

‘இன்றைய செய்தித்தாளில் வெளியான செய்தி. மறக்காமல் படிக்கவும். இரவு பேசலாம்’ என்கிற குறுஞ்செய்தியோடு இரண்டு சிறு செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார் நண்பர். ஒன்று ‘வீட்டுற்குள் விசிட் அடித்த விரியனை லாகவமாகப் பிடித்த பாம்பாட்டி’. ஆனால், அந்தப் பாம்பாட்டி கையில் வைத்திருந்ததோ மண்ணுளிப் பாம்பு. மற்றொன்று ‘இருதலை மணியனை விற்க முயன்ற இருவர் கைது’. இதுவும் புதிதல்ல மக்களை ஏமாற்றும் நூதன கொள்ளையில் ஒன்றே.
நான் இரவு உணவை முடித்து எழுந்தபோது, சொன்னபடி நண்பர் அழைத்துப் பேசினார். “அது எப்படி, விரியனை வெறுங்கையால் பிடிக்க முடியும்?”. “நண்பா, முதலில் அது விரியனே கிடையாது. அது மண்ணுளிப் பாம்பு (Common Sand Boa-Eryx conicus). இரண்டாவதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லவே தேவையில்லை, ஊருக்கே பரிச்சயமான இருதலை மணியன்தான் (Red sand boa - Eryx johnii)”.
மாறுபட்ட பண்புகள்
‘எரிசிடே’ (போவாஸ்) குடும்பத்தில் ‘எரிக்ஸ்’ பேரினத்தில் காணப்படும் மூன்று இனங்களில் இவ்விரு இனங்களும் வருகின்றன. இவை நஞ்சற்றவை. இவற்றின் பொதுவான தன்மை: வளர்ந்த பாம்புகள் கை தடிமன் அளவும் மூன்றடி நீளத்துக்கும் வளரலாம். தலை சிறியது, கழுத்து தெளிவற்றது, சிறிய கண்ணில் செங்குத்தான கண் பாவையைக் கொண்டவை. தரைவாழ் பண்பைக் கொண்ட இரவாடிகளான இவை குட்டியிடக்கூடியவை. சமவெளி, வறண்ட நிலம், விவசாய நிலங்கள், தோட்டங்களில் இவற்றைக் காணலாம். எலி வளைகள், கரையான் புற்றுகள், கல் இடுக்குகள் போன்ற இடங்களில் வசித்தாலும் இலகுவான உலர் மணல் பரப்புகளில் புதைந்து வாழ்வதையே விரும்புகின்றன. இதற்கு ஏற்றாற்போல தலை ‘டம்ளர்’ வடிவிலும் முகவாய் கடினத்தன்மையோடும், நாசித்துவாரம் சற்று மேலேயும் இருக்கின்றன.
நாடு முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும் அடர்ந்த காடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் இவை இருப்பதாக அறியப்படவில்லை. இவற்றின் உணவுப் பட்டியலில் கொறிவிலங்குகள், ஊர்வன, சிறு பறவைகள் அடங்கும். இவை இரையைப் பிடித்த மறுநொடி உடலால் நன்கு சுற்றி வலிமையான தசையால் இரையின் உடலை இறுக்கி சுவாசத்தைத் தடை செய்த பின், விழுங்குகின்றன.
இரண்டு தலையா?
மற்ற பாம்புகளிடமிருந்து இவற்றின் உருவமைப்பு வேறுபட்டுக் காணப்பட்டாலும், மண்ணுளிப் பாம்புக்கும் இருதலை மணியனுக்கும் இடையிலேயே உடல், நிற அமைப்புகளில் வேறுபாடு உண்டு. மண்ணுளியின் உடல் சற்றுப் பருத்தும், வால் பகுதி கூம்பு வடிவில் சிறிதாகவும் இருக்கிறது. பார்க்க வழவழப்பாகத் தெரிந்தாலும், தலையிலும் வாலிலும் உள்ள செதில்களில் சொரசொரப்புத் தன்மையை உணர முடிகிறது. இதன் உடலில் பின்னந்தலையில் ஆரம்பித்து வால் நுனி வரை நடு முதுகில் மேகம் போன்ற முத்திரைவடிவம் பழுப்பு/ சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. அடிவயிறு வெள்ளை நிறத்தில் உள்ளது.
இருதலை மணியன் மேடுடைய செதில்களைப் பெற்றிருந்தாலும் தொட்டுணரும்பொழுது வழவழப்பான தன்மையைப் பெற்றிருக்கிறது. உடல் வலுவான, தடிமனான, சீரான உருளை அமைப்புடன் சதைப்பற்றாக இருக்கிறது. வால் பகுதி சற்று தடிமனாகவும், முனைப் பகுதி மழுங்கியும் பார்ப்பதற்குத் தலை போன்ற தோற்றத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பின் காரணமாக இப்பாம்பு இரண்டு தலையோடு இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் முழு உடலும் அடர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், பிறந்த குட்டிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும், வாலின் நுனியில் ஆரம்பித்து, குதப் பகுதி வரை நான்கு கரு வளையங்களையும் கொண்டிருக்கின்றன. வளர்ச்சி அடையும்பொழுது இந்த வளையங்கள் மறைந்துவிடுகின்றன.
தொடரும் மூடநம்பிக்கைகள்
இரண்டுமே சாதுவானவை. ஆனால், அச்சுறுத்தப்படும்பொழுது உடலைச் சுருட்டி, அடியில் தலையை மறைத்துக்கொண்டு வாலை மேலே வைத்து நம்மைத் திசைதிருப்ப முயலலாம். இது தற்பாதுகாப்புக்காக. திடீரென்று கடிக்கலாம். பற்கள் வலுவாக இருப்பதால், சிறிது காயம் உண்டாகலாமே தவிர, வேறு எந்தத் தொந்தரவும் ஏற்படாது. இவை கடித்தால் அல்லது நக்கினால் உடலில் ‘வெள்ளை வெள்ளையாக’ வரும், ‘தொழுநோய்’ வரும் என்று வதந்திகள் உண்டு. இந்த நோய்களுக்கான மூலகாரணம் வேறு.
வனப்பாதுகாப்புச் சட்டம் வருவதற்கு முன் மண்ணுளிகள் தோலுக்காகக் கொல்லப்பட்டிருக்கின்றன. வளர்ப்புப் பிராணி, நோய்க்கு மருந்து, அதிர்ஷ்டம் போன்ற மூடநம்பிக்கைகள் இவற்றின் வாழ்வை முடக்கியுள்ளன. இன்றும் இருதலை மணியனை ரகசியமாக விற்கவும், வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளவும் பலர் முயல்கிறார்கள். அப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றம். நண்பரிடமிருந்து அடுத்தடுத்து எழுந்த சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்லிக்கொண்டே இருக்க, நேரம் போனதே தெரியவில்லை. இரவு தூங்கச் செல்ல வேண்டும் என்கிற நினைப்பு வந்தது. இதுதான் மண்ணுளியும் மணியனும் விழித்திருக்கும் நேரம்.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com