

சூழலும் சாதியும்
l நக்கீரன், காடோடி பதிப்பகம், தொடர்புக்கு: 80727 30977
சூழலியலுக்கும் சாதிக்கும் தொடர்பு உண்டா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கலாம். இருக்கிறது, இருந்து வருகிறது. அதைக் கண்டுகொள்வது எப்படி என்று இந்த நூலில் விரிவாக அலசியுள்ளார் எழுத்தாளர் நக்கீரன். ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், விலங்குகள் என இயற்கையின் பல்வேறு அம்சங்கள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சாதியத்தின் கட்டமைப்பில் இயற்கை அமைப்பு எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் முன்வைக்கிறது இந்த நூல்.
காடழித்து மரம் வளர்ப்போம்
l ஏ. சண்முகானந்தம், காக்கைக்கூடு வெளியீடு, தொடர்புக்கு: 90436 05144
‘சூழலியல் செயல்பாடு’ என்பது திடீரென முளைத்த ஆர்வமாக இன்றைக்குப் பலரிடமும் தென்படுகிறது. மரக்கன்று நடுவது சூழலியல் சேவை என்கிற புதிய அடையாளமாக உருப்பெற்றுவருகிறது. இதுபோன்று இன்றைக்கு அதிக கவனம் பெறும் சூழலியல் ஆர்வங்கள் முதல் அதிகம் அறியப்படாத சூழலியல் ஆளுமைகள் வரை பலரைப் பற்றியும் இந்த நூலில் விவரித்துள்ளார் ‘உயிர்’ இதழ் ஆசிரியர் ஏ. சண்முகானந்தம்.
வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்குவதற்கு யார் காரணம்?
l எம்.எஸ். செல்வராஜ், பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332424
மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் என்பது இந்தியா எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினை. இது குறித்து வேறுபட்ட பார்வைகள் உள்ளன. காட்டுயிர் சரணாலயங்களே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்கிற தரப்பை வலியுறுத்தும் ஆசிரியர்களால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சரணாலயங்களைச் செயல்படுத்தும் நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தாலும், மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலுக்கு அது மட்டுமே காரணம் என்கிற கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. விவாத நோக்கில் நூலை வாசிக்கலாம்.
பறவையின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு
l கோவை சதாசிவம், குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221
எழுத்தாளர் கோவை சதாசிவத்தின் எழுத்துப் பணி, செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படை யாகக் கொண்டு எழுத்தாளர் ஏ. சண்முகானந்தம் கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்கு சதாசிவம் அளித்துள்ள விரிவான பதில்கள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சூழலியலைத் தாண்டித் தொல்லியல், இலக்கியம் பற்றியும் நூலில் பேசப்பட்டுள்ளது.
வேளம்
l வறீதையா கான்ஸ்தந்தின், உயிர் பதிப்பகம், தொடர்புக்கு: 98403 64783
‘உரையாடும் தமிழ் நெய்தல்’ என்கிற துணைத் தலைப்புடன் வந்துள்ள நூல் வேளம். நெய்தல் நிலம் குறித்த ஆதி நினைவுகள் தொடங்கி நவீனச் சிந்தனை வரையிலான பின்புலத்தில் கடல், மீனவர்கள் குறித்துத் தொடர்ந்து சொல்லாடலை முன்னெடுத்து வருபவர் பேராசிரியர் வறீதையா. அந்தக் களத்தின் காத்திரமான பல பிரச்சினைகளை வீரியம் குறையாமல் இந்த நூலிலும் பேசியுள்ளார்.