கொல்லப்படும் கல்லணைக் கால்வாய்

கொல்லப்படும் கல்லணைக் கால்வாய்
Updated on
1 min read

ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மாவட்டங்கள் காவிரியால் செழித்தன. ஆனால், இன்றைக்கு அதே காவிரியிலிருந்து பிரிந்து செல்லும் கல்லணைக் கால்வாயைக் கொல்லும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

திருச்சி மாவட்டம் கல்லணையிலிருந்து ஆலக்குடி வரை கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுவருகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கல்லணை கால்வாயின் கடைமடைப் பகுதி வரை தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

கிளியூர் அருகே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டபோது உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எதிர்ப்பை மீறி இப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

முதலாவதாகக் கால்வாயின் கரையிலிருந்த பெரும் மரங்கள் வெட்டப்பட்டன. அடுத்தபடியாக, தண்ணீர் பாயும் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பது ஆற்றையும் வாய்க்காலையும் முற்றிலும் புரிந்துகொள்ளாத முயற்சி. கான்கிரீட் தளம் அமைப்பதால், கால்வாய் பாயும் பகுதி முழுக்க நிலத்தடி நீர்வளம் கடுமையாகப் பாதிக்கப்படும். பொதுவாக ஆற்றில் வாழும் மீன்கள் தரைப்பகுதியில்தான் முட்டையிடும். கான்கிரீட் தரையில் மீன்கள் முட்டையிட முடியாது. அதேபோல் கால்வாயில் நீர்த்தாவரங்கள், கரையோரத் தாவரங்கள் செழித்து வளரும். அதற்கும் இனி வாய்ப்பில்லை. மீனும் பூச்சிகளும் வாழாத தண்ணீரைச் சார்ந்து பறவைகளோ, வேறு உயிரினங்களோ வாழ முடியாது.

கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதே நேரம் 2021இல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகே இந்தப் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாகக் கால்வாய் பாயும் பகுதி விவசாயிகள், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் புகார் மனு அளித்தும்கூட எந்தத் தடையும் இல்லாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடர்ந்துவருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறிய ஆட்சியிலும் இதுபோலத் தொடர்வது உள்ளூர் மக்களின் அதிருப்தியை எதிர்கொண்டுள்ளது. இயற்கை வளத்தையும் நீராதாரத்தையும் பாதுகாக்க ஆறுகளையும் கால்வாயையும் பாதுகாக்க வேண்டும் என்கிற அடிப்படைப் புரிதல்கூட அரசுக்கோ நீர்வளத் துறை அதிகாரிகளுக்கோ இல்லையா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in