உலகின் சவால் மிகுந்த சூழல்களில், கிட்டத்தட்ட 60,000 சதுர மைல்களில் வசிக்கும் உள்ளூர் மக்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பன்னிரண்டு நாடுகளின் உயரமான மலைகள், பீடபூமிகளை உள்ளடக்கிய அந்தப் பகுதியில் தற்போது 6,500 பனிச்சிறுத்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றைக் காப்பதற்கும், எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்கும் சாருதத் தொடர்ந்து தொய்வின்றி களப்பணியாற்றி வருகிறார்.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

காட்டுயிர்களைக் காப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியமானது அதை நாம் எப்படிக் காக்கிறோம் என்பது. காட்டுயிர்களைக் காக்கும் முயற்சிகள் அனைத்தும் அந்தப் பிராந்திய மக்களையும், அவர்களின் வாழ்க்கைமுறையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தப் புரிதல் தெளிவாக இருந்த காரணத்தினால், சாருதத்தின் அனைத்து முன்னெடுப்புகளும், பிராந்திய மக்களின் வாழ்வை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அது எப்போதும் அந்தப் பிராந்திய மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவே இருக்கிறது.

சமூக அடிப்படையிலான பாதுகாப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பு கிப்பர் எனும் கிராமத்துக்கு சாருதத் முதன்முதலில் சென்றிருந்தபோது, அங்கே ஒரு பனிச்சிறுத்தை கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது. அந்தக் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் தங்கள் கால்நடைகளைக் கொன்றதற்காக இறந்து கிடந்த அந்தப் பனிச்சிறுத்தையை வசைபாடினர். வரிசையில் நின்று அதன் சடலத்தை அடித்தனர். சமீபத்தில் அதே கிராமத்தில், ஒரு வயதான பனிச்சிறுத்தை இரையை வேட்டையாடும்போது தவறி விழுந்து இறந்துவிட்டது. ஆனால், இந்த முறை உள்ளூர் மக்கள் அதன் சடலத்தைக் கவனத்துடன் மீட்டெடுத்தனர். அதனை மிகுந்த மரியாதையோடு தகனம் செய்து, பிரார்த்தனை செய்தனர். காட்டுயிர்களைக் காக்கும் முயற்சியில் உள்ளூர் மக்களுடன் இணைந்து பயணிப்பதே உரியப் பலனை அளிக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று இருக்க முடியும். சாருதத் போன்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து ஆற்றும் இது போன்ற களப்பணிகள், காட்டுயிர்களுக்குச் சமூக அடிப்படையிலான பாதுகாப்பை உறுதிசெய்யும்; அவற்றின் எதிர்காலத்தையும் உறுதிசெய்யும்.

கூடுதல் தகவல்களுக்கு: 2022 வைட்லி விருது வழங்கும் விழாவில் சர் டேவிட் அட்டன்பரோ அவர்களால் விவரிக்கப்பட்ட சாருதத் குறித்த குறும்படம்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in