

மழைக்காடுகளில் இயற்கையாகக் கீழே விழும் பெரிய மரங்கள், பலவித உயிரினங்களுக்கு உணவாகின்றன. பூஞ்சைகள், கறையான்கள், மரவட்டைகள், பலவிதமான பூச்சிகள் யாவும் அம்மரத்தை மட்கச் செய்வதால் அதிலுள்ள கனிம ஊட்டச்சத்துக்கள் மண்ணில் கலக்கிறது. குறைந்த வெளிச்சத்தில் வாழ்வதற்கு தம்மைத் தகவமைத்துக்கொண்ட பல தாவரங்கள் இப்பகுதியைச் சுற்றி வளருகின்றன.
காளான்கள்
நுண்ணிய வித்துக்களைக் கொண்ட இந்த காளான்களை பொதுவாக மரக்கட்டைகளில் வளர்ந்திருப்பதைக் காணலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இருக்கும் இவற்றில் சில வகைகள் இரவில் ஒளிரும் தன்மையுடையவை.
சிறு ஊனுண்ணிகளின் எச்சம்
மரநாய், புனுகு பூனை போன்ற சிறிய ஊனுண்ணிகள் மழைக்காட்டில் உள்ள பல வகையான மரங்களின் பழங்களை உண்டு, சாய்ந்த மரக்கிளைகளிலும், பாறைகளிலும் எச்சமிடும். இதனால் அம்மரங்களின் விதைகளைப் பரப்புவதற்கு அவை உதவி புரிகின்றன.
புலி வண்டு
பெரிய உருண்டையான கண்களும், நீண்ட மெல்லிய கால்களும், கூரான உறுதியான கிடுக்கி போன்ற கீழ்தாடையும் கொண்ட புலி வண்டு பூச்சிகள் உலகில் ஒரு கம்பீரமான இரைக்கொல்லியாகும். இவற்றிற்கு இரையாகும் பிற பூச்சிகளை வேகமாக ஓடியும், பறந்தும் பிடிக்கக் கூடிய திறன் படைத்தவை.
மரவட்டை
மரவட்டையின் (அல்லது மர அட்டை) ஒவ்வொரு கண்டத்திலும் இரண்டு சோடி கால்கள் இருக்கும். இவை அழுகும் இலைகளையும், தாவரங்களையும் உட்கொண்டு அவற்றை மட்கி மண்ணில் சேர உதவுகின்றன.
வேருச்செடி
இலைகள் இல்லாத ஒரு வகை ஒட்டுண்ணிச் செடி. மழைக்காட்டு மரங்களின் வேரிலிருந்து உணவை உறிஞ்சி வளரும். சிவப்பு பந்து போன்ற உருவில் உள்ள பூத்திரளில் முழுவதும் சிறிய பெண் மலர்களும், அடிப்பகுதியில் ஒரு சில ஆண் மலர்களும் இருக்கும்.
காகிதக் குளவிகள்
காகிதக் குளவிகள் மர நார்களை மென்று எடுத்து பெரிய கூடுகளைக் கட்டி கூட்டமாகச் சேர்ந்து வாழும். ஒவ்வொரு கூட்டமும் ஒரு இராணிக் குளவியால் ஒன்று சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. பானை வடிவ கூட்டை அது கட்டி அதில் வேலைக்கார குளவிகளை உணவிட்டு வளர்க்கிறது.
பெகோனியா
இந்த வண்ணமயமான தாவரம் மழைக்காட்டின் தரையிலும், சாலையோரங்களிலும் வளர்ந்திருக்கும். இதன் பெரிய இலைகள் ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்டு அடிப்பகுதியில் சிவப்பு நிறமிகளைக் கொண்டிருக்கும். வெள்ளை, இளஞ்சிவப்பு நிற மலர்களில் புற இதழ்கள் இல்லாமல் இதழ்களை மட்டுமே கொண்டிருக்கும்.
காட்டுக் காசித்தும்பை
காட்டுக் காசித்தும்பை செடிகள் மழைக்காட்டின் தரைப்பகுதிகளிலும், ஓடையோரங்களிலும் வளர்ந்திருக்கும். இதனாலேயே இதன் ஆங்கிலப் பெயர் Impatiens (அதாவது பொறுமையில்லாத) எனப்படுகிறது. இவை பொதுவாக மழைக்காலங்களில் பூத்துக்குலுங்கும். இதன் முதிர்ந்த விதைப்பையின் மேல் நீர் பட்டவுடன் வெடித்து, உள்ளிருக்கும் விதைகளை அதிவேகத்துடன் தூரமாகச் சிதறடிக்கும்.
பெரிய சிவப்பு நத்தை
நத்தைகள் இலைச்சருகுகளையும், பழங்களையும், மரப்பட்டைகளையும் உண்ணும். எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதைத் தவிர்க்கவும் இவை தமது ஓட்டுக்குள் சென்றுவிடும். பொதுவாகச் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பெரிய நத்தை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் உள்ள காடுகளில் தென்படும்.
காட்டுச்சிவப்பன்
தட்டான்கள் பூச்சிகளின் உலகின் மிகத்திறமையான இரைக்கொல்லிகள். கூட்டுக்கண்களும், உடலுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்ட, அதே வேளையில் மெல்லிய எடை குறைந்த இரண்டு சோடி இறக்கைகளும் இவை காற்றில் பறந்து பூச்சிகளைப் பிடிக்க உதவுகின்றன. இவை நீரில் முட்டையிடும். இவற்றின் தோற்றுவளரிகள் நீருக்குள் பல நாட்கள் இருந்து கொசுவின் முட்டை, சிறிய தலைப்பிரட்டை, மீன் குஞ்சு போன்றவற்றை பிடித்துண்ணும்.
ஓடை மரகதம் (பெண்)
ஊசித்தட்டான்களின் உடல் தட்டான்களைக் காட்டிலும் மிகவும் மெல்லியவை. இவை பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயே இருக்கும். இவற்றின் வாழிடம் மாசடைந்தாலோ, சீரழிந்தாலோ அவை அங்கே அற்றுப்போகின்றன.
பெரிய மயில் அழகி
காண்போரை வியக்கவைக்கும் பெரிய மயில் அழகி (Papilio paris) போன்ற பல வகையான வண்ணத்துப்பூச்சிகள், மழைக்காட்டின் தரையில் இருக்கும் விலங்குகளின் எச்சங்கள், மண், பாறையிலிருந்து வடியும் தண்ணீர் போன்றவற்றில் உள்ள உப்பையும், கனிமச் சத்தையும் உறிஞ்சிக் குடிக்கத் தரைக்கு வரும்.
சேம்பு வகை தாவரம்
பெரிய இலைகளைக் கொண்ட அரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சேம்பு வகைத் தாவரங்கள் காட்டின் தரைப்பகுதிகளில் வளரும். நாம் உண்ணும் கரனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவை இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.
மூங்கில் ஆர்கிடு
ஆர்கிடுகள் தரையிலும், மரக்கிளைகளின் மேல் தொற்றிக்கொண்டும் வளரும்.
கட்டுரையாளர்கள்: திவ்யா முத்தப்பா & T. R. ஷங்கர் ராமன்
தமிழில்: ப. ஜெகநாதன்
கூடுதல் தகவல்களுக்கு:
https://www.ncf-india.org/western-ghats
https://tinyurl.com/45zwzk5c