பசுமை இலக்கியம்: போராட்டத்தின் அடையாளம்

பசுமை இலக்கியம்: போராட்டத்தின் அடையாளம்
Updated on
1 min read

1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்தில் உயிரையே இழந்தவர்.

உலகின் மிகப் பெரிய காடுகள் அமேசான் என்று தெரிந்த பலருக்கும், ரப்பர் தோட்டங்களுக்காக அந்தக் காடுகள் அழிக்கப்பட்டதும், அந்தக் காடுகளை அழிவிலிருந்து காக்கப் போராடிய தொழிற்சங்கத் தலைவர் சிகோ மெண்டிஸ் பற்றியும் அதிகம் தெரிந்திருப்பதில்லை.

தொழிலாளர் தலைவர்

மூன்றாம் உலக நாடுகளுக்கே உரிய சிக்கலான, குழப்பமான பிரச்சினைகளைக் கொண்ட நாடு பிரேசில். வளரும் நாட்டு மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் எப்போதுமே பிரச்சினைதான். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் பிரேசிலின் ஒரு ஓரத்தில் ரப்பர் எடுக்கும் அடிமைத் தொழிலை ஒழிக்கவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் 80-களில் குரல் கொடுத்தவர் சிகோ மெண்டிஸ். காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டம் போடும் முதலாளிகளுக்கு, தொழிலாளர்கள் ஒத்துழைப்பை மறுக்கும் போராட்டத்தை அவர்களுடைய தொழிற்சங்கம் முன்னெடுத்தது.

இதன் காரணமாக அவருக்கும் அவருடைய அமைப்பினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது. இந்த ஆபத்தைச் சிகோ மெண்டிஸ் அறிந்திருந்தார். ஆனாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தன் சொந்த ஊருக்குப் போனபோது, ஒரு ரப்பர் தோட்ட முதலாளியின் மகனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

போராட்டக் கதை

சிகோ மெண்டிஸின் பெயர் இன்றுவரை திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதற்குக் காரணம் அன்றைக்குப் பிரேசில் எதிர்கொண்ட பிரச்சினையின், ஒரு காலத்தின் அடையாளமாக அவர் திகழ்வதுதான்.

ரப்பர் தொழில் போராட்ட வரலாறும், அதில் சிகோவினுடைய பங்கையும் சேர்த்து விளக்கும் வகையிலான அவருடைய நீண்ட பேட்டி ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என்ற தமிழ் நூலாக விரிந்திருக்கிறது. எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தைத் தமிழில் தந்தவர் பேராசிரியர் ச. வின்சென்ட்.

சிக்கோ மென்டிஸ்,
பேரா. ச. வின்சென்ட்,
எதிர் வெளியீடு,
தொடர்புக்கு: 98650 05084

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in