

சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மரத் தாவரம், பலாசம். பியூட்டியா மோனோஸ்பெர்மா (Butea monosperma; தாவரக் குடும்பம்: ஃபேபேசி) என்ற தாவரப் பெயரைக்கொண்ட இதன் இதர தமிழ் பெயர்கள் பலாசு, புரசு, பொரசு, புரசை. 9-ம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்ட இது எப்பொழுது புரசு (பிங்கல நிகண்டு), பொரசு (நாமதீப நிகண்டு), புரசை போன்ற பெயர்களைப் பெற்றது என்று தெளிவாக அறியப்படவில்லை.
கிழக்குக் கடற்கரை மரம்
பலாசு (பலாசத்தின் சுருக்கம்), பராசு என்றும் பின்பு புரசு அல்லது பொரசு என்றும் மாறியிருக்கலாம் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. (ல (l)-வும் ர (r)-வும் ஒன்றுக்கொன்று மாற்றியமைத்துக் கொள்ளும் ஒலியன்கள்). பலாசத்துக்கு சூட்டப்பட்டுள்ள மற்றொரு பெயர் புனமுருக்கு. (காண்க: பிங்கல, சூடாமணி, நாமதீப நிகண்டுகள், நச்சினார்கினியரின் உரை). ஆனால், சங்க இலக்கியத்திலும் சங்கம் மருவிய இலக்கியத்திலும் இப்பெயர் இல்லை. இது பலாசத்தை சுட்டும் மற்றொரு பெயர் என்பதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது. மேலும், முருக்கு என்றால் மென்மையான - எளிதில் உடையக்கூடிய என்று பொருள்; பலாச மரக்கிளைகள் எளிதில் உடையக்கூடியவை அல்ல.
இந்தியா முழுவதும் கலப்பு இலையுதிர், இலையுதிர் அல்லது முட்புதர் காடுகளில் காணப்படும் பலாசம் 35 அடி உயரம்வரை வளரக் கூடியது; உவர் நிலங்களில் சிறப்பாக வளரும். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புகூட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட இந்த மரம், தற்போது அரிதாகவே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை நகரின் ஒரு பகுதியான புரசைவாக்கம் ஒருகாலத்தில் பலாசுக் காடாகவே இருந்தது.
ரத்த நிறப் பூக்கள்
இலையுதிர் மரமான இது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அனைத்து இலைகளையும் உதிர்த்துவிட்டு, கொத்துக் கொத்தாகக் குருதி நிறப் பூக்களைத் தாங்கி நிற்கும். பரஞ்சோதி முனிவர் தன்னுடைய திருவிளையாடல் புராணத்தில் இதன் மலர்களைக் குண்டுமணி விதையின் நிறத்துக்கும் (மாணிக்கம்: 89: 8) செங்கதிருக்கும் (செங்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம் தருமிக்கு: 12:1) ஒப்பிட்டதையும், ராமாயணத்தில் இந்திரஜித்தால் போரில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இலக்குவன் கிடந்ததைப் பலாச பூக்கள் உதிர்ந்து கிடந்த தரைக்கு ஒப்பிட்டிருப்பதையும், Flame of the Forest மற்றும் Parrot beak flower என்ற அதன் ஆங்கிலப் பெயர்களையும் இந்த இடத்தில் நோக்க வேண்டும். பலாசு மரத்தின் முக்கியத்துவம் கருதி ஜார்கண்ட் மாநில அரசு, இதன் பூவை மாநிலப் பூவாக அங்கீகரித்துள்ளது.
நாக்பூருக்கும் போபாலுக்கும் இடையே ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ரயில் பயணம் செய்யும் எவரும், பூத்துக் குலுங்கும் இந்த மரங்களின் கண்கொள்ளா காட்சியைக் காணாமல் இருக்க முடியாது. பூக்கள் மணமற்றவை என்றாலும் தேன் நிரம்பியவை. காய்கள் ஒரு விதையையும் இறகையும் கொண்டு காற்றில் பரவக் கூடியவை.
(அடுத்த வாரம்: புராணங்களில் பலாசம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in