போருக்குப் பலிகொடுக்கப்படும் இயற்கையும் பல்லுயிர்களும்

போருக்குப் பலிகொடுக்கப்படும் இயற்கையும் பல்லுயிர்களும்
Updated on
3 min read

உக்ரைன் - ரஷ்யா போரால் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பின் பேரோசையைக் கேட்டு மனிதர்களுடன் சேர்ந்து விலங்குகளும் நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 99 ஏக்கர் பரப்பளவில், 378 பணியாளர்கள், வருடத்திற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பார்வையாளர்களுடன் செயல்பட்டு வந்த ‘கீவ் நகர் உயிரியல் பூங்கா’ ரஷ்யப் படைகளின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ளது. 1909ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்காவில், 200 இனங்களைச் சேர்ந்த 4,000 விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

உக்கிரமாகப் போர் நடக்கும் இந்நிலையிலும் பூங்காவை விட்டு 50 பணியாளர் குடும்பங்கள் வெளியேறாமல், அங்கேயே தங்கி விலங்குகளைப் பராமரித்துவருகின்றனர். பெரும்பாலான சிறிய விலங்குகளைப் பூமிக்கடியிலுள்ள பாதுகாப்பான பதுங்குமிடங்களில் பாதுகாத்து வைத்துள்ளனர். ஆனால் யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற பெரிய விலங்குகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது. குண்டுகளின் பேரோசையினால் மிரட்சியிலுள்ள அப்பேருயிர்களை அமைதிப்படுத்த மயக்க மருந்து மட்டுமே தீர்வு என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

கீவ் உயிரியல் பூங்காவிலிருந்து, சில விலங்குகள் போலந்து நாட்டின் போஸ்னன் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன. அனைத்து விலங்குகளையும் அவ்வாறு அகதிகளாக வேறிடத்துக்கு மாற்றுவது இயலாத காரியம். 5,000க்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாக்கப்பட்டுவந்த உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள ஃபெல்ட்மேன் சூழலியல் பூங்காவின் மிக அருகிலேயே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அதனால், அங்குள்ள விலங்குகளின் நிலையும் கேள்விக்குறியாகவே உள்ளது. பல இடங்களில் மின்சாரம், உணவு, தண்ணீர் அனைத்தும் தடைபட்டுவிட்ட நிலையில், போரினால் அழியாவிட்டாலும் பட்டினியால் அங்குள்ள விலங்குகள் அழிந்துவிடும்.

அழிவுக்குத் தள்ளப்படும் விலங்குகள்

இதற்கு முன்னரும் போரினால் பல உயிரியல் பூங்காக்கள் அழிந்துள்ளன. ஈராக் போரின்போது அங்குள்ள விலங்கியல் பூங்கா போர்க்களமாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்த 700 விலங்குகளில் போர் முடிந்த பின்னர் எஞ்சியவை 35 மட்டுமே. அதே போன்று வளைகுடா போரின்போது குவைத் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட 80 சதவீத விலங்குகள் பட்டினியால் மடிந்தன.

முதலாம் உலகப் போரின்போது குதிரைகள், கோவேறுக் கழுதைகள், நாய்கள் என 90 லட்சம் விலங்குகள் இறந்துள்ளன. பிரிட்டனில் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, 7 லட்சத்து 50 ஆயிரம் வீட்டு விலங்குகள் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டன.

ஆப்பிரிக்காவின் 90 சதவீத வனவிலங்குகள் அழிந்தது, அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போர்களினால்தான். 1983 முதல் 2005 வரை சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், அங்கு ஒரு லட்சம் எண்ணிக்கையிலிருந்த யானைகள், தற்போது 5,000 என்கிற அளவில் சுருங்கிவிட்டன. இதைப் போன்றே ஈரான் - ஈராக் போரும் அங்கு வாழ்ந்த காட்டு ஆடுகள், ஓநாய்கள், நீர்நாய்கள், ஓங்கில்கள் உள்ளிட்ட பல விலங்குகளை அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டது.

போரில் அகதியாக மாறிய மக்கள் உணவுக்காக வேட்டையாடுவதும், ராணுவ வீரர்களால் வேட்டையாடப்படுவதும் காட்டு விலங்குகள் அழிவதற்கான முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் இதன் தொடர்ச்சியாகக் காட்டிறைச்சி கலாச்சாரம் அக்கண்டம் முழுவதும் பரவிவிட்டது. வனவிலங்குகளை உண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத் துடன் செல்வதற்கும் வழிவகுத்து. இந்தப் போக்கு அங்குள்ள வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது.

போரால் அழியும் காடுகள்

முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மஸ்டர்ட் வாயு குண்டால் ஏற்பட்ட மண் மாசுபாடு, இன்று வரை பல இடங்களில் நீங்கவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது வியன்னா, டோக்கியோ, ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களிலுள்ள மரங்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்தன. அவற்றை மீட்டுரு வாக்கம் செய்யும் முயற்சிகளில் அந்நகரங்கள் பல ஆண்டுகளுக்கு ஈடுபட வேண்டியதாயிற்று.

வியட்நாம் போரின்போது கிட்டத்தட்ட 76 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள விளைநிலங்கள், காடுகளின் மீது அமெரிக்க ராணுவம் ‘ஏஜென்ட் ஆரஞ்சு’ என்கிற களைக்கொல்லியைத் தெளித்து அழித்தது. இன்று வரையிலும் அக்காடுகளை மறு உருவாக்கம் செய்ய வியட்நாம் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இதன் தாக்கம் அங்குள்ள உயிரினப் பன்மையில் இப்போதும் எதிரொலிக்கத்தான் செய்கிறது. 165 வகையான பறவையினங்களும், 50 வகையான விலங்கினங்களும், முற்றிலும் அற்றுப்போய்விட்டதாக வியட்நாமியச் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

போர்களும் காலநிலை மாற்றமும்

ராணுவ நடவடிக்கைகளுக்கு மிக அதிக அளவு எரிபொருள் தேவை. ஒரு ஜெட் விமானம் ஒரு மைல் தொலைவு பறப்பதற்குக் கிட்டத்தட்ட 18 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மொத்த புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் 80 சதவீதத்தை உபயோகிப்பது அமெரிக்க ராணுவம்தான். ஒரு நாளைக்கு 4 கோடியே 80 லட்சம் லிட்டர் புதைபடிவ எரிபொருளை அமெரிக்க ராணுவம் செலவழிக்கிறது. சிறிய நாடுகள் வெளியேற்றும் மொத்த கார்பன் டை ஆக்சைடு அளவைவிட வல்லரசு நாடுகளின் ராணுவம் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகம்.

ராணுவ வாகனங்கள் பசுங்குடில் வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடை மிக அதிக அளவில் வெளியேற்றக் கூடியவை. இதன் காரணமாகப் புவி வெப்பமாதலின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.

வளைகுடா போரின்போது ஈராக் ராணுவப் படையினரால் தீ வைக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளியேறிய கார்பன் டை ஆக்சைடின் அளவு 13 முதல் 14 கோடி டன். அங்கே எழுந்த புகை மூட்டத்தால் வளைகுடா நாடுகளின் வெப்பநிலை 10 டிகிரி அளவுக்குக் குறைந்தது. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய காற்று மாசுபாடாக இது கருதப்படுகிறது. அப்போரின்போது அமெரிக்க ராணுவத்தின் ஒருநாள் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு 1.5 கோடி கேலன். அத்துடன் 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.

பரிதாப விலங்குகள்

மனிதர்களைவிட மிகவும் நுட்பமான உணர்திறன் கொண்ட விலங்குகளால் போரின் பேரோசையைத் தாங்க இயலாது என்பதே உண்மை. இதுவரை நடந்த போர்களால், கடந்த நூற்றாண்டில் மட்டும் 107 உயிரின வகைகள் அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்துக்கொத்தாக மனிதர்கள் மடிந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் விலங்குகளைப் பற்றி பெரிதாகக் கவனம் திரும்பாது என்பதே நிதர்சனம். இங்கு மனிதர்கள் காரணம் தெரிந்து மடிகிறார்கள், விலங்குகள் காரணம் தெரியாமலே மடிகின்றன. ஒவ்வொரு போரும் மாறாத வடுவைத் தந்துவிட்டுத்தான் செல்கிறது. காரணம் என்னவாக இருப்பினும் இப்புவியின் பேரழகையும், உயிர்களையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கும் போர்கள் நமக்குத் தேவையில்லை!

கட்டுரையாளர், விலங்கியலாளர்

தொடர்புக்கு: vanathi.vana@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in