

குழந்தைப் பருவத்தைவிட மென்மையானது முதுமைப் பருவம். வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட்டு மகிழ்வுடன் வாழ வேண்டிய பருவம் அது. ஆனால், அந்த மகிழ்ச்சி முதுமையில் பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஒருபுறம் முதுமையினால் ஏற்படும் உடல் உபாதைகள் / உடல்நலக் குறைபாடுகள். மறுபுறம் நெருங்கியவர்களின் இழப்பு, உறவினர்களின் புறக்கணிப்பு, குடும்பச்சூழல், சமூகச்சூழல் போன்றவற்றால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள். இவை முதியவர்களை மீள முடியாத, யாரிடமும் பகிர முடியாத துயரில் ஆழ்த்துகின்றன.
முதுமையை யாராலும் தவிர்க்க முடியாது. அதை எதிர்கொண்டு வாழ்வதே நம் அனைவருக்கும் தேவை. இந்தச் சூழலில், முதுமையை எப்படி எதிர்கொள்வது, அதன் துயர்களை எப்படிக் களைவது, அதன் சிக்கல்களை எப்படித் தீர்ப்பது, அன்றாடப் பிரச்சினைகளில் தொலைந்த மகிழ்ச்சியை எப்படி மீட்பது என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டு இருக்கும் புத்தகம் இது. கேள்வி-பதில் வடிவில் இருக்கும் இந்தப் புத்தகத்தின் மூலம், நூலாசிரியர் முதியவர்களின் சந்தேகங்களை மட்டும் தீர்க்கவில்லை, அவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார். முதி யவர்கள் மட்டுமல்லாமல்; எல்லா வயதினரும் படித்து முதுமையைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம் இது. இந்தப் புத்தகம் குறுகிய காலத்தில் இரண்டாம் பதிப்பு கண்டுள்ளது.
விலை: ரூ. 150, டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, தொடர்புக்கு: 044-26412030