

‘கனலி’ இணையதளம் சார்பில் ‘சூழலியல்-காலநிலை’ சார்ந்த கட்டுரைகளை ‘பூமி இழந்திடேல்’என்கிற தலைப்பில் சு. அருண் பிரசாத் புத்தகமாகத் தொகுத்துள்ளார். புவியின் மீது உண்மையான அக்கறையுடன், அதைக் காக்கும் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நாராயணி சுப்ரமணியன், த.வி. வெங்கடேஸ்வரன், ராஜன் குறை, ஆதிரன், கணேஷ் வெங்கட்ராமன், சுபஸ்ரீ சுந்தரம், வறீதையா கான்ஸ்தந்தின், தங்க ஜெயராமன், ரஞ்சித் குமார், பாலசுப்ரமணியன் பொன்ராஜ், இ. ஹேமபிரபா, கார்த்திக் வேலு உள்ளிட்டோர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் உடனான நேர்காணல், கிரெட்டா துன்பர்க் உரை உள்பட முக்கியமான மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நேர்காணல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மனிதர்களின் சுயநலத்தால் உருவான சூழலியல் -காலநிலை மாற்றம் மனித குலத்தையும் புவியையும் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது. அது சார்ந்த விரிவானதொரு சித்திரத்தை இந்த நூல் தருகிறது. நிதியுதவி பெறுவதை நோக்கமாகக் கொண்டு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், எந்தப் பின்புலமும் இல்லாமல் ஓர் இணைய இதழ் சார்பில் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற காத்திரமான, விரிவான முயற்சிகள் வெளிவரத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
பூமி இழந்திடேல், சூழலியல் - காலநிலைக் கட்டுரைகள், தொகுப்பு: சு. அருண் பிரசாத், கனலி, தொடர்புக்கு: 9080043026