பனை புனித பயணம் - மே 1, 2022 - மே 26, 2022

பனை புனித பயணம் - மே 1, 2022 - மே 26, 2022
Updated on
2 min read

பனை மரம் தமிழர்களின் மரம் எனப் பெருமைகொள்ளும் ஒரு தலைமுறை துளிர்த்திருப்பது காண மகிழ்ச்சி. ஆனால், பனை மரம் இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கிறது என்பதும், பல்வேறு மக்களினங்கள் தங்கள் வாழ்வைப் பனையுடன் இணைத்திருக்கிறார்கள் என்பதும் நாம் அறியாதது.

பழங்குடியினர், மீனவர்கள், தலித் மக்கள் இன்னும் விளிம்புநிலையில் வாழும் மக்களுக்குப் பனை மிக முக்கிய வாழ்வாதாரமாகவும் உணவளிப்பதாகவும் இருக்கிறது. இதனை இது நாள் வரையிலும் பதிவு செய்யும் முயற்சிகள் எவரும் முன்னெடுக்கவில்லை. ஆகவே பனை சார்ந்து ஒரு பயணத்தை காட்சன் சாமுவேல் முன்னெடுத்து இருக்கிறார்.

ஏன் இந்தப் புனித பயணம்?

வாழ்வளிக்கும் எதுவுமே புனிதமானது தான். மேலும் பல்வேறு சமய சடங்குகளிலும் பனையின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. பனை பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலமளிப்பதாகவும் உணவளிப்பதாகவும் கூட இருக்கிறது. இப்புனிதத் தன்மை வரலாறு நெடுக பயணித்து நம்மை வந்தடைந்திருக்கிறது.

காட்சன் சாமுவேலின் இப்பயணம், மராட்டிய மாநிலத்திலிருந்து தொடங்கி, கோவா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க இருக்கிறது. இப்பயணத்தின் வாயிலாக மக்களைச் சந்திப்பதுடன், பனை சார்ந்த கருத்துரையாடலை வட இந்தியப் பகுதிகளில் தொடங்க இப்பயணம் வித்திடுவதாக அமையும் என அவர் நம்புகிறார்.

பனைமரச்சாலை

2016 ஆம் ஆண்டு சாமுவேல் எழுதிய 'பனைமரச்சாலை' எனும் பயணம் சார்ந்த நூல் தமிழகத்தில் பனை சார்ந்து எழுதப்பட்ட முதல் பயண நூல். கிட்டத்தட்ட 30 ஆண்டு இடைவெளிக்குப் பின் பனை சார்ந்த கவனத்தை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கடத்தி ஒரு பெரும் அதிர்வலையை அந்தப் புத்தகம் எழுப்பியிருக்கிறது. தற்போது அவர் முன்னெடுத்து இருக்கும் இந்தப் பயணம், இந்திய அளவில், ஒரு மாபெரும் மாற்றத்திற்கு வித்திடும் என்று அவர் நம்புகிறார். அதற்கான் ஆதரவையும், வாழ்த்துதல்களையும் வழங்க வேண்டியது நம்முடைய கடமை.

தொடர்புக்கு: malargodson@gmail.com; +919080250653

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in