

தனித்தனியான அணுக்கள் ஒருநாள் திடீரெனச் சந்திக்கின்றன; கை குலுக்குகின்றன; காதலிக்கின்றன; இறுகக் கட்டித்தழுவி ஓர் உடலாக மாறுகின்றன. உலகில் காணப்படும் உருவங்கள் எல்லாம் இப்படி அணுக்களால் உருவானவையே. நாமும் பல்வேறு வடிவங் களை எடுத்துள்ளோம். கடலுக்குள் மூழ்கிக் கிடந்தோம், காற்றில் பறந்தோம், கூடுகளில் முட்டையிட்டோம், நீரில் நீந்தினோம், சேற்றில் வழுக்கினோம், மண்ணுள் புதைந்திருந்தோம், ஏன் முடியாக-மயிராக இருந்தோம், இப்போது மனிதராகவும் இருக்கிறோம். எல்லாம் அணுமயம்.
இந்த அணுக்கள் ஏதோவொரு கட்டத்தில் சலிப்புற்று, ‘பிரிவோம், சந்திப்போம்’ என விடைபெற்றுத் தனித்தனியே பிரிகின்றன. இதற்கு மரணம் என்று எப்படிப் பெயர் சூட்டுவது? அணுக்கள் பல வடிவங்கள் எடுப்பவை என்னும் அறிவியல் உண்மை அறிவுக்குப் புரிகிறது. ஆனால், மனம் நம்ப மறுக்கிறது. இறப்பதற்கு யாருக்கும் விருப்பம் கிடையாது. நம் மூச்சிலிருந்து உயிர்வளி தொலைந்துவிடவே கூடாது.
பாக்டீரிய வித்தை
சரி, உயிர் என்றால் என்ன? கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் இவற் றோடு சிறிதளவு கால்சியம், அப்புறம் கந்தகம் ஒரு கீற்று சேர்த்து, மருந்துக் கடைகளில் கிடைக்காத வேறு சில எளிய தனிமங்களைக் கொஞ்சமாகக் கலந்து ஒன்றாகக் கலக்கி உருவாக்கப்பட்டதே இந்த உயிர் என்று நகைச்சுவையாகச் சொல்வார் அறிஞர் பில் பிரைசன். உயிர் உடலில் தங்கி இருப்பதன் அடையாளமே ஆக்சிஜன் என்னும் உயிர்வளி. புவிக் கோளில் மட்டுமே உள்ள இந்த உயிர் வளியால்ான் நம் உயிர் மூச்சு நிலைத்திருக் கிறது.
ஆனால், வேடிக்கை என்னவெனில் இன்று செவ்வாய்க் கோளில் இருக்கும் அளவில்கூட அன்று புவியில் உயிர்வளி இருந்திருக்காது. அன்று என்றால் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலம். புவியியல் கணக்கில் அது ‘ஆர்க்கியன் காலகட்டம்’. அப்போது உலகில் உயிரினமே தோன்றியிருக்கவில்லை. ஹைட்ரோ குளோரிக், கந்தக அமிலங்களின் நச்சுக்காற்றால் புவிக்கோளம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலம் அது. புவிக்கோளம் உருவாகி ஏறக்குறைய முதல் 100 கோடி ஆண்டுகளின் ஏதோவொரு கட்டத்தில் ‘சயனோ பாக்டீரியா’ என்கிற நீலப்பச்சைப் பாசி எப்படியோ ஒரு வித்தையைக் கற்றுக்கொண்டது.
‘குடுகுடு... குடுகுடு...!’ நல்ல காலம் பிறந்தது… நல்ல காலம் பிறந்தது…
நீலப்பச்சைப் பாசிகள் நீரின் மூலக்கூறுகளை உறிஞ்சி அதிலுள்ள ஹைட்ரஜனை அருந்தி விட்டு, ஆக்சிஜனைக் கழிவாக வெளியேற்றின. அவ்வாறு செய்ததில் ஒளிச்சேர்க்கையைக் கண்டுபிடித்தன. எனவே, இன்ன நட்சத்திரமும் இன்ன லக்கினமும் கூடியிராத ஏதோவொரு சுபயோகமில்லாத சுபமற்ற தினத்தில் ‘ஆக்சிஜன்’ என்கிற குழந்தை பிறந்தது.
பாக்டீரியா பெற்றெடுத்த அக்குழந்தையைப் பின்னாட்களில் தாவரங்கள் தாலாட்டி வளர்க்க, உலகம் மூச்சுவிடத் தொடங்கியது. இந்த உயிர்வளியை உயிரினங்கள் தம் உயிர்மூச்சாகத் தகவமைத்துக் கொண்டது பெரும் அதிசயமே. ஏனெனில், அடிப்படையில் உயிர்வளி (ஆக்சிஜன்) என்பது ஒரு நச்சுவளி. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதுவே உண்மை.
உயிர்வளி இல்லாத அக்கால உலகில் உயிர்வளி முதலில் அறிமுகமானபோது அதுவொரு நஞ்சாகவே இருந்தது. அதை மெல்ல மெல்ல உயிரினங்கள் தமக்குள் உள்வாங்கிக் கொண்டது ஒரு விந்தையே. அதிலும் நம் உடலின் செல்கள், வளிமண்டலத்தில் உள்ள உயிர்வளியின் அளவில் பத்திலொரு பங்கை மட்டுமே தமக்குள் ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், அதன் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கிவிடவில்லை.
ஓர் எடுத்துக்காட்டைச் சொல்ல வேண்டுமானால், நம் செல்களைத் தாக்க வரும் பாக்டீரியாவைக் கொல்ல நம் குருதியின் வெள்ளை அணுக்கள் நச்சு ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்துகின்றன. அந்த ஆயுதம் வேறு எதுவுமல்ல, ‘ஆக்சிஜன்’தான்.
வளிமண்டல உயிர்வளியின் அளவு 20.95%. இந்த அளவுதான் நாம் உயிர்வாழ மிகவும் பாதுகாப்பானது. இது குறைந்தாலும் சிக்கல்தான் கூடினாலும் சிக்கல்தான். நெருப்புப் பற்றிக்கொள்ளக் காற்றில் குறைந்தது 12 சதவீதம் உயிர்வளி வேண்டும். இந்த அளவுக்கும் கீழே குறைந்தால் நம்மால் சமைக்க முடியாது. அல்லது உயிரினங்கள் இன்னும் சற்றுத் தாராளமாக மூச்சுவிட்டுக் கொள்ளட்டுமே என்று இயற்கை, இதன் அளவை ஒரு 4 சதவீதத்துக்கு உயர்த்தி 25 சதவீதம் என்று ஆக்கினால் என்னவாகும்?
பிரிட்டன் வளிமண்டல அறிஞர் ஆண்ட்ரூ வாட்சனின் ஆய்வு முடிவுகள் சொல்வது போல, மரங்கள் வளர்ந்து காடுகள் உருவாக முடியாது. அவை பாதி வளர்ந்த நிலையிலேயே, அந்த அளவிலான உயிர்வளியால் ஏற்படும் நெருப்பு அவற்றை அழித்துவிடும். எப்படியென்றால், ஒரு சிறிய மின்னலால் ஏற்படும் காட்டுத் தீ எரியக்கூடிய பொருட்கள் அனைத்தையும் எரித்து முடித்துவிடும். அவ்வளவு ஏன், ஈரமான காய்கறிகளும்கூடத் தீப்பற்றி எரிந்துவிடும் என்கிறார் சூழலியல் அறிஞர் ஜேம்ஸ் லவ்லாக்.
இயற்கையின் கருணை இப்போது புரிகிறதா?
(அடுத்த வாரம்: இயற்கை கணினி)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com