சிறை மீளுமா வேளாண்மை?

சிறை மீளுமா வேளாண்மை?
Updated on
2 min read

இந்திய வேளாண்மையின் மீது பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டுவந்தாலும், நாட்டில் ‘பெரும்பான்மையோர் ஈடுபட்டு வரும் தொழில்’ என்ற பெருமை வேளாண்மையிடமிருந்து இன்னமும் பறிக்கப்படவில்லை. ஆதித் தொழிலான வேளாண்மை, நம் மண்ணில் ஆழ வேரூன்றிய ஒன்று. நமது பண்பாடு அதைச் சுற்றிய ஒரு கோட்டையைப் போலவே எழுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால், உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பை வேறுவேறு கட்சிகள் வகித்துவந்தாலும் வேளாண்மையின் மீதான தாக்குதல் மட்டும் குறையவேயில்லை. வேளாண்மையிலிருந்தும் நிலத்திலிருந்தும் உழவர்களை வெளியேற்றும்-விரட்டும் முயற்சிகள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் இடுபொருள் செலவு கடுமையாக அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை போன்றவையும் அதிகரித்தே வருகின்றன.

யாருக்கு லாபம்?

வேளாண்மையை அரசு புறக்கணிப்பதால் உழவர்கள் மட்டுமின்றி நாமும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறோம். வெங்காயம் விலை திடீரென விண்ணை முட்டுகிறது, தக்காளி விலை தடாலென பாதாளத்தில் வீழ்கிறது. இதனால், உழவர் நுகர்வோர் என இருவருக்குமே நிரந்தர லாபமில்லை. வெங்காயம், பருப்பு போன்றவற்றின் உற்பத்தி, கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்தாமல் இறக்குமதி ஆயுதத்தை அரசு கையில் எடுப்பதால் உழவர்களே மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற விவசாயம் சார்ந்த நடைமுறை பிரச்சினைகள், கொள்கைப் பிரச்சினைகள், விவசாயிகள் தற்கொலைக்கான பல்வேறு காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்று பல்வேறு அம்சங்களை அலசுகின்றன ‘வேளாண்மையின் விடுதலை’ நூலில் பாமயன் எழுதியுள்ள கட்டுரைகள். ‘பூச்சிக்கொல்லிகள், விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டும்’ என்று அதிர்ச்சியளிக்கும் ஒரு கட்டுரை, இந்த நூல் கவனப்படுத்தும் பல்வேறு விஷயங்களுக்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு.

கள அனுபவப் பிரதிபலிப்பு

நூல் ஆசிரியர் பாமயன், சுற்றுச்சூழல் குறித்து நீண்டகாலமாக எழுதி வருபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘தி இந்து’ நாளிதழில் ‘ஏரின்றி அமையாது உலகு’, ‘முன்னத்தி ஏர்’ ஆகிய தொடர்களை எழுதிவருகிறார். எழுத்து மட்டுமல்லாமல் இயற்கை வேளாண்மையில் நேரடியாக ஈடுபடுவது, இயற்கை வேளாண் ஆர்வலர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடுவது, பயிற்சிகளை ஒருங்கிணைப்பது போன்றவற்றிலும் முனைப்பாக இருப்பவர் என்பதால் கட்டுரைகளில் களஅனுபவம் நன்கு வெளிப்படுகிறது.

தீர்வு என்ன?

பிரம்மாண்ட இயந்திரம்போல அனைத்தையும் நசுக்கிவரும் உலகமயத்தையும் அதன் கொடுங்கரங்களையும் எதிர்க்கும் அதே நேரம், சந்தையை நோக்கிய விளைச்சலை நிறுத்திவிட்டுத் தேவையை நோக்கிய விளைச்சலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; தற்சார்பைப் பெற வேண்டும்; அதற்கு இயற்கை வேளாண்மையே வழி; அதுவே மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்காத தொழில்நுட்பம் என்பதைத் தன்னுடைய தீர்வாக முன்வைக்கிறார் பாமயன்.

இந்தக் கட்டுரைகளைப் படித்த பின் நம் உயிர் வளர்க்கும் தொழில் இன்றைக்குச் சிக்கியுள்ள நிலை தெரியவருகிறது; வேளாண்மையின் மீதான அக்கறை விரிகிறது. இது போன்ற நூல்களைப் படித்துவிட்டுச் சிந்தனையுடன் நின்றுவிட முடியாது. ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டாக வேண்டும் என்ற தூண்டுதல் கிடைப்பது சிறப்பு.

வெளியீடு: தமிழினி, தொடர்புக்கு: 044-28490027

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in