ஃபுகுஷிமாவில் இயற்கை விவசாயம்: சாதித்துக் காட்டிய மிசோ சுகேனோ

ஃபுகுஷிமாவில் இயற்கை விவசாயம்: சாதித்துக் காட்டிய மிசோ சுகேனோ
Updated on
3 min read

ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுகுஷிமாவில், சுனாமி காரணமாக அணு உலை விபத்து நிகழ்ந்து சரியாக ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனாலும், அங்குக் கதிரியக்க ஆபத்து குறைந்தபாடில்லை. கதிரியக்க அளவை ஜப்பான் அரசு அளக்கத் தவறினாலும், அணுஉலைகளுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் அவ்வப்போது அங்கிருக்கும் கதிரியக்கத்தை அளவிட்டு உலகுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள்.

அந்த அளவுகளைப் பார்க்கும் நமக்கு, அந்தப் பகுதிகளில் எல்லாம் மனிதர்கள் வசிக்க முடியுமா என்று சந்தேகம் எழுவது இயல்புதான். ஆனால், அங்குப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் மிசோ சுகேனோ.

அணுஉலை விபத்து நடந்ததன் காரணமாகக் கதிரியக்கம் பரவிய இடங்களில் இயற்கை விவசாயம் செய்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மிசோ சுகேனோ.

நம்பிக்கை விதை

“அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனுதாபப்பட்டு மக்கள் எங்களுடைய பொருட்களை வாங்குவதில்லை. மாறாக, விளைபொருட்கள் தரமாக இருப்பதால்தான் எங்களிடம் வருகிறார்கள்!” என்று சொல்லும் மிசோ, 'நம்பிக்கையின் விதைகள்' (சீட்ஸ் ஆஃப் ஹோப்) என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை விவசாயத்தைப் பிரபலப்படுத்திவருகிறார்.

நொறுங்கிய கனவு

ஃபுகுஷிமா அணு உலை விபத்து நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சமீபத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார் மிசோ. அந்த நிகழ்விலிருந்து...

“நான் நிஹோன்மாட்சூ நகரத்திலிருந்து வருகிறேன். அது ஃபுகுஷிமா அணு உலை விபத்து நடந்த இடத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. வெளியூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நான்கு ஆண்டுகள் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.

எனது தந்தை ஓர் இயற்கை விவசாயி. சுமார் 30 வருடங்களாக, இயற்கை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுவந்தார். அவரால் ஈர்க்கப்பட்டுத்தான் நானும் விவசாயம் செய்வதற்கு வந்தேன். ஏப்ரல் 2010-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இயற்கை விவசாயத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் அடுத்த ஆண்டே நிகழ்ந்த ஃபுகுஷிமா அணுஉலை விபத்து, என் கனவுகளை நொறுக்கியது.

அரசுப் பொய்கள்

அணு உலை விபத்து நிகழ்ந்து சில நாட்கள் ஆன பிறகும், எங்களுடைய நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு வரவில்லை. இனி இங்கு இருந்தால் பிழைக்க முடியாது என்று கருதி நான், உடனடியாக டோக்கியோவுக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கு என் உறவினர்களின் வீட்டில் கொஞ்சக் காலம் தங்கியிருந்தேன்.

ஊடகங்களில் அரசு மிகப்பெரிய பொய்யைச் சொல்லி வந்தது. 'அணு உலை விபத்தால் மக்கள் யாரும் உடனடியான பாதிப்புக்கு ஆளாகவில்லை' என்பதுதான் அந்தப் பொய். ஆனால், என்னுடைய உடலில் ஒரு விதமான மாற்றத்தை உணர ஆரம்பித்திருந்தேன். கதிரியக்கம் என்னுள் சென்றுவிட்டதற்கான அடையாளம்தான் அது.

அரசு அப்படியொரு பொய்யைச் சொன்னது மட்டுமின்றி, ஃபுகுஷிமாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் எதையும் விற்கக் கூடாது என்று தடை உத்தரவும் பிறப்பித்தது. இதன் காரணமாக, பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஊடகங்களில் இந்தச் செய்திகள் வெளியானவுடன் நான் மீண்டும் ஃபுகுஷிமாவுக்குத் திரும்பினேன்.

இயற்கைக்குத் திரும்பினோம்

ஊருக்குத் திரும்பியவுடன் எங்களது தோட்டத்துக்குச் சென்று பார்த்தேன். வேறு சிலரின் வயல்களுக்கும் சென்று பார்த்தேன். அப்போது ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அது, எங்கெல்லாம் ஏற்கெனவே இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வந்ததோ, அங்கெல்லாம் கதிரியக்கப் பாதிப்பு குறைவாக இருந்ததுதான். இதைக் கண்டவுடன், ‘நாம் ஏன் கதிரியக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயற்கை விவசாயத்தை முயற்சித்துப் பார்க்கக் கூடாது?' என்று தோன்றியது.

ஊருக்குத் திரும்பியவுடன் எங்களது தோட்டத்துக்குச் சென்று பார்த்தேன். வேறு சிலரின் வயல்களுக்கும் சென்று பார்த்தேன். அப்போது ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அது, எங்கெல்லாம் ஏற்கெனவே இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வந்ததோ, அங்கெல்லாம் கதிரியக்கப் பாதிப்பு குறைவாக இருந்ததுதான். இதைக் கண்டவுடன், ‘நாம் ஏன் கதிரியக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயற்கை விவசாயத்தை முயற்சித்துப் பார்க்கக் கூடாது?' என்று தோன்றியது.

உடனடியாகக் களத்தில் இறங்கினோம். இயற்கை விவசாயமோ அல்லது ரசாயனம் சார்ந்த விவசாயமோ... எந்த விவசாய முறைக்கும் மண்தான் அடிப்படை. அணு உலை விபத்தால் கதிரியக்கம் வெளிப்பட்டு, அதனால் சுமார் 5 செ.மீ. ஆழத்துக்கு மண் கெட்டியாகிப் போயிருந்தது. அதனால் எளிதாக உழுவதற்கு முடியவில்லை.

எனவே, முதலில் மண்ணை இளகச் செய்வதற்கு, மண்ணில் உள்ள கதிரியக்கத்தை முதலில் நீக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் 2011-ம் ஆண்டு கதிரியக்கம் பரவிய வயல்களில் சூரியகாந்தி விதைகளை நட்டோம். சூரியகாந்தி விதைகளுக்குக் கதிரியக்கத்தை உள்வாங்கிக்கொள்ளும் திறன் உள்ளது.

வயல்களுக்கு அடையாளம்

ஆனால், இப்படி எத்தனை வயல்களுக்கு நடவு செய்ய முடியும்? ஏனென்றால் கதிரியக்கத்தைப் பார்க்கவோ, தொடவோ, முகரவோ அல்லது வேறு வகையில் உணரவோ முடியாது. அப்படியிருக்கும்போது, எந்தெந்த வயல்கள் எல்லாம் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை எப்படி அறிந்துகொள்வது?

அப்போது நிய்காடா பல்கலைக்கழகம் 2012-ம் ஆண்டு வெளியிட்டிருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு நிற அளவுகோல்களை உருவாக்கினோம்.

அதன்படி, மிகவும் அதிகமான அளவுக்குக் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைச் சிவப்பு நிறத்தால் அடையாளப்படுத்தினோம். அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள வயல்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களால் அடையாளப்படுத்தினோம்.

கதிரியக்கம் அகற்ற…

இந்த நேரத்தில் இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் அரிசியைக் கதிரியக்கம் தாக்காமல் இருப்பதற்காக ‘ஸியோலைட்' எனும் ரசாயனத்தைத் தெளிக்கச் சொன்னது அரசு. ஆனால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு 300 கிலோ அளவு ரசாயனத்தைத் தெளிப்பது என்பது மிகவும் சிரமமான செயல். இதனால் முதியவர்கள் பலரும் விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

ஆனால் நாங்கள் அவ்வாறு ரசாயனத்தைத் தெளிக்கவில்லை. மாறாக மாட்டுச் சாணம், சமையல் கழிவு போன்ற இயற்கையாகக் கிடைக்கும் கழிவைப் பதப்படுத்தி, இயற்கை உரமாக்கி அதை மட்டுமே பயன்படுத்தினோம். இதனால் நாங்கள் சாகுபடி செய்த அரிசி நல்ல தரத்துடன் விளைந்தது.

தரத்துக்கு வரவேற்பு

ஒரு கிலோ அரிசியில் 100 பெக்யூரல் அளவுக்குத்தான் கதிரியக்கம் இருக்க வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் நாங்கள் விளைவித்த அரிசியில் ஒரு கிலோவுக்கு 99 பெக்யூரல் அளவுக்கு மட்டுமே கதிரியக்கம் இருந்தது. அதாவது, அரசு நிர்ணயித்த பாதுகாப்பான அளவைவிடவும் குறைவான அளவில்தான் எங்கள் அரிசியில் கதிரியக்கம் இருக்கிறது. இயற்கை விவசாயத்தால்தான் இது சாத்தியமானது.

இவ்வாறு விளைவித்த அரிசியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்குப் பயிற்சி

எங்களுடைய விவசாய முறைகளுக்குக் கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு 2013-ம் ஆண்டு ‘கிபோ நோ டானே' (ஜப்பானிய மொழியில் ‘நம்பிக்கையின் விதைகள்') என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். அந்த அமைப்பின் மூலமாகத் தற்போது ஃபுகுஷிமா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம். பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் வயல்களுக்கு வந்து பயிற்சியும் பெற்றுச் செல்கின்றனர்” என்று நிதானமாகச் சொல்லிவிட்டுப் புன்னகையுடன் இருக்கையில் அமர்கிறார் மிசோ சுகேனோ. பெருமழை ஓசைபோல, அரங்கில் கைதட்டல் ஒலி அடங்க நேரம் பிடித்தது.

இயற்கை விவசாயத்தை இன்னமும் சந்தேகத்தோடு பார்க்கும் மக்களுக்கு மிசோ சுகேனோ... நம்பிக்கையின் ஒரு விதை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in