பறவைகளின் சொர்க்கம் சென்னை!

பறவைகளின் சொர்க்கம் சென்னை!
Updated on
3 min read

பறவைகளின் மேல் எனக்குத் தீவிர ஆர்வம் ஏற்பட்டது 2015 ஜனவரி மாதத்திலிருந்துதான். அதற்கு முன் பறவைகளைப் பற்றியும், அவற்றின் பண்பு களைப் பற்றியும் கதைகள், பாடநூல்கள் வழியாக ஓரளவு அறிந்திருந்தேன். பறவை களைப் பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகு அவற்றின் மீதான ஆர்வமும் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன.

அடிப்படையில் நான் இயற்பியல் விஞ்ஞானி. அதனால், ஒரு பறவையை ரசித்து அதன் அழகை ஒளிப்படம் எடுத்துச் செல்வதுடன், அதன் அலகு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது, அது ஏன் இப்படி வாலை ஆட்டுகிறது, எப்படி அது குறிப்பிட்ட வாழிடத்துக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழ்கிறது என்பது போன்ற பற்பல கேள்விகள் என்னுள் எழும்.

அவற்றுக்கு விடை தேடி வலைத் தளத்திலும், சாலிம் அலியின் கையேடுகளி லும் படித்தறியும்போது ஏற்படும் புரிதல் பல முறை வியப்பைத் தந்துள்ளது. இந்தத் தகவல்களை மற்றவர்களுக்குச் சொல்லும்போது, அவர்கள் மனதிலும் அது நன்றாகப் பதிவாகிறது. என்னுடைய மகன் ஆறுவயதாக இருந்தபோது அக்கா குயில் (Common hawk cuckoo) எழுப்பும் ஒலியை ஒரு முறை கேட்க வாய்ப்புக் கிடைத்தது. இப்பறவைக்கு ஆங்கிலத்தில் Brainfever bird எனும் பெயரும் உண்டு. அவை கூவுவது brainfever.... brainfever என்று ஒலிப்பதுபோல இருப்பதாக எண்ணி ஆங்கிலேயர்கள் இப்பெயரிட்டனர். இதை என் மகனிடம் சொன்னேன். இன்றுவரை அப்பறவையையும், அதன் ஒலியையும் அவன் மறக்கவே இல்லை!

எழுப்பிவிடும் பறவைகள்

பறவை நோக்குதலையும், பறவைகளை ஒளிப்படம் எடுப்பதையும் ஒரு பொழுது போக்காகத் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது என் வாழ்வின் ஓர் அங்க மாகவே அது மாறிவிட்டது. வார நாட்களில் காலை 5.30 மணிக்கு எழுந்தால், வார இறுதியில் அதிகாலை 3.00 அல்லது 4.00 நான்கு மணிக்கு எழுந்து பறவைகளைப் படம் எடுக்கச் செல்லும்போது, என்னை நினைத்து நானே வியந்து போகிறேன். ஏனென்றால், நான் ஒரு தூக்கப் பிரியை! இந்த மன மாற்றத்துக்கு முழு காரணம் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஏரிக் கரையிலோ காடுகளிலோ நான் அனுபவிக்கப்போகும் அமைதியான நேரம்தான்! அதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது, அனுபவித்தே அறிய வேண்டும். அமைதியாக இருக்கும் ஓரிடம் ஒரு சில விநாடிகளில் உயிர்பெற்று எல்லாத் திசைகளிலும் பறவைகளின் ஒலிகளும், பூச்சிகளின் ரீங்காரங்களும் கேட்க ஆரம்பிக்கும். அந்த வேளையில் மனதில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும்! எனக்குள் இருந்த மன அழுத்தத்தை இந்த அமைதியான நேரமும் பறவைகளின் ஒலியும் பல முறை போக்கியுள்ளன!

பிடித்த சென்னைப் பகுதிகள்

நான் சென்னைவாசி. சென்னை மாநகரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பறவை வகைகளைப் பார்க்கலாம்! இது எத்தனை பேருக்குத் தெரியும்? மாநகரத்தில்கூட இத்தனை பறவை வகைகள் வாழுமா என்று நமக்குத் தோன்றலாம்! ஒவ்வொரு பறவைக்கும் குறிப்பிட்ட வாழிடம் உண்டு! முட்புதர்க் காடுகள், மரங்கள் அடர்ந்த வனப்பகுதிகள், கழிமுகம், சதுப்புநிலங்கள் என்று பல்வேறு வாழிடங்கள் சென்னையிலே உள்ளன. ஆகவே, பல பறவை வகைகளை இங்கே காண முடிகிறது. இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த இடம் சென்னை ஐஐடி வளாகம்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் - அது நான் படித்த கல்லூரி. நான் முதன் முதலில் பறவைகளைப் பார்த்து, ஒளிப்படம் எடுக்கத் தொடங்கிய இடம் அது. அது என் பிறந்து வீடு போன்றது. இரண்டாவது பல்வேறு வாழிடங்களான முட்புதர் காடு, சதுப்புநிலம், மரங்கள் அடர்ந்த பகுதிகள் இந்த வளாகத்தில் உண்டு. இதனால் உள்ளூர் பறவைகளையும், வலசைப் பறவைகளையும் காணலாம்.

எனக்குப் பிடித்த இன்னொரு இடம் பிரம்மஞான சபை (தியசாபிகல் சொசைட்டி). இதுவும் ஐஐடி போல் பல வகை வாழிடங்களை கொண்டது. மூன்றாவதாக அடையாறு, வங்காள விரிகுடாவுடன் சேரும் அடையாறு கழிமுகம். இது பல நீர்ப்பறவைகளுக்கும் வலசை வரும் உள்ளான்களுக்கும் உப்புக்கொத்திகளுக்கும் ஏற்ற இடம்.

கடல் பறவைகள்

சென்னை மாநகருக்குள் பல வகையான பறவைகளைக் காண முடிவதுபோல சென்னையை ஒட்டிய கடற்கரையிலும், கடல்பகுதிகளிலும்கூடப் பல வகை பறவைகளைக் காணலாம்.

கடலில் மரமும் இல்லை கொடியும் இல்லை பறவைகள் எப்படி வாழ்கின்றன? பொதுவாகக் கடலோரப் பகுதிகளிலும், நீர்நிலைகளிலும் ஆலாக்களையும் கடல்காகங்களையும் காணலாம். இவை மீன்களை உண்ணும். ஆனால், சில ஆலாக்கள் கடற்கரை ஓரமே வருவதில்லை! ஆழ்கடலிலும், கரையிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவிலும்தான் காணப்படும். இவற்றோடு Shearwater, Skua, Frigate birds போன்று பல வகைக் கடல் பறவைகளையும் காணலாம். இவை இனப்பெருக்கம் செய்வது கடலில் உள்ள குட்டித் தீவுகளில். குஞ்சு பொரித்து, வளர்ந்தவுடன் மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்றுவிடுகின்றன. இவற்றை ஆழ்கடல் பறவைகள் (Pelagic birds) என்பர். இவற்றை எப்படிப் பார்ப்பது? இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நாம் அதன் இடத்துக்குச் செல்ல வேண்டும். மற்றொன்று அது நம் இடத்துக்கு வர வேண்டும்.

சென்னை கடலோரத்தில் இருப்பதால் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும். அதில் சில வலுப்பெற்றுச் சூறாவளியாகவும் மாறுவது உண்டு. அந்தச் சூறாவளிக் காற்று கரையைக் கடக்கும்போது அதனுடன் பறவைகளையும் இழுத்துக்கொண்டு நிலப்பகுதிக்கு வரும். அந்த வேளையில் நல்வாய்ப்பு இருந்தால் நம் வீட்டு மொட்டை மாடியிலேயே அவற்றைக் காணலாம். இவ்வாறே வர்தா, நிவர் புயல்களின்போது பல ஆழ்கடல் பறவைகளை வீட்டிலிருந்தே பார்க்க முடிந்தது.

தொற்றிய ஆர்வம்

தேவையானவர்களுக்கு நான் எடுக்கும் பறவை ஒளிப்படங்களை இலவசமாகப் பகிர்வதால், அந்தப் படங்கள் பல களக் கையேடுகளில் பதிவாகியுள்ளன. மேலும் eBird, சமூக வலைத்தளங்களிலும் படங்களைப் பகிர்கிறேன். அவற்றை நண்பர்களும் உறவினர்களும் பார்ப்பதால், அவர்களிடையேயும் பறவைகள் குறித்த புரிதல், தாக்கம், ஆர்வம் ஏற்படுகின்றன. இது நாள்வரை காகம், மைனா, புறா, கிளி போன்ற பறவைகள்தான் சென்னையில் வாழ்கின்றன என்று எண்ணிய அவர்களுக்கு, சென்னையில் நூற்றுக்கணக்கான பறவைகள் வாழ்வது தெரியவந்தது. அவர்களும் பறவைகளை நோக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் தோட்டத்திலும் வீட்டருகில் உள்ள மரங்களிலும் இதுநாள் வரை கவனித்திராத தேன்சிட்டு போன்ற சிறிய பறவைகள்கூட, இப்போது அவர்கள் கண்களில் படுகின்றன. சிலர் செல்போனில் படம் எடுத்து அது என்ன பறவை, அதன் தன்மை என்ன என்று என்னிடம் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவ்வேளைகளில் ஒரு பறவை ஆர்வலராக நான் வெற்றி அடைந்ததைப்போல் உணர்கிறேன்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: ramaneelamegam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in