சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குப் புலிகளை இரட்டிப்பாக்கியதற்கு விருது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குப் புலிகளை இரட்டிப்பாக்கியதற்கு விருது
Updated on
1 min read

2022ஆம் ஆண்டுக்குள் காட்டில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் சரணாலயங்களுக்கு விருது வழங்குவது என்று 2010ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புலிகளை இரட்டிப்பாக்கியதற்கான TX2 விருதைப் பெற்றுள்ளது. ஐ.யு.சி.என்., யு.என்.டி.பி., உலக இயற்கை நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியமங்கலம் 2013இல் உருவான சரணாலயம். அதேநேரம் அது புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது, அந்தக் காடு வளமாக இருப்பதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. தற்போது 80 புலிகள் இந்தக் காப்பகத்தில் உள்ளன. புலிகள் அதிகரிப்புக்கு மாநில அரசும் உள்ளூர் மக்களுமே முக்கியக் காரணம்.

இந்தச் சரணாலயமே நீலகிரி மலைப்பகுதிக்கும் கிழக்கு மலைத் தொடருக்கும் இடையிலான முக்கிய இணைப்பு. அத்துடன் முதுமலை, பந்திபூர், பிலிகிரி ரங்கன் மலை போன்ற மற்ற புலிகள் காப்பகப் பகுதிகளையும் இணைக்கக்கூடியது. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் உலகிலேயே அதிக புலிகள் வாழும் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன நாட்காட்டியின்படி 2022 புலி ஆண்டாக உள்ளது. தற்போது 13 நாடுகளின் காடுகளில் புலிகள் வாழ்கின்றன. சத்தியமங்கலத்தைப் போலவே, நேபாளத்தின் பர்தியா தேசியப் பூங்காவும் புலிகளை இரட்டிப்பாக்கியதற்கான விருதைப் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in