Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

நல்ல பாம்பு 11: பாம்பா? கொடியா?

மா. ரமேஸ்வரன்

தூத்துக்குடியில் அமைந்திருக்கும் புதிய துறைமுகக் குடியிருப்பில்தான் என்னுடைய இளமைக் காலம் கழிந்தது. நடந்துபோகும் தொலைவில் கடல். கடற்கரையும் அதையொட்டிய நிலப்பரப்பும் எனக்கு நன்கு பரிச்சயமானவை. கடற்கரையின் மணல் மேடுகள் எலிக்குச்சிப் புற்களால் மண்டிக் கிடக்கும். கூடவே, செந்தம் (நண்டு குளை), வங்காரவச்சி, யானை நெருஞ்சில், அடப்பங்கொடியின் (அடும்பு) இளஞ்சிவப்பு நிற மலர்கள் என அவ்விடத்தின் இயல்தாவரங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

இவற்றுடன் அயல்தாவரமான சீமைக் கருவேலமும் பரவியிருந்தது. அதில் காட்டுக் கொடிகள் படர்ந்து பசுங்குடில் போலிருக்கும். இதைச் சீர்செய்து அதனுள் தங்கி சிலர் இளைப்பாறுவதும் உண்டு. ஒருநாள் கடலில் குளித்துவிட்டுத் திரும்பியபொழுது குடில் மேல் படர்ந்திருந்த கோவைக்கொடியின் பழம் என்னை ஈர்த்தது. பறிப்பதற்காக நிமிர்ந்த பொழுது பழம் அருகே கொடி போன்றிருந்த ஒரு பாம்பைப் பார்த்தேன்.

மேலுடல் முழுவதும் இளம் பச்சை நிறத்திலும் அடிவயிறு ஊதா பழுப்பு (Purple Brown) நிறத்துடனும் மிக நுண்ணிய கரும்புள்ளிகள் தூவப்பட்டிருந்தன.

இப்பாம்பின் அடிவயிற்றுப் பகுதி பொது வாகப் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் இங்கு பெரும்பாலும் நான் பார்த்தது ஊதா பழுப்பு நிறத்தில்தான் இருந்தது. இவ்விரு நிறங்களுக்கு ஊடே இருபுறப் பக்கவாட்டிலும் ஒரு மெல்லிய வெண்ணிறக் கோடு கழுத்திலி ருந்து வாலின் பாதி வரை தெளிவாக இருந்தது.

ஓணானைக் குறிபார்த்த பாம்பு

கொஞ்சம் கண் விலகினாலும் இதைக் கண்டறிவது கடினம். பாம்பு என்னைக் கவனிக்கவில்லை. ஓணானைப் பிடித்துண்ண குறிபார்த்துக் கொண்டிருந்தது. அதை ஓணானும் அறிந்திருக்கவில்லை. நீளமான பாம்பு, சுமார் ஐந்தடி இருக்கலாம். உடல் மெலிதாக நீண்டு பெரு விரல் அளவே காணப் பட்டாலும், நடு உடல் சற்றுப் பருத்திருந் தது. வால் ஒல்லியாகக் கிட்டத்தட்ட உடலின் பாதியளவுக்கு இருந்தது.

பாம்பு ஓணானைப் பிடிக்க மெல்ல முன்னேறியபொழுது, அதன் தலையைத் தெளிவாகப் பார்த்தேன். தலையின் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருந்தது. தங்க நிறத்தில் நீள்வட்ட வடிவ பெரிய கண்ணில் கரிய கண் பாவை, ‘சாவித்துளை’ போன்ற வடிவில் கிடைமட்டமாக இருந்தது. அதன் கூரான தலையைப் பார்த்தபொழுது, ஆச்சி சொன்னது நினைவில் தட்டியது. உறுதியாக அது பச்சைப்பாம்புதான். இது கண்கொத்திப் பாம்பு என்று கூறப்படுவது உண்டு. அன்றைக்குப் பயத்தில் அங்கிருந்து நகர்ந்தேன்.

மிதநஞ்சு மரவாழ் பாம்பு

பிற்காலத்தில் பாம்புகள் மீதான தேடுதல் தொடங்கிய காலம் தொட்டு நிறைய பச்சைப் பாம்புகளை அதே பகுதியில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. நாட்டின் வறண்ட நிலப்பரப்புகள், கடலோரப் பகுதிகள், புதர்க் காடுகள், மரங்கள் அடர்ந்த பகுதிகளில் பரவலாகக் காணக்கூடிய மரவாழ் பாம்பு இது. பகலாடியாகவும் குட்டி ஈனுபவையாகவும் இருக்கின்றன.

முன்பு அகத்துல்லா பேரினத்தில் ஏழு இனங்களாக இருந்தது. இன்றைய தேதிக்குப் பன்னிரண்டாக மாறியிருக்கிறது. இவ்வளவு காலம் நசுட்டா (Common Vine snake – Ahaetulla nasuta) என அழைக்கப்பட்டது. தற்போது ஆக்சிரிஞ்சா (Long-nosed Vine snake – Ahaetulla oxyrhyncha) எனப் பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

குறுகிய முக்கோணத் தலை பார்ப்பதற்குக் கூரான தோற்றத்தில் இருப்பதால், இவை கண்களைக் குத்தலாம் என நம்பப்படுகிறது. அசைவுகளைக் கூர்மையாக நோக்கும் இவை நம் விழி அசைவுகளால் கவரப்பட்டிருக்கலாமே ஒழிய, தாக்குவதற்கு வாய்ப்பில்லை.

வாழ்விடங்களில் கிடைக்கப்பெறும் பல்லிகள், ஓணான்கள், சிறு பறவைகள், தவளைகளை உணவாக்கிக்கொள்கின்றன. மேல்தாடையின் கடைவாயில் நஞ்சுப் பல்லைப் பெற்று மித நஞ்சுடைய பாம்பாக இருக்கிறது. இவற்றின் நஞ்சு நரம்பைத் தாக்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும் உடலில் செலுத்தப்படும் நஞ்சின் அளவு மிகக் குறைவு. தான் உண்ணும் சிறு உயிரினங்களைச் செயலிழக்கவைக்கும். மனிதருக்கு இதனால் எவ்வித ஆபத்துமில்லை. சில நேரங்களில் வலி யையும் வீக்கத்தையும் உண்டு பண்ணலாம்.

அடர்ந்த காடுகளைப் போலவே கிழக்குக் கடற்கரை பகுதிகளும், வறண்ட நிலப்பரப்பு களும், புதர்க்காடுகளும் வேறெங்கும் காண இயலாத பச்சைப் பாம்பு போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்களைக் கொண்டிருக்கின்றன.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x