Published : 13 Nov 2021 03:20 am

Updated : 13 Nov 2021 05:55 am

 

Published : 13 Nov 2021 03:20 AM
Last Updated : 13 Nov 2021 05:55 AM

நகர்வனத்தில் எஞ்சியிருக்கும் கீச்சொலிகள்

birds-of-bengaluru

ப்ரியா ராஜன்

தொண்ணூறுகள் வரையில் இந்தியாவின் தோட்ட நகரம், சொர்க்கம் என்றெல்லாம் அடைமொழிகள் கொண்ட நகரமாக பெங்களூரு இருந்தது. உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்பத் துறையின் வானளாவிய வளர்ச்சி யால் அசாதாரண வேகத்தில் மக்கள் குடியேற்றம், நகரக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை பெங்களூரு கண்டது. பசுமை குறைந்து கான்க்ரீட் காடுகள் முரட்டுத்தனமாக முளைக்கத் தொடங்கின. இன்று, நகர எல்லைகளில் எஞ்சியுள்ள நகர்வனங்கள் பல்லுயிர் பேணும் கருவறைகளாகவும், மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் கருவூலங்களாகவும் திகழ்கின்றன. அவற் றுள் ஒன்றுதான் கனகபுரா சாலையில் ‘தி வேலி ஸ்கூல்’ பள்ளியை அடுத்துள்ள சிறிய வனப்பகுதி.

பள்ளி நுழைவாயிலை ஒட்டியே இந்த வனத்தின் நுழைவும் உள்ளது. இங்கு இயற்கை ஆர்வலர் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு ஞாயிறு காலை ஏழு மணி. மண் பாதை யில் கால் பதித்த சில நொடிகளிலேயே, பல்வேறு விதமான கீச்சொலிகளைக் கேட்க முடிந்தது. பறவைகளைக் காணும் ஆர்வத்தில் அசை யாமல் ஓரிடத்தில் நின்றோம். இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையடைந்த பறவைகள், எங்கள் இருப்பைப் பற்றி அவற்றுக்குள்ளேயே ஒலியெழுப்பித் தெரிவித்துக்கொண்டனவே தவிர, முகம் காட்டவில்லை.

எட்டிப் பார்த்த பறவைகள்

காத்திருப்புக்குப் பின் ஒரு குண்டு கரிச்சான் (Oriental magpie robin) கிளைகளுக்கு உள்ளிருந்து பறந்து, மின்கம்பியின் மேல் வந்தமர்ந்தது. அதைக் கண்ட மணிப்புறா ஒன்று சூரிய ஒளியில் குளிக்க எண்ணி வெளிவந்தது. எதற்கும் கவலைப்படாமல் ஒரு செம்மீசை சின்னான் செடிக்குச்செடி தாவியது. இவை மூன்றும் அளித்த ஊக்குவிப்பால், சற்று முன் வரை அமைதியாக இருந்தது போலிருந்த வனம் மீண்டும் கீச்சொலிகளால் நிரம்பியது. சிறிது தொலைவில் புற்களுக்கு அப்பால் ஒரு சாம்பல் கதிர்கருவி (Ashy Prinia) தன் காலை உணவிற்குப் புழுக்களைத் தேடிக்கொண்டிருந்தது. மண் பாதையின் வளைவில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகளைப் பரப்பி, பிரம்மாண்டமான குடைபோல நின்றுகொண்டிருந்தது. அதனுள் ஒரு பொந்திலிருந்து ஆந்தையின் அலறல் இடைவெளிவிட்டு ஒலித்தது.

ஆலமரத்தின் கீழ் சிறிது நேரம் நின்று கவனித்தோம். ஒரு செம்மார்புக் குக்குறுவானும், வெண்கன்னக் குக்குறுவானும் தங்களது நிறங்களை ஒரு நொடி எங்கள் பார்வைக்கு விருந்தாக்கி மறைந்தன. அதே நேரம் ஆண் குயில் ஒன்று எங்களை நட்பென நினைத்து, வெகு நேரம் ஒரே கிளையில் அமர்ந்து காட்சி கொடுத்தது. மரத்திற்கு அப்பால் திறந்த புல்வெளி இருந்தது. அதில் சிறு புதர்செடிகள் வளர்ந்திருந்தன. ஆதவனின் கதிர் கள் படர்ந்து அந்த இடமே பொன் மஞ்சளாக ஜொலித்தது. புதர்களில் காட்டுச் சிலம்பன்களும் (Jungle babblers), தவிட்டுக்குருவிகளும் (Yellow-billed Babblers) கலகல வென கதைபேசித் திரிந்தன. புற்களில் மஞ்சளோடு மஞ்சளாக ஒரு கொண்டலாத்தி புழு பூச்சிகளைக் கொத்திக் கொண்டிருந்தது. ஒரு கரிச்சான்குருவி வெகு நேரம் மரக்கிளையில் அசையாது அமர்ந்திருந்தது. எங்களைப் போன்ற வேறு சில பறவை ஆர்வலர்களும் அமைதியாகப் பறவைகளைக் கவனித்தும் படமெடுத்தும் கொண்டிருந்தார்கள்.

அடர்மரப் பறவைகள்

புல்வெளியைக் கடந்து சென்ற ஒற்றையடிப் பாதை மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் கூட்டிச் சென்றது. அங்கிருந்து சீகாரப்பூங்குருவியின் குரலொலி மெல்லிசையைப் போலக் காற்றில் தவழ்ந்து எங்கள் காதுகளை வந்தடைந்தது. பூங்குருவியின் பாட்டு முடியும் தறுவாயில் கருஞ்சிட்டு (Indian Robin) ஒன்று மெல்லிய குரலை எழுப்பியது. இந்த ராகங்களை ரசித்தவாறு ஒரு தேன்சிட்டு தன் நீண்ட அலகால் மலர்களில் பூந்தேனைப் பருக எத்தனித்தது. இரு வேறு மரக்கிளைகளில் பழுப்புக் கீச்சான்கள் (Brown shrike) அமர்ந்திருந்தன. இவை தென்னிந்தியாவிற்கு ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் வலசை வருபவை. இதற்கிடையே, ஒரு தகைவிலான் (Barn Swallow) தான் இருந்த செடியிலிருந்து விருட்டென எழுந்து பறந்தது. ஒரு பட்டாணிக் குருவியும் (Cinerous tit), வெள்ளைக் கண்ணியும் (Oriental white eye) எட்டிப்பார்த்த பின் ஒளிந்துகொண்டன. ஆனால், ஒரு வெண்புருவச் சின்னான் விசனப்படாது வெளிவந்து காட்டுப்பழங்களைக் கொத்தித் தின்றது.

இலையோடு இலையாக வண்ணம் ஒத்திருந்த பச்சைக் கதிர்க்குருவி (Green warbler) ஒன்று சட்டெனத் தாவி ஒரு வண்டினைப் பிடித்தது. அதைப் பார்ப்பதற்கு ஒரு இலையின் நடனத்தைப் போலவே இருந்தது. இந்தக் காட்சியில் மெய்மறந்திருந்த எங்களை ஒரு தையல் சிட்டின் தொடர்ந்த கீச்சொலி திசைதிருப்பியது. இவை அனைத்தையும் மின்கம்பியின் மேலிருந்து ஒரு செவ்வலகு மலர்கொத்தி (Pale billed flowerpecker) கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது. வெயிலின் கடுமை அதிகரிக்கத் தொடங்கிருந்தது - காலை 9:30 மணி. வெப்பத்தால் புள்ளினங்கள் மரங்களுக்குள் ஒதுங்கவே, நாங்களும் திரும்பிச் செல்லத் தீர்மானித்தோம்.

கவனம் தேவை

இது போன்ற ஓரளவு மரங்கள் அடர்ந்த இயற்கையான வாழிடங்கள் எல்லா நகர்ப்பகுதிகளிலும் எஞ்சியிருக்கும். இது போன்ற நகர்வனங்களைக் கண்ணும் கருத்துமாகப் பேண வேண்டும். ஞெகிழிக் குப்பைகளோ, கண்ணாடி பாட்டில்களோ வீசி எறியாது வனங்களையும் அவற்றில் வாழும் பல்லுயிரையும் காப்பாற்ற வேண்டும். அத்துடன் நகரங்கள், நகர்வனங்கள், இயற்கையான வாழிடங்களில் வசிக்கும் உயிரினங்களைக் கணக்கெடுப்பதும் அவற்றின் இருப்பை பதிவுசெய்வதும் இன்றியமையாதது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் இடத்திற்கு இடம் பல்லுயிர்களின் வகைகள், எண்ணிக்கை, வலசை காலங்கள், வலசை தன்மைகள் பற்றிய புரிதல் உண்டாவதோடு, அவற்றின் வாழ்க்கைச்சூழலை மேம்பட்ட வகையில் பேணவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்பக் காலத்தில் உலக நாடுகளில் நகர்ப்பகுதிகளில் அமைந்திருக்கும் இத்தகைய இயற்கைத் தொகுதிகளின் பயன்கள் (ecosystem services) குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. மரங்கள் அடர்ந்த பூங்காக்கள், ஏரிகள், அவற்றை ஒட்டிய நடைபாதைகள், மரங்கள் அடர்ந்த சாலைகள் போன்ற இடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கு மக்கள் செல்லும் அதேநேரம், மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கும் அந்த இடங்கள் தீர்வளிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நகர்ப்பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் எஞ்சியுள்ள இயற்கையான வாழிடங்களையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதற்கு நிதியை ஒதுக்கீடு செய்யவதும், மக்களிடையே இப்பகுதிகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம் என்றும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நகரம் என்பது மக்களுக்கானது மட்டுமல்ல. நம் வாழ்விற்கு அடித்தளமான இயற்கையைக் காப்பதையும், பல்லுயிர் பேணலையும் மறக்காமல் முன்னெடுப்போம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: dhuvipriya@gmail.com

படங்கள்: ப்ரியா ராஜன்
பெங்களூருஉலகமயமாக்கல் தகவல் தொழில்நுட்பத் துறைமக்கள் குடியேற்றம்Ashy PriniaJungle babblersYellow-billed BabblersBirds of bengaluru

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x