

இயற்கையைக் கணினியோடு நாம் ஒப்பிடலாம். அது கோடிக்கணக் கான உயிரின வகைமைகளின் தரவுகளைத் தனக்குள் சேமித்து வைத் துள்ளது. எது தேவையோ அதை மட்டுமே அவ்வப்போது திரையில் காட்டுகிறது. அதாவது, அந்த உயிரினங்களை மட்டும் உலகில் வாழ அனுமதிக்கிறது. மற்றவற்றை அழித்து விடுகிறது. இதையே டார்வினின், ‘இயற்கைத் தேர்வு’ம் விளக்குகிறது என்கிறார் உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாகின்ஸ்.
“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் உலகில் நடைபெறும் மிகச் சிறு மாற்றத்தையும் இயற்கைத் தேர்வு உற்றுக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அது கெட்டதைத் தள்ளி நல்லதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிறது. ஏதேனும் ஓர் உயிரினம் தொடர்ந்து பயனற்ற செயலில் ஈடுபட்டால் இயற்கைத் தேர்வு அதை ஒதுக்கிவிடும்” என்கிறார் அவர். உலகம் தொடங்கியதிலிருந்து வாழ்ந்துவந்த 99.9 சதவீத உயிரின வகைகளை அது அவ்வாறு புவியிலிருந்து நீக்கி வந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்கிறார் பில் பிரைசன்.
ஆம், இயற்கையிடம் ஒரு ‘டெலிட்’ பொத்தான் இருக்கிறது.
அப்படித்தான் ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன்னர் ஐந்தாவது ஊழியான கிரடேசியஸ் - டெர்சியரி ஊழிக்காலத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அப்போது புவிக்கோளத்தைக் காப்பாற்றும் நோக்கில் இயற்கை ஒருமுறை அந்த டெலிட் பொத்தானை அழுத்தியது. அதில் ஒரு பேருயிர் புவியிலிருந்து அடியோடு அகற்றப் பட்டது. டைனசோர் எனும் பெரும்பல்லிதான் அந்தப் பேருயிர்.
சேர்த்துக் காப்பாற்றுமா?
ஏறக்குறைய 15 கோடி ஆண்டு கள் இப்பூவுலகில் வாழ்ந்த உயிரினம் அது. சேப்பியன்ஸ் என்னும் நவீன மனித இனம் உலகில் தோன்றி சில லட்சம் ஆண்டுகளே ஆகின்றன என்கிற உண்மையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று அந்தப் பெரும்பல்லிகள் எங்கே? எங்கோ நிலத்தடியில் புதைபடிமமாக மட்டுமே கிடைக்கின்றன.
அதேவேளை அன்று பெரும்பல்லி களின் கால்களுக்கு இடையே ஓடித் திரிந்த ஒரு சின்னஞ்சிறு பாலூட்டி இனத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவைத்தது இயற்கை. அதிலிருந்து படிமலர்ச்சி அடைந்து தோன்றியதே இன்றைய மனித இனம். அன்று போனால் போகட்டும் என்று விட்டுவைத்த இயற்கை, இன்று அதே ‘டெலிட்’ பொத்தானை அழுத்தி நம்மை அழிக்க எவ்வளவு நேரமாகும்?
புவியில் எல்லா உயிரினங்களும் சராசரியாக நாற்பது லட்சம் ஆண்டுகளே வாழ்ந்துள்ளன என்கிற அறிவியல் உண்மை இன்னும் நம் அனைவருக்கும் புரியவில்லை. நமக்குப் புரிகிறதோ இல்லையோ, அது குறித்து இயற்கை கவலைபடப் போவதில்லை. அதற்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளத் தெரியும். அடுத்த ஒரு கோடி ஆண்டில் முற்றிலும் புதிய உயிரினங்கள்தான் இவ்வுலகில் வாழப் போகின்றன என்பதை அது நன்கு அறியும். என்ன, கூடவே நம்மையும் சேர்த்துக் காப்பாற்றிவிட முடியுமா என்றே அது போராடிக்கொண்டிருக்கிறது. .
தப்பிக்க முடியுமா?
“டைனசோர்களைப் போன்று மனித இனமும் அழிந்துவிடுமோ என்கிற அச்சத்திலேயே வாழ்கிறோம். அதிர்ச்சி என்னவெனில், நாம் அதற்கான அறிகுறி களைக் கண்டறியும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே நமது விதி முடிந்துவிட்டிருக்கும்” என்று ஐக்கிய அமெரிக்க நலத்துறையைச் சேர்ந்த டேவிட் பிரைஸ் கூறியது இங்கே நினைவுக்கு வருகிறது.
புவியின் நீண்ட வரலாற்றோடு ஒப்பிட்டால் மனித இனத்தின் காலம் நூற்றில் 0.0001 பங்கு மட்டுமே. எனவே, ‘டெலிட்’ பொத்தானை அழுத்த இயற்கை யோசிக்கவே செய்யாது. அது, ஏற்கெனவே ஐந்து முறை அதை அழுத்தியுள்ளது. அதாவது, ஐந்து முற்றழிவுகள் நடந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் இயற்கையின் செயலாகவே இதுவரை இருந்துள்ளன.
யார் காரணம்?
உலகில் பத்து லட்சம் உயிரின வகைகள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஆண்டுக்கு 0.1 – 1 என்கிற அளவிலேயே இதுவரை அழிந்துவந்துள்ளன. இது அதிகபட்சமாக ஆண்டுக்குப் பத்து லட்சத்துக்கு 10 என்கிற அளவிலேயே இருக்கலாம் என்கிறது அறிவியல். ஆனால், தற்போது இது பத்து லட்சத்துக்கு நூறு என்பதற்கும் மேலாக அதிகரித்துவிட்டது. இதற்குக் காலநிலை மாற்றம் மட்டும் காரணமல்ல. உயிரினங்களின் வாழிடங்கள் மீதான மனிதத் தலையீடும் காரணம் என்கிறது ஜான் பெல்லமி ஃபாஸ்டர், மேக்டாப் எழுதிய ‘புவிக்கோளின் சூழலியல் சிக்கல்கள்’ எனும் கட்டுரை.
தன் சமநிலை குறைந்துவருகையில் இதையெல்லாம் இயற்கை தொடர்ந்து அனுமதிக்குமா என்பதுதான் கேள்வி. ஆறாவது ஊழியான இந்த ஹோலோசீன் ஊழிக்காலத்திலும் அந்த ‘டெலிட்’ பொத்தான் அழுத்தப்படக் காத்திருக்கிறது. ஆனால், இம்முறை அதை அழுத்தப்போவது இயற்கை அல்ல. இயற்கை உருவாக்கிய உயிரினங்களில் ஒன்று தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ள, அந்தப் பொத்தானை நோக்கிக் குடுகுடுவென ஓடிக்கொண்டிருக்கிறது.
யார் அந்த அவசரக்குடுக்கை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
(அடுத்த வாரம்: புவி தனியே வசிக்கிறதா?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com