

ஒரு நாள் காலை வேளை யில் நண்பரைப் பார்க்கச் சென்றுகொண்டி ருந்தேன். சற்று தொலை வில் சாலையின் வளைவில் ஒரு பாம்பு கடந்து கொண்டி ருக்க அங்கே வந்த கார் பாம்பின் மீது ஏறி இறங்கியது. கார் ஓட்டுநர் அதைக் கவனித்திருப்பதற்கான வாய்ப்பு குறைவே. நான் பாம்பை நெருங்குவதற்குள் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் பாம்பின் மீது ஏற, அது தரையோடு தரையானது. நடுவிரல் பருமனில் இரண்டடிக்கும் சற்றுக் குறைவான நீளத்தில் நன்கு வளர்ந்திருந்தது அந்தப் புல்லுருவிப் பாம்பு (Striped Keelback – Amphiesma stolatum).
நஞ்சற்ற, பகலாடியான இப்பாம்பை வெகு நாட்கள் கழித்து இந்நிலையில் பார்த்தது மனத்திற்குச் சங்கடம் அளித்தது. முழு உடலும் நசுங்கியிருந்தாலும் அதன் கரும்பச்சை நிறத்தை யும் மேடுடைய செதில்களையும் பார்க்க முடிந்தது. பக்கவாட்டில் காணப்பட்ட இரு மஞ்சள் நிறக் கோடுகள் வால்பகுதியில் தெளிவாகவும் கழுத்துப் பகுதிக்குச் செல்ல மங்கியும் இருந்தன. சற்று நீண்ட ஒல்லியான வால் போன்ற அடையாளங்கள் அந்தப் பாம்பை உறுதிப்படுத்த உதவின.
நாடு முழுவதும் பரவலாகக் காணப்படக்கூடிய இவை நீர்நிலைகள் அருகில் உள்ள பகுதிகள், வயல்வெளிகள் போன்ற ஈரமான நிலப்பரப்பையே விரும்புகின்றன. முட்டையிடும் தன்மையுடைய இவை, இனப்பெருக்கக் காலத்தில் ஒரே நேரத்தில் பெண் பாம்புடன் பல ஆண் பாம்புகள் சேர்ந்து திரிவதைப் பார்க்கலாம். அடர்ந்த தாவரங்கள், புற்களின் ஊடே இவை செல்வதைக் காண இயலாத வகையில் நிற அமைப்பையும், ஊடுருவி நகரும் தன்மையையும் பெற்றிருக்கின்றன. இதனாலேயே பிற பாம்புகளைப் போல இலகுவாக இவற்றைப் பார்க்க முடிவதில்லை.
பட்டை ஓலை
சாலையைக் கடந்து போனவர் என்னிடம், இது எந்தப் பாம்பின் குட்டி எனக் கேட்டார். இது குட்டியல்ல, பெரிய பாம்பு என்றேன். ஆச்சரியமடைந்த அவர் சற்றுத் தள்ளி இதேபோல ஒரு பாம்பு கிடப்பதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அது என்ன பாம்பாக இருக்கும் என்றபடியே அங்கே விரைந்தேன். அது நஞ்சற்ற பட்டை ஓலைப்பாம்பு (Banded Kukri snake – Oligodon arnensis). இரவாடியான இவை முந்தைய இரவில் வாகனத்தில் அடிபட்டிருக்க வேண்டும். காலையிலே இதுபோல சாலையில் கிடக்கும் சடலங்களைத் தின்ன காகங்கள் கூடும். அன்றைக்கு அவற்றின் கண்களில் இவை பட்டிராததால் எங்களால் பார்க்க முடிந்தது. இவை குளிர் ரத்தப்பிராணியாக இருப்பதால், சில நேரம் சாலையின் மீது உடலைக் கிடத்தி உடல் வெப்பத்தைச் சீர்செய்துகொள்கின்றன. இச்சமயத் திலோ அல்லது சாலையை கடக்கும்பொழுதோ விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. இப்பேரினத்தில் 21 இனங்கள் காணப்படுகின்றன. அதில் இந்த இனம் நாடு முழுவதும் பரவலாகக் காணப்படக் கூடி யது. நடுவிரல் பருமனில் சுமார் ஒன்றரை அடிக்குக் குறையாமல் இருந்தது. இதுவும் குட்டியல்ல.
எதுவும் சிறிதல்ல
சிறிய பாம்பாக இருந்தால் குட்டிகள் என நினைத்துவிடுகிறார்கள். இது தவறு. இது போன்ற சிறிய பாம்பினங்கள் நம் நாட்டில் அதிகம் வாழ்கின்றன. உதாரணமாகச் சுருட்டை விரியன், ஓலைப்பாம்பு, வெள்ளிக்கோல் வரையன், கருவிரலி, கருந்தலைப் பாம்பு, தட்டைவால் பாம்பு, புழுப் பாம்பு எனப் பல இருக்கின்றன.
இதன் வழவழப்பான செதிலுடன் மேல் உடம்பு முழுக்க ஒரே நிறமாகப் பழுப்பில் பச்சை நிறம் கலந்ததுபோல இருந்தது. அம்புக்குறி போன்ற வடிவம் தலையின் மேல் இரண்டும் கழுத்தில் ஒன்றும் தெளிவாக இருந்தது. வால் சிறியதாகக் கூர்மையாக முடிந்திருந்தது. தரைவாழ் பண்புடைய இது மண்ணின் மேற்பரப்பில் புதைந்து வாழ்கிறது.
சாலைப் பலி குறையுமா?
நஞ்சற்ற இப்பாம்பு தன் உடலில் காணப்படும் குறுக்குப் பட்டைகளால் கட்டுவரியன் எனத் தவறுத லாக அடையாளம் காணப்பட்டு, பார்த்தவுடன் கொல்லப்படும் பாம்புகளில் ஒன்றாக இருக்கிறது. பாம்புகள் பல சூழல்களில் மனிதர்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதில் இரவு நேரத்திலும் மழைக்காலத்திலும் நேரிடும் சாலை விபத்துகளில் சிக்குபவை அதிகம். வாகனப் பெருக்கத்தின் விளை வாகச் சாலைகளின் விரிவாக்கம் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், ஊர்ந்து செல்லும் இது போன்ற சிறு உயிரினங்கள் சாலையைக் கடந்து செல்வது பெரும் போராட்டமாகிறது. இதை மனத்தில் கொண்டு இந்நிலைமையைச் சரிசெய்வதற்கான வழியைக் கண்டடைவதோடு, பயணத்தின்போது இதுபோன்ற உயிரினங்கள் கடப்பது குறித்த கவனத்தையும் கொண்டிருப்பது, அவற்றுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும்.
கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com