Published : 11 Dec 2021 03:08 am

Updated : 11 Dec 2021 15:15 pm

 

Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:15 PM

நல்ல பாம்பு 13: மலைப்பாம்புகளின் சொர்க்கம்

nalla-pambu

மா. ரமேஸ்வரன்

திருவைகுண்டம் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றின் வழித்தடத்தில் அமைந்தி ருக்கும் சிறிய கிராமம் முத்தாலங்குறிச்சி. ஜூலை மாதம், லேசான மழை தூறியிருந்தது. காலையில் வைக்கோல்போரிலிருந்து வைக்கோலை ஒரு பாட்டி எடுத்துக்கொண்டிருந்தபொழுது காலடியில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்து வைக்கோலை விலக்கியபொழுது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு நேரம் அவர் நின்று கொண்டிருந்தது ஒரு பெரிய மலைப்பாம்பின் (Indian Rock Python - Python molurus) மீது.

அவர் போட்ட கூச்சலில் தெருவே கூடி விட்டது. ஆனால், அந்தப் பாம்போ அங்கிருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. அந்த ஊரில் மலைப்பாம்பு தென்படுவது புதிதல்ல. விழிப்புணர் வால் மக்கள் வனத்துறைக்குத் தகவல் தர, நானும் வனத்துறையினருடன் சென்றிருந்தேன்.

பொதுவாக மலைகளிலும் காடுகளிலும் காணப்படும் இவற்றை, நீராதாரம் உள்ள பிற பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. முத்தாலங்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் வாழ்பவை 1992ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை எனக் கருதப்படுகிறது. இது நடந்து முடிந்து 30 வருடங் களைத் தொடும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணிக் கரையிலும் அதை ஒட்டிய விளைநிலங்களிலும் இவற்றைப் பார்ப்பது சாதாரணமாகிவிட்டது.

அடுத்த ஆச்சரியம்

தரைவாழ்வியாக இருந்தாலும், இவற்றால் நீந்தவும் மரம் ஏறவும் முடியும். இரவாடியாக இருப்பதால் நம் கண்களில் தென்படுவது அரிது. ஆனால், மீன் வலைகள், தோட்டத்தின் வேலிகளில் சிக்கிவிடும்போது பார்க்க முடிகிறது.

அந்தப் பாம்பால் ஒரே நொடியில் அருகிலிருந்த புதருக்குச் சென்று மறைந்துவிட முடியும்.ஏனோ நகராமல் இருந்தது சந்தேகத்தை எழுப்பியது. மெல்ல அருகே சென்று பார்த்தபொழுதுதான் ஆச்சரியம் காத்திருந்தது. உடலைச் சுருட்டி நடுவே தன் முட்டைகளை வைத்துக்கொண்டு, அவற்றின் மீது தலையை வைத்தபடி இருந்தது. உடல் தசைகளைச் சுருக்கி விரிப்பதன் மூலம் முட்டைகளுக்குப் போதுமான வெப்பத்தை அது கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பில் மலைப் பாம்பை முட்டைகளுடன் பார்த்தது அதுவே முதல்முறை.

பாம்பின் பாதுகாப்பு கருதி பாம்பையும் அதன் முட்டைகளையும் மீட்டோம். தாய்ப் பாம்பு எட்டுஅடி நீளமிருந்தது. இவை அதிகபட்சமாக 20 அடி நீளத்தைத் தொடலாம். பைத்தானிடே குடும்பத்தில் காணப்படும் மூன்று இனங்களில் இவை பரவலாகக் காணப்படக்கூடியவை. மற்ற இரண்டில் ஒன்றான ‘ரெட்டிகுலேடட் மலைப்பாம்பு’தான் உலகத்தில் வாழும் பாம்புகளிலே மிக நீளமானது. அதிகபட்சமாக 33 அடி நீளம் வரை வளர்வதாக அறியப்பட்ட இது, நிகோபார் தீவுகளில் வாழ்ந்துவருகிறது.

மீட்புக்குப் பின்னால்…

முத்தாலங்குறிச்சி பகுதியில் மழை பெய்தி ருந்த நிலையில் அந்தத் தாய் மலைப்பாம்பின் பாதுகாப்பற்ற இடத்தேர்வால் முட்டைகளில் பாதிக்கு மேல் சேதமாகியிருந்தன. மீட்கப்பட்ட பாம்பையும் முட்டைகளையும் உகந்த சூழலில் பாதுகாத்தோம். ஆனால், தாய்ப் பாம்பு முட்டைகளிலிருந்து விலகியது. முட்டைகளில் கரு ஏற்கெனவே நன்கு வளர்ந்திருந்ததால் பெண் பாம்பைப் பாதுகாப்பான இடத்தில் விட்டோம். முட்டைகளைக் கவனமாகக் கண்காணித்தோம். சிறிது நாட்கள் கடந்த பிறகு, எப்பொழுதும்போல காலையில் அதைப் பார்க்க வன ஊழியர் சென்றிருந்தபொழுது முட்டைகள் பொரிந்து, குட்டிகள் ஒவ்வொரு திசையில் ஊர்ந்துகொண்டு இருந்திருக்கின்றன. இரவில் பொரிந்திருக்க வேண்டும்.

பிறந்த குட்டிகள் பளபளப்பாக, சுறுசுறுப்பாக இருந்தன. பெருவிரல் தடிமனுடன், சராசரியாக இரண்டடி நீளத்துக்குக் குறைவாக இருந்தன. வால் தடித்துச் சிறிதாகவும் மொத்த நீளத்தில் ஆறில் ஒரு பங்கு அளவுடனும் இருந்தது. வழுவழுப்பான தடிமனான உடல் நடுப் பகுதி பருத்தும், தலை வால் நோக்கிச் செல்ல குறுகியும் காணப்பட்டது. தலையில் துருத்திக் கொண்டிருந்த சிறிய வட்ட வடிவக் கண்களில் செங்குத்துப் பாவை கருநிறத்திலிருந்தது. மேல் உதட்டில் வெப்பம் உணரும் குழிகளைப் பெற்றிருக்கின்றன. நாசித்துவாரம் மேல் நோக்கி அமைந்திருக்கிறது.

புதிய பாதை

குட்டிகள் உணவு தேடித் திரிந்துகொண்டி ருந்தன. உருவ அமைப்பைப் பொறுத்துச் சிறு உயிரினங்களில் ஆரம்பித்து, பெரிய பாலூட்டி கள் வரை உணவு நீள்கிறது. இரைகளைத் தன் உடலால் இறுக்கி மூச்சிரைக்க வைத்து உண்ணுகிறது. இதன் வலுவான தாடைகள், அதன் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகத் தலையைவிடப் பெரிய இரைகளை எளிதில் உண்ண முடிகிறது. நஞ்சற்ற இவை கோபம் கொள்ளும்பொழுது பலமாகக் கடிக்கும். இதனால் காயம் ஏற்படுமே தவிர, வேறு எந்தப் பாதிப்பும் இல்லை.

ஜீவநதியான தாமிரபரணி, இவ்வினம் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புத் தந்ததைத் தாண்டி, வாழ்வதற்கும் இடமளித்திருக்கிறது. குட்டிகள் வாழத் தகுதியான இடத்தைத் தேர்வுசெய்து வெளியே விட்டபொழுது, ஒவ்வொன்றும் மெல்ல நகர்ந்து மறைந்ததைப் பார்த்தது இன்றும் மறக்க முடியாத நிகழ்வு.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

நல்ல பாம்புNalla Pambuபாம்புமலைப்பாம்புகள்மலைப்பாம்புகளின் சொர்க்கம்சொர்க்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x