Published : 12 Feb 2022 11:15 AM
Last Updated : 12 Feb 2022 11:15 AM

நல்ல பாம்பு -21: அரிய பாம்புகள் இரண்டு

மா.ரமேஸ்வரன்

காலையில் எழுந்த பொழுது இரவில் அலைபேசி ஒலித்தது ஞாபகம் வர, யாரென எடுத்துப் பார்த்தேன். சாத்தூரிலிருக்கும் நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அழைத்திருந்தார். கூடவே பாம்பின் சில ஒளிப்படங்களை அனுப்பி, இது ஆபத்தான பாம்பா, உடனே தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். அது நஞ்சுடைய நாணற்குச்சி பவளப் பாம்பு (Slender Coral Snake – Calliophis melanurus). அவரிடம் கேட்டறிந்தபோது, நடுச்சாமத்தில் தண்ணீர் அருந்தச் சென்றவர் வராந்தாவில் பாம்பு ஊர்ந்ததைக் கண்ட அதிர்ச்சியில், அங்கேயே அதன் கதையை முடித்திருக்கிறார். வறண்ட பூமியான அந்த நகர்ப் பகுதியில் இப்பாம்பு வாழ்கிறது என்பது கூடுதல் தகவல். அரிதான இப்பாம்பை நான் சில முறை பார்த்திருக்கிறேன்.

உடல் உருளையாக பென்சில் பருமனுக்குச் சற்றுக் குறைவாகவும் ஒரு அடிக்குக் கூடுதலான நீளத்தில் நீண்டும் இருக்கும். உடல் பருமனிலிருந்து வால் சற்றுச் சிறுத்தும் நுனி கூம்பியும் இருக்கும். மென்மையான செதிலோடு மேலுடல் முழுக்க சாம்பல்-பழுப்பு நிறம். தலையிலிருந்து கழுத்து வரை அடர்த்தியற்ற கருமை நிறமும் பிடரியில் உடல் நிறத்தில் இரு பொட்டுகளையும் பெற்றுள்ளது. அடிவயிற்றுப் பகுதி வெளிறிய இளஞ்சிவப்பு நிறம். வாலில் அடர்த்தியற்ற இரு கறுப்பு வளையங்கள் இருக்கின்றன. இதற்கு மறுபுறமான வாலின் அடிப்பகுதியில் கரிய நிறத்தையும் ஊடே நீல நிறத்தையும் பெற்றுள்ளது. ஆபத்தை உணரும் போது வால் பகுதியை வளைத்துச் சுருட்டி மேலே உயர்த்தி, அடி நிறம் நன்றாகத் தெரியுமாறு காட்டுகிறது. இது எதிரிகளைப் பயம் கொள்ள வைக்கவும், திசை திருப்புவதற்குமான உத்தி.

எலாப்பிடே குடும்பத்தில் பவளப் பாம்புகள் இரண்டு பேரினத்தைப் பெற்று, மொத்தம் பத்துப் பாம்பினங்களைக் கொண்டுள்ளன. பெரும் பாலானவை மேற்கு மலைத் தொடரிலும் சில இனங்கள் இமயமலை, வடகிழக்கு இந்தியா, கிழக்கு மலைத் தொடர்களிலும் காணப்படுகின்றன. இதில் நாணற்குச்சி பவளப்பாம்பு தீபகற்ப இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வாழ்கிறது.

நஞ்சுடைய பாம்புகளில் சிறிய இனமான இவற்றின் நஞ்சு, நரம்பைத் தாக்கும் தன்மை கொண்டது. இதன் கடியால் கடிவாயில் வீக்கம், வலி, அரிப்பு போன்றவை ஏற்படலாம். மனித உயிரைக் கொல்லும் அளவிற்கு இருக்காது. இச்சிறிய பாம்பு நிலத்தின் அடியில் மறைந்திருந்து, இரவில் வெளிவரும் தன்மையைப் பெற்றிருப்பதால் இதன் பண்பியல்புகள் குறித்து அறியப்பட்டது குறைவே.

கடலிலும் உண்டு

கடல் பாம்புகள் வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலத்தில் இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன. இந்தியாவில் அனைத்துக் கடல் பகுதிகளிலும் காணப்பட்டாலும் சில இனங்கள் வங்கம், அந்தமான், நிகோபார் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன. மூன்று பேரினமாக மொத்தம் 22 இனங்கள் உள்ளன. இவற்றில் இரு இனங்கள் மட்டும் முட்டையிடுவதற்காகக் கடல் தீவுக்கு வருகின்றன. மீதமுள்ள அனைத்தும் கடல்நீரிலே குட்டியிடுபவை.

தூத்துக்குடி புதிய துறைமுகத்தின் கடல் பகுதியில் கரைவலையில் குறுகிய கடல் பாம்பின் (Short sea snake – Hydrophis curtus) குட்டி ஒன்றை ஒருமுறை பார்த்தேன். ஓரடி நீளத்திலிருந்தது. கரிய நிறத் தலையுடன் உடல் முழுக்க மஞ்சள் நிறத்தில், சராசரியாக 46 கரிய நிறப் பட்டைகளை இருபுறமும் பெற்றிருந்தது. வால் கரிய நிறத்தில் துடுப்புபோல இருந்தது.

கடல் நீரில் வாழ்வதால் அதற்கு ஏற்றாற் போன்ற உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. நன்றாக நீந்துவதற்கு ஏதுவாகத் தட்டையான தன்மையைப் பெற்று, பார்க்கத் துடுப்பைப் போன்று வால் இருக்கிறது. இவ்வமைப்பு சில கடல் பாம்புகளில் இல்லை. கடலில் வாழ்ந்தாலும் சுவாசிப்பதற்கு அவ்வப்பொழுது கடலின் மேற்பரப்புக்கு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல இதன் நாசித்துவாரம் அமைந்துள்ளது. ஆழ்கடலில் காணப்பட்டாலும் பெரும்பாலும் ஆழமற்ற பகுதிகளிலேயே வசிக்கிறது.

நஞ்சுடைய இப்பாம்பு, தசைகளைச் சேதப்படுத்தும் மயோடாக்ஸிக் (myotoxic) தன்மையைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இதன் கடிக்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதன் கடியால் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும் அறியப்படுகிறது. சிறுவயதில் கடற்கரையில் வீசப்பட்ட அஞ்சாலை போன்ற விலாங்கு மீன்களைப் பார்த்துப் பாம்பெனப் பதறிய காலம் போய், பின் இதே கடலில் கடல் பாம்பைத் தேடி அலைந்தது என் வாழ்வில் ஏற்பட்ட நல்ல மாற்றமே.

கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x