

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான பொருளா தாரக் கொள்கையை வகுத்தவர் அறிஞர் ஜே.சி. குமரப்பா. தமிழரான அவர் லண்டனில் படித்தாலும், இந்தியாவுக்குத் திரும்பிக் காந்தியுடன் வாழ்ந்தார். பிறகு நீண்ட காலத்துக்குத் திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராமத்தில் வாழ்ந்தவர்.
சுற்றுச்சூழல் அக்கறை என்ற துறை கவனம் பெற ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தற்சார்புப் பொருளாதாரம், தற்சார்பு வேளாண்மை, தற்சார்பு சுற்றுச்சூழல் அக்கறைகளைச் சிந்தனைகளாக முன்வைத்தவர் குமரப்பா. அன்பு, கருணை, தியாகம், கடமை உணர்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சேவைப் பொருளாதாரமே, காந்தியப் பொருளாதாரம் என்கிறார். அந்தப் பொருளாதாரச் சிந்தனையின் பல்வேறு கூறுகளை விளக்குகிறது ‘தாய்மைப் பொருளாதாரம்’ என்கிற நூல், மொழிபெயர்ப்பு: மருத்துவர் ஜீவா.
சரி, பொருளாதாரத்துக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்? விவசாயக் கல்லூரிகள், பசுப் பொருளாதாரம், ராணுவமும் உணவுப் பற்றாக்குறையும், ஜப்பானில் விவசாய முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் நேரடியாகவும் வேறு பல கட்டுரைகள் மறைமுகமாகவும் வேளாண்மை குறித்தும், அது எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும் என்றும் பேசுகின்றன.
ஐந்தாண்டுத் திட்டங்களும் இந்தியாவின் பட்ஜெட்டும் வேளாண்மைக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியவர், வாதாடியவர் குமரப்பா. அது மட்டுமல்ல, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற திட்டக் குழு கூட்டத்துக்கு மாட்டு வண்டியில் சென்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தவர். பின்னர் திட்டக் குழுவில் இருந்தும் வெளியேறினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கொள்கைகள் அரசால் ஏற்கப்படவில்லை. ஆனால், உலகமயம், தாராளமயம், தனியார்மயம் இன்றைக்குக் கடும் தாக்கங்களைச் செலுத்திவரும் நிலையில், குமரப்பாவின் கொள்கைகள் நமக்குப் புதிய வழியைக் காட்டக்கூடும்.
வெளியீடு: பனுவல் சோலை,
தொடர்புக்கு: 044-28353005