

கடந்த வாரம் 2 லட்சம் ரூபாய் டிராக்டர் கடனைக் கட்ட இயலாமல் பெரம்பலூரில் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார், அதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு விவசாயி பாலன் கடைசி இரண்டு தவணை டிராக்டர் கடனைச் செலுத்தாதகாரணத்தால் காவல்துறையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் சாதாரண விவசாயிகளின் இன்றைய நிலைமை என்ன என்பதை எடுத்துச் சொல்கின்றன.
உழவு, நாளுக்கு நாள் தோற்கும் தொழிலாக மாறிக்கொண்டு வருவதைக் கண்டு சினங்கொள்வதைத் தவிரப் பொதுமக்களோ, ஊடகங்களோ, அரசு இயந்திரங்களோ வேறு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
மயிலாடுதுறை வட்டத்தில் 400 ஏக்கர் நிலம் கொண்ட மேலாநல்லூர் என்ற வளமான சிறு கிராமத்தில் 10 வருடங்களுக்கு இயற்கையாக நெல் சாகுபடி செய்தேன். 2002 முதல் 2012-க்கு உட்பட்ட அந்தக் காலத்தில் தன்னிறைவும் வளமும் நிறைந்ததாக இருந்த அந்தக் கிராமம் அரசியல், வணிக அழுத்தங்களால் சிதைந்ததை நேரடியாகக் கண்டேன்.
முழு ஏமாற்றமளிக்காத வகையில் இன்றைக்கும் அந்தக் கிராமம் வளமாக இருக்கிறது. ஆனால், அதன் ஆதாரமாக இருந்த தன்னிறைவு பெரிதும் சிதைந்துவிட்டது. பல நில உடமையாளர்கள் நகைக் கடன், வங்கிக் கடன், கூட்டுறவுக் கடன், தனியாரிடம் கடன் என்று பலவிதங்களில் கடன்பட்டுள்ளார்கள். ஒரு காலத்தில் கடன் என்றால் என்னவென்றே அறிந்திராத விவசாயிகள், இன்றைக்குக் கந்து வட்டிக்காரர்களிடம் எப்போதும் கடன்பட்டு நிற்கிறார்கள்.
மயக்கும் விற்பனை ஜாலங்கள்
எங்கள் கிராமத்துக்கு வரும் டிராக்டர் விற்பனையாளர்கள் தினமும் ஊர் முழுக்க அலைந்து திரிந்து கடனுக்காவது டிராக்டர் வாங்கிக் கொள்ளும்படி உழவர்களிடம் விற்பனை ஜாலங்கள் நிகழ்த்தியதை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். வாடகை டிராக்டரால் ஒரு ஏக்கர் நாலு சால் உழுவதற்கு ஆகும் செலவு, அதே சொந்த டிராக்டரில் உழுவதால் மிஞ்சும் பணம், எஞ்சிய நேரத்தில் மற்ற விளைநிலங்களை உழுவதால் கிடைக்கும் உபரி வருவாய், இவற்றிலிருந்து கிடைக்கும் மொத்த வருட வருமானம், அதில் கடன் தொகைக் கழிவு ஆகியவை போக எஞ்சும் பணம் என்று அழகான மாயக் கணக்குகளைக் காட்டி டிராக்டர் வாங்க உழவர்களை வற்புறுத்துவார்கள்.
இந்த மாயங்களை அறியாத உழவர்கள் அவர்களுடைய வலையில் சிக்கி, நிலத்தை அடமானம் வைத்துக் கடனுக்கு டிராக்டர் வாங்குவார்கள். வங்கியோ டிராக்டர் கம்பெனிக்கு நேரடியாகக் காசோலையைத் தந்துவிடும். வங்கிக்கும் லாபம், கம்பெனிக்கும் லாபம், அப்பாவி உழவன் மட்டும் கடன் சுமையில் தத்தளிப்பான்!
விவசாயப் பணிக்காக ஊருக்குள் ஒருவரை ஒருவர் சார்ந்தும், தற்சார்புடன் திகழ்ந்த நிலம் சார்ந்த வாழ்க்கை முறை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டுக் கிராமங்களில் நிலவி வந்துள்ளது. இந்த வாழ்க்கை முறையைச் சிதைத்து உழவரையும் தொழிலாளிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பல சந்தைச் சக்திகள் கையாண்டுள்ளன; அறிந்தோ, அறியாமலோ அவற்றுக்கு அரசும் 60 வருடங்களாகத் துணைபோயிருக்கிறது.
இதன் ஒட்டுமொத்த விளைவாக, இப்போது கிராம மக்கள் அனைவருமே அரசின் திட்டங்களையும், கொள்முதலையும், மானியத்தையும், இலவசங்களையும் சார்ந்து வாழ ஆரம்பித்துவிட்டார்கள். “நிலம் என்னும் நல்லாள்', தன்னை எல்லோரும் மறந்துவிட்டதை எண்ணி நகுகிறாள்.
உழவைப் பிடித்த பிசாசுகள்
இந்தியாவில் உள்ள 40 கோடி ஏக்கர் விளைநிலங்களும் விதை, டிராக்டர், டீசல், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்குச் செலவிடும் மொத்தத் தொகை - குறைந்தபட்சமாக ஏக்கருக்கு 3,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட - இந்தச் சந்தையின் வருட மதிப்பு ரூ. 1,20,000 கோடி! இச்சந்தையின் வலிமையும் சுரண்டலும்தான் உழவனின் வறுமைக்கும் தற்கொலைக்கும் உண்மைக் காரணம்.
ஒரு காலம்வரை வெளி இடுபொருள் எதுவுமே தேவைப்படாமல் உணவுப் பொருட்களைக் கிராமத்திலிருந்து ஏற்றுமதி செய்துவந்த விவசாயி, இப்போது வருடா வருடம் பல்லாயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்து கொண்டிருக்கிறான். பற்றாக்குறையால் கடனில் சிக்குகிறான். இது உழவனைப் பிடித்த முதல் பிசாசு.
உணவுப் பண்டங்களை மக்களுக்கு விற்ற உழவன், இப்போது ராட்சத உணவுத் தொழிற்சாலைகளுக்குக் கச்சாப் பொருளை விற்கிறான். தொழில் என்பது எப்போதுமே தன் கச்சாப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க முயல்வது. அதனால், உழவனுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை எப்போதும் குறைவாகவே உள்ளது. (இது போதாதென்று உணவில் அந்நிய முதலீடு 100 சதவீதமாக மாறப் போகிறது!). இது உழவனைப் பிடித்த இரண்டாம் பிசாசு.
உழவுத் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, 100 நாள் வேலைத்திட்டம் என வாரி கொடுக்கும் அரசின் போக்கினால் உழவுத் தொழிலாளர்கள் உழைக்காமலேயே உயிர் வாழும் நிலை வந்துவிட்டது. இதனால் உழவர்கள் உற்பத்திக்கு இயந்திரங்களைச் சார வேண்டியுள்ளது. கடுமையான உணவு விலையேற்றத்துக்கு இதுவே மூலக் காரணம். இது மூன்றாம் பிசாசு.
இவை எல்லாவற்றையும்விட, உலகுக்கு உணவு தரும் உழவை மதிக்காமல் ‘வளர்ச்சி', 'நகரமய மாக்கல்' என்று பிரதமர் தொடங்கி உள்ளூர் விரிவாக்கப் பணியாளர்வரை உழவை மட்டம் தட்டுவதும் தொழில்நுட்பம் மட்டுமே உழவைக் காக்கும் என்றும் அடிப்படை புரிதலற்று உளறுவதும், தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தின் மேல் கிராம மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் தகர்க்கின்றன. இந்தியா போன்ற வேளாண்மையை அடிப் படையாகக் கொண்ட நாடுகளுக்குத் தொழில்நுட்பம் ஒரு மருந்தாக இருக்க வேண்டும், உணவாக அல்ல.
தீர்வு என்ன?
இதற்கு என்னதான் தீர்வு? எல்லாருக்கும் தெரிந்ததுதான் - எளிமையானதுதான். ஆனால், எல்லா மருந்துகளையும் போலவே கடைப்பிடிக்கக் கடினமானது. இயற்கை வேளாண்மையைத் தீவிரமாகப் பரப்புதல், உழவிலும் உணவிலும் அந்நிய முதலீட்டைத் தடை செய்தல், வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களில் அரசின் இலவசங்களை நிறுத்துதல், மானியங்களை ஒழித்தல், உணவு இறக்குமதியைத் தடை செய்தல், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவையே. இவற்றைச் செய்தால் உலகுக்கு உணவு தரும் உழவும், உழவனும் நன்கு வாழ்வார்கள்.
கட்டுரையாளர், இயற்கை வேளாண் ஆர்வலர்
தொடர்புக்கு: balaji@kaani.org