

இயற்கை உழவர்கள் மாவட்டம்தோறும் பரவலாக உருவாகிவருகிறார்கள். இப்படி அவர்கள் உருவாகக் காரணமான பல முன்னோடிகள் பட்ட இன்னல்கள், சந்தித்த இளக்காரப் பேச்சுகள், எதிர்கொண்ட எதிர்ப்புகள் மிக அதிகம். இயற்கை வேளாண்மை நுட்பங்களில் இன்றைக்குத் தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டியுள்ளதற்குக் காரணம், அவர்கள் செய்த தியாகங்கள்தாம் என்றால் அது மிகையில்லை. இந்த வகையில் அரசின் முன்னெடுப்பு மிக மிகக் குறைவு.
உருமாறிய நீர்
நாகை மாவட்டம் காவிரியின் வடிகால் நிலங்களில் ஒன்று, மழை பெய்தால் அதிக நீர் நிற்கும், இல்லையென்றால் கடும் வறட்சி நிலவும். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி சிக்கல் தலைதூக்கிய பின்னர் இப்பகுதிக்கான நீர்வரத்தும், நீர் வரும் கால ஒழுங்கும் அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து உழவர்கள் ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கி, அதன் மூலம் சாகுபடி செய்யத் தொடங்கினார்கள்.
தொடர்ச்சியாக நிலத்தடி நீரை உறிஞ்சியதன் விளைவாக நீரின் தன்மை மாறியது. குறிப்பாக மயிலாடுதுறைப் பகுதி நிலத்தடிநீரில் சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பொருள் அதிகமானது. இதனால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் நாகை மாவட்டத்தில் இயற்கைவழி வேளாண்மையை முனைப்பாக முன்னெடுத்தவர்களில் ஒருவர்தான் கிடாத்தலைமேடு சேதுராமன்.
பசுமைப் புரட்சியின் நீர் வேட்கை
பொதுவாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடியே அதிகம். அந்த நில அமைப்பு அதற்கு ஏற்றதாக உள்ளது. ‘சோழநாடு சோறுடைத்து' என்ற சொற்றொடரும் அதனால்தான் ஏற்பட்டது.
நெல் என்பது தேக்கப்பட்ட நீரிலும் வளரும் தாவரம் என்ற உண்மையைக் கண்டுகொண்ட நமது முன்னோர்கள் நீர் கட்டி நெல் வேளாண்மை செய்தனர். அதற்கேற்ற நெல் வகையினங்களைக் கண்டனர். பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் பயனாகக் குட்டை ரக நெல்லுக்கு மாறினார்கள், அது நீர் வேட்கை கொண்ட பயிராக இருந்ததாலும், ரசாயன உரங்களின் தேவை அதிகமாக ஏற்பட்டதாலும், அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
திருப்புமுனை மாநாடு
இந்த நெருக்கடி சேதுராமனுக்கும் ஏற்பட்டது. இதன் விளைவாகவே இப்பகுதியில் இயற்கை வேளாண் நெல் சாகுபடி முறையை முன்னெடுக்கச் சேதுராமன் பெரும் பாடுபட்டார். தான் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள உழவர்களும் பயனடைய வேண்டும் என்று முயன்றார். அதற்காக மயிலாடுதுறையில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரையும் தமிழக இயற்கை வேளாண் முன்னோடிகள் பலரையும் 2002-ம் ஆண்டில் அழைத்து ஒரு மாநாட்டை நடத்தினார்.
தமிழக இயற்கை வேளாண்மை வரலாற்றில் அந்த மாநாடு மிக முக்கியமான மைல் கல். சேதுராமன் மிகத் தீர்மானமான சிந்தனையாளர், மிகவும் எளிமையானவர். தான் செய்வது சமூகக் கடமைதானே தவிர, இதில் தனக்கு எந்தப் பெருமையும் தேவையில்லை என்ற மனநிலையைக் கொண்டவர்.
அவருடைய வாழ்க்கைத் துணைவியும் இயற்கை வேளாண்மையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தங்களுடைய குழந்தைகளை நகரத்துக்கு அழைத்தும் செல்ல மறுத்து, தற்சார்பை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர்கள். சேதுராமனின் மோட்டார் சைக்கிளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஏதோ சோழர் காலத்துக்குச் சென்றுவிட்டோமோ என்ற எண்ணமே தோன்றும்.
கடன் இல்லாத இயற்கை வேளாண்மை
சேதுராமன், தன்னுடைய விடா முயற்சியால் நெல் சாகுபடியில் முழுமையான இயற்கை வேளாண்வழியை நிலையை எட்டினார். அவருடைய குடும்பம் வேளாண்மைப் பின்னணி கொண்டது. வழக்கம்போலப் படித்த பின்னர் அரசு வேலைக்கு முயன்றார். மின்சார வாரியத்தில் கணக்கராகப் பணியிலும் சேர்ந்தார். ஆனால் வேளாண்மையின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரை ஒரு நவீன உழவராக மாற்றியது. 1970-களில் முழுமையாக வேளாண்மையில் இறங்கினார்.
கிடுகிடு வளர்ச்சியும் வீழ்ச்சியும்
அன்றைய நவீன வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்ற எல்லாவித ‘நவீனங்களையும்' செய்து பார்த்தார். உச்சகட்ட விளைச்சலையும் எடுத்தார். அதாவது சாதனை அளவாக ஏக்கருக்கு 60 மூட்டை (60X60 கிலோ / 3600 கிலோ) அளவை எட்டினார். ஆனால், அது எவ்வளவு மோசமான பின்விளைவை ஏற்படுத்தியது என்பதை 10 ஆண்டுகளில் உணர முடிந்ததாகக் கூறுகிறார். விளைச்சலின் அளவு, அடுத்தடுத்த ஆண்டுகளில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1990-களில் மிக மோசமான விளைச்சலே கிடைத்தது. அதாவது 20 மூட்டை என்ற நிலைக்கு வீழ்ந்தது.
முதலில் மண்ணில் இருந்த கரிமச் சத்தை எடுத்துக்கொண்டு விளைச்சலைத் தர உதவிய யூரியா போன்ற ரசாயனங்கள், பிற்காலத்தில் தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கின. கரிமச் சத்தை முற்றிலுமாகக் கொள்ளையடித்துச் சென்றன. ‘இது பற்றி படிப்பறிவுள்ள எனக்கே பின்னர்தான் பிடிபட்டது, சாதாரண உழவர்கள் என்ன செய்வார்கள்?' என்று கேட்கிறார் சேதுராமன்.
உரம் தின்ற நிலம்
‘மண்ணின் கெட்டித்தன்மை அதிகமாகிக் கொண்டே வந்தது. இத்தனைக்கும் எப்போதும் போதிய அளவு தொழுவுரங்களை வயலில் கொட்டிக்கொண்டே இருந்ததாகச் சொல்கிறார் அவர். ஆனால், உரங்களின் பயன்பாடு மட்டும் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு மூட்டை உரம் போட்ட பயிருக்கு, இரண்டு மூட்டை உரம் போட வேண்டியதாயிற்று. அதன் பின்னர் ரசாயனங்களைத் தின்ற பயிர்களின் நிறத்துக்கும் சுவைக்கும் எண்ணற்ற பூச்சிகள் நாடி வந்தன. அவற்றைக் கொல்ல ஏராளமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று.
விளைவு ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்தது. விளைச்சல் ஏறியதோ இல்லையோ, கடன் மட்டும் ஏறிக்கொண்டே போனது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உரக் கடைக்காரர்கள் வீட்டுக்கு வந்து, கொடுத்த கடனைத் திரும்பக் கேட்கும் நிலை ஏற்பட்டது. நிம்மதியாகத் தூங்க முடியவில்லை' என்கிறார் சேதுராமன்.
இயற்கை வேளாண்மை தரும் நிம்மதி
‘இயற்கை வேளாண்மை செய்ய ஆரம்பித்த பிறகு கடன் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குகிறேன்' என்கிறார் சேதுராமன்.
எனவே, கடுமையான கடன் சுமையே, இயற்கை வேளாண்மையின் பக்கம் அவரை தள்ளியுள்ளது. நான் சந்தித்த பல இயற்கை வேளாண் முன்னோடிகள் இதே கருத்தையே முன்வைக்கின்றனர். அது மட்டுமல்ல அவர்கள் யாரும் சாதாரண விவசாயிகள் அல்ல, ரசாயன வேளாண்மையில் கரைகண்டு உச்சகட்ட விளைச்சலை எடுத்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வேதி வேளாண்மையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் அவருடைய தேடல் அதிகமானதால், தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு ஏற்கெனவே இயற்கை வேளாண்மையில் தீவிரம் காட்டிய முன்னோடிப் பண்ணைகளைப் பார்க்கச் சென்றார். இயற்கை வேளாண்மை பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். 2001 முதல் இயற்கை வேளாண்மையில் முழுமையாக இறங்கிவிட்டார்.
(அடுத்த வாரம்: இரு பயிர் சாகுபடியால் தப்பிக்கலாம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com