Published : 30 Apr 2016 12:23 PM
Last Updated : 30 Apr 2016 12:23 PM

கிழக்கில் விரியும் கிளைகள் 28: நிலங்களை மீட்கும் மரம்

பலாசத்தின் மருத்துவப் பயன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அரைத்த இலை விழுது முகப் பருக்கள், மூலம், புண், வீக்கங்களை நீக்குவதோடு, காம உணர்வு தூண்டியாகவும் செயல்படுகிறது. மரப்பட்டையின் காய்ச்சிய வடிநீர் தொண்டை அடைப்பு, இருமல், சளியைப் போக்கும். மேலும் பட்டையின் அரைத்த விழுது வீக்கம், மூலம், ஆழ்புண்கள் போன்றவற்றைப் போக்கும்.

தாவரத்தின் கோந்து/பிசின் வயிற்றுப் போக்கு, சீதபேதி போன்றவற்றை நீக்குவதோடு, காமஉணர்வுத் தூண்டியாகவும் செயல்படுகிறது. இது காயங்கள், வெட்டுகள் போன்றவற்றையும் நீக்குகிறது. பூக்கள் சிறுநீர்ப்பெருக்கியாகவும், வயிற்றுவலி நீக்கியாகவும், சிறுநீர்க் கல் அகற்றியாகவும் செயல்படுகின்றன. வேர்கள் கொப்புளங்களை நீக்குகின்றன. கண் கோளாறுகளை அகற்றுகின்றன. யானைக் கால் நோயைக் கட்டுப்படுத்துகின்றன. விதைகள் விந்து உற்பத்தியைப் பெருக்குகின்றன. எலுமிச்சைச் சாற்றுடன் வறுக்கப்பட்ட விதைகள் அரிப்பு, சொறி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. பலாசத்தின் பெரும்பாலான மருத்துவப் பயன்கள் பழங்குடி மக்களால் கண்டறியப்பட்டு வழக்கில் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற சூழல் பயன்பாடுகள்

பலாசம் நீண்ட காலமாகவே இயற்கையோடு ஒன்றிய ஒரு பயன்பாட்டு தாவரமாக இருந்துவந்துள்ளது. வங்கம், மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், கிழக்கு மகாராஷ்டிரம் (விதர்பா), ஒடிஷா, தமிழ்நாடு பழங்குடி மக்கள் இயற்கை சூழலோடு தொடர்புடைய வாழ்க்கை முறைக்குப் பலாசத்தைப் பயன்படுத்திவந்துள்ளனர். பழங்குடி மக்களின் கிராம எல்லைகளைக் குறிக்க இந்த மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இளம் இலைகளைக் கால்நடைகளுக்குக் கொடுத்துவந்தனர். இந்த மரத்தின் இலைகள் ஒன்றுசேர்க்கப்பட்டுச் சாப்பாட்டு இலைகளாகவும் தொன்னைகளாகவும் மாற்றப்பட்டன. இலைகள் பீடி சுருட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாந்தால் பழங்குடி மக்கள் தம்முடைய குழந்தைகளைக் குளிர், வெப்பத்திலிருந்து காப்பாற்ற இதன் இலைகளைக் கொண்டு உடலைச் சுற்றி மூடியுள்ளனர். இதன் வேர்களைக் கயிறுகளாகப் பயன்படுத்தினார்கள். மரக்கட்டையிலிருந்து அடுப்புக்கரி தயாரித்தனர். பூக்களைக் கறையான் தடுப்புப் பொருளாகப் பயன்படுத்தினர். பூவிலிருந்து பெறப்பட்ட இளஞ்சிவப்பு சாயத்தைத் துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படுத்தியுள்ளனர், குறிப்பாகப் புத்தத் துறவிகள்.

இலையின் சாயப் பொருள் பாரம்பரிய ஹோலி சாயமாகவும் பயன்படுத்தப்பட்டது. விதை எண்ணெய் துணி சோப்பு தயாரிக்கவும், பூச்சி எதிர்ப்புப் பொருளாகவும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டது. விதை புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டது.

சூழல் சுட்டித் தாவரம்

பலாசம் சூழல் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியப் பங்களிப்பு உவர் நிலங்களை மறுமீட்பு செய்ய உதவுவதுதான். இந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்யும் சில மரங்களில் இது மிக முக்கியமானது. பலாச மரங்கள் மிகவும் அதிகமாக ஒரு காலத்தில் காணப்பட்ட தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில், தற்போது மிக அரிதாகவே காணப்படுகிறது. இந்தப் பகுதியின் உவர் நிலங்களை மறுமீட்பு செய்ய (குறிப்பாக இறால் வளர்ப்பு, உப்பு உற்பத்திப் பகுதிகளுக்கு) இவை மிகவும் பொருத்தமானவை என்பதால், இவற்றை அதிகமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

பலாச மரத்தின் மற்றொரு முக்கியப் பண்பு, அது ஒரு சூழல் சுட்டித் தாவரமாகச் செயல்படும் என்பதுதான். இது இலந்தை மரத்துடன் சேர்ந்து காணப்படும் இடங்களில் நல்ல நிலத்தடி நீர் குறைந்த ஆழத்திலேயே கிடைக்கும் என்றும், இது மிகவும் நன்றாக வளரும் பகுதிகளில் சிறுதானியங்களின் வளர்ச்சியும் நன்கு இருக்கும் என்றும் பிரகத்சம்ஹிதா என்ற பழைய வடமொழி நூல் குறிப்பிடுகிறது.

குளிர்ச்சி தரும்

வளிமண்டலக் கந்தக டை ஆக்ஸைடின் அளவையும் அமில மழையின் தன்மையையும் எளிதில் சுட்டும் தாவரமாகவும் இது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வளிமண்டலத் துகள் மாசுறுத்திகளை (Particulate matter) சிறப்பாக வடிகட்டவும் செய்கிறது. பவளமல்லி தாவரத்தைப் போன்றே, மண்ணில் விழக்கூடிய ஏறத்தாழ 75 சதவீதம் துகள்களை இதுவும் வடிகட்டித் தன்னிடம் தக்கவைத்துக்கொள்கிறது.

பலாச மரத்தின் நிழல் அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஏனெனில், இந்த மரம் ஒரு நாளைக்கு 10-15 லிட்டர் நீரை நீராவிப்போக்கு மூலம் வெளிவிடுகிறது. மேற்கூறப்பட்ட காரணங்களால் பலாசம் உடனடியாக அதிக அளவில் வளர்க்கப்பட்டுப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தாவரமாகிறது. இதற்கான முயற்சிகளை அரசும், மக்களும், இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களும் உடனடியாக எடுக்க வேண்டும்.

( அடுத்த வாரம்: கருவிளம் எனப்படும் விளாமரம்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x