பெருங்குடி எனும் சூழலியல் ‘கண்ணிவெடி’

பெருங்குடி எனும் சூழலியல் ‘கண்ணிவெடி’
Updated on
1 min read

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகேயுள்ள குப்பைக் கிடங்கு புதன்கிழை முதல் தீப்பிடித்து எரிந்துவருகிறது. அரசின் அலட்சியத்தாலும் மக்களின் விழிப்புணர்வு இன்மையாலும் சென்னையின் மிகப் பெரிய சதுப்புநிலம், இன்றைக்குப் பெரும் சூழலியல் சீரழிவை ஏற்படுத்தும் மையமாக மாறிவிட்டது.

தென்சென்னையில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம், ஓர் இயற்கை வளம்மிக்க நீர்நிலை சார் காடு. ஆனால், இந்த சதுப்புநிலத்தின் பெருங்குடி பகுதியில் பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி நாள்தோறும் 2,000 டன் (1 டன் – 1000 கிலோ) குப்பையைக் கொட்டிவருகிறது. குப்பை கொட்டுவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பல முறை கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டுவருகிறது.

இங்கே கோடை வெப்பத்தால் தென்னை நார், தேங்காய்ச்சிரட்டைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கி, அந்தத் தீ பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் தீ அணையாமல் எரிவதற்கு ஞெகிழி, செயற்கை இழைகள் போன்ற மக்காத குப்பைகளே காரணமாக இருக்க வேண்டும். அத்துடன் ‘மக்கும் குப்பையிலிருந்து உருவாகும் மீத்தேன் தீப்பிடித்தலை அதிகரித்திருக்கலாம்’ என நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்திருக்கிறார். அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டில் வெப்பஅலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ள நிலையில், பெருங்குடி குப்பைமேட்டுத் தீ எப்போது முழுமையாக அணைக்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தீ எரிவதால் பரவும் நச்சுத்தன்மை கொண்ட புகையால் வேளச்சேரி, தரமணி, கிண்டி பகுதி மக்களுக்குக் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. எரியும் ஞெகிழியிலிருந்து வெளியாகும் டையாக்சின் போன்ற நச்சு வாயுக்கள் சுற்றுவட்டார இளம்தாய்மார்களின் தாய்ப்பாலில் கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடிக் குப்பை மேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு சமீப நாட்களில் அதிகரித்திருப்பதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அளவீடுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினையைக் கையாளும் முறை குறித்து ‘சூழல் அறிவோம்’ விழிப்புணர்வுக் குழுவின் செயல்பாட்டாளர் தீபக் வெங்கடாசலம், சில பரிந்துரைகளைக் கவனப்படுத்துகிறார்:

இந்தக் குப்பை மேடு குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி குப்பையை அகற்றத் திட்டம் வகுக்க வேண்டும். பஞ்சாயத்து வாரியாக குப்பையைத் தரம் பிரித்து, குப்பை சேகரிப்பு மையங்களைப் பரவலாக்கி, சதுப்புநிலத்தில் குப்பை கொட்டுவதை படிப்படியாகக் குறைக்க வேண்டும். நில அளவை (survey) செய்து சதுப்புநிலத்தின் அளவையும் எல்லைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிக்கரணையில் இன்னும் காப்புக் காடாக (Reserved forest) அறிவிக்கப்படாமல் உள்ள 380 ஹெக்டேர் பகுதியைக் காப்புக் காடாக அறிவிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in