

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது அரசின் கையில் இருக்கிறது. இருந்தாலும், பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீவிரமடைய நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியக் காரணமாக இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் மலையைப் புரட்ட வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையில் சில எளிய செயல்பாடுகளைச் செய்தால் போதும், அப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில:
தண்ணீரை அடைப்போம்: ஒரு குழாயில் ஒரு விநாடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால் ஆண்டுக்கு 10,000 லிட்டரும், வெஸ்டர்ன் டாய்லெட் ஒழுகினால் ஆண்டுக்கு 16,000 லிட்டர் தண்ணீரும் வீணாகும். எனவே, குழாய்களைச் சரியாக அடைப்போம்.
பிளாஸ்டிக் வேண்டாம்: ஒவ்வோர் ஆண்டும் உலகில் 50,000 கோடி பிளாஸ் டிக் பைகள் விற்பனை ஆகின்றன. பிளாஸ்டிக் மக்காது என்பதால், துணிப்பைகளைப் பயன்படுத்துவோம்.
உள்ளூர் உணவு: அந்தந்தப் பருவகாலத்தில் உள்ளூரில் விளையும் காய்கறி, பழம், உணவை உட்கொள்ளுங்கள். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறி, பழங்கள் பெருமளவு எரிசக்தியை வீணடிப்பதுடன், நீண்டகாலம் வாடாமல் இருக்கப் பூச்சிக்கொல்லிகளும் தெளிக்கப்பட்டு வருகின்றன.
பல்புகளை மாற்றுவோம்: வீட்டில் மஞ்சள் குண்டு பல்பு, டியூப்லைட் மாட்டியிருக்கிறீர்களா? அவற்றை அகற்றிவிட்டு எல்.இ.டி., சி.எஃப்.எல். பல்புகளாக மாற்றுங்கள். இவை கால் பங்கு மின்சாரத்தையே பயன்படுத்துவதுடன், எட்டு மடங்கு அதிகம் உழைக்கும்.
மின்சாதனங்களை அணைப்போம்: டிவி, ரேடியோ, கணினி, ஃபேன், லைட் ஆகியவை பயன்படாதபோது முழுமையாக அணைத்துவிடுங்கள். இதன் மூலம் ஓராண்டுக்கு ஆயிரம் கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைக் குறைக்கலாம்.
பொதுப் போக்குவரத்து: எல்லாவற்றுக்கும் கார், பைக்கை எடுக்காமல் நடந்து செல்லலாம், சைக்கிளைப் பயன்படுத்தலாம். முடியாதவர்கள் பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தலாம். தனிநபர் வாகனம் ஒவ்வொரு 5 கி.மீ.க்கும் ஒன்றரை கிலோ கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
காகிதம் குறைப்போம்: காகிதப் பயன்பாட்டைக் குறையுங்கள். ஏனென்றால், ஆயிரம் கிலோ காகிதம் தயாரிக்க 17 வளர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன.
குப்பை தவிர்ப்போம்: நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்குத் தலா அரைக் கிலோ குப்பையைச் சராசரியாக உருவாக்குகிறோம். இது எல்லாமே ஊரின் ஏதோ ஒரு மூலையில் மலை போல் குவிகிறது. அதனால் சுற்றுச்சூழலுக்கு இணக்கமில்லாத செயற்கைப் பொருட்களின் பயன்பாட்டைக் கூடுமானவரை குறைக்க முயல்வோம்.
மறுசுழற்சி செய்வோம்: காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்வதன் மூலமும் சூழலைப் பாதுகாக்கலாம். நமது குப்பையில் சராசரியாக 25 சதவீதத்தைக் குறைத்தால், 500 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை ஓராண்டில் குறைக்கலாம்.
மரக்கன்று நடுவோம்: ஒரு வளர்ந்த மரம் தன் வாழ்நாளில் 1,000 கிலோ கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொள்கிறது. எனவே, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மரமோ, செடிகொடியோ வளருங்கள்.