பல்லுயிர் சின்னமாக அங்கீகரிக்கப்படுமா வாகைக்குளம்?

பல்லுயிர் சின்னமாக அங்கீகரிக்கப்படுமா வாகைக்குளம்?
Updated on
3 min read

தீபாவளி வந்துவிட்டாலே பறவைகளுக் காகப் பட்டாசு வெடிக்காத கிராமம் என்று தமிழ்நாட்டின் பல ஊர்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்க முடியும். தென் தமிழ்நாட்டில் இப்படிப் பறவைகளைப் பாதுகாத்துவரும் வாகைக்குளம் பகுதி முறைப்படி பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப் படாததால், இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பறவைகள் அங்கே நிம்மதியாக வாழ முடியும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பூமியில் மற்ற சூழல் அமைப்புகளைக் காட்டிலும் சதுப்புநிலங்கள்தாம் அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. நன்னீர் நிலங்களான குளங்கள், குட்டைகள், ஏரிகள், கண்மாய்கள் போன்றவை மனிதர்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வளிக்கின்றன. குடிநீர், பாசன நீர், மீன் உற்பத்தி, தாமரை - அல்லி போன்ற மலர் உற்பத்தி, மூலிகைச் செடிகள், வளமான கரம்பை மண் எனப் பல்வேறு வழிகளில் மனித சமூகத்திற்கு அளப்பறியா சேவைகளை நன்னீர் நிலைகள் வழங்குகின்றன. நன்னீர் நிலைகளின் இருப்பை உறுதிசெய்வது அவற்றில் வாழக்கூடிய இயல் தாவரங்கள், நீர்ப் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள்தாம். இந்த உயிர்ச்சூழலை மனிதர்கள் சீர்குலைக்கும் பட்சத்தில் நன்னீர் நிலைகளின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும்.

இதைச் சரியாகப் புரிந்துகொண்ட கூந்தன்குளம், திருப்புடைமருதூர், வடுவூர், வேடந்தாங்கல் போன்ற கிராம மக்கள் நீர்நிலைகளையும் அவற்றின் உயிர்ச் சூழலையும் பன்னெடுங்காலமாகப் பாதுகாத்துவருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள வாகைக்குளம் நீர்நிலையைச் சுற்றியுள்ள நாணல்குளம், வீராசமுத்திரம், மாலிக் நகர், வாகைக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அக்குளத்திலுள்ள மரங்கள், அங்கே வசித்துவரும் பறவைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் பாதுகாத்துவருகின்றனர்.

மரம் வெட்ட அனுமதி மறுப்பு

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வீராசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ளது வாகைக்குளம் நீர்நிலை. ராம நதி அணையிலிருந்து நீரைப் பெறும் இக்குளம் 300 ஏக்கர் விளைநிலத்துக்குப் பாசன நீரை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு வனத்துறை சமூகக் காடுகள் பிரிவு, ஸ்வீடன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இக்குளத்தில் 12.6 ஹெக்டேர் பரப்பில் கருவேலமரங்கள் வீராசமுத்திரம் ஊராட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு 1996 முதல் நட்டு வளர்க்கப்பட்டன. ஆனால், 2007இல் மரங்களை வெட்டுவதற்கு ஏலம் விடப்பட்டு 80 சதவீத மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. குளத்தில் மழைநீர் பெருகிவிட்டதால் மீதமுள்ள மரங்களை வெட்ட இயலவில்லை.

அச்சமயத்தில் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவளக் காப்பு மையத்தின் ஆய்வாளர் கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அடிவாரத்தில் உள்ள குளங்களில் காணப் படும் பறவைகள் குறித்த ஆராய்ச்சியை மேற் கொண்டு வந்தார்கள். வாகைக்குளத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்க்காகம், பாம்புதாரா, கூழைக்கடா, சாம்பல் நாரை, நத்தைக்குத்தி நாரை என 20 சிற்றினங்களைச் சார்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவை கள் தங்கி இனப்பெருக்கம் செய்வது பதிவுசெய்யப்பட்டது.

பறவைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. கிராம மாணவர்களுக்குப் பறவை காணுதல் பயிற்சியும் வழங்கப்பட்டது. மக்கள், ஆய்வாளர்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுக் குளத்தில் மீதமுள்ள மரங் களை வெட்டாமல், பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என திருநெல்வேலி மண்டல வனப்பாதுகாவலருக்கு மனு அளிக்கப்பட்டது. மரங்களை வெட்டுவதற்கு அப்போதைய வனப்பாதுகாவலர் அனுமதி மறுத்திருந்தார்.

மக்கள் போராட்டம்

வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வாகைக் குளத்தைப் பறவைகள் காப்பிடமாக அறிவிக்க வேண்டுமென்று அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவளக் காப்பு மைய ஆய்வாளர்கள் 2010 ஜூன் மாதம் வரைவுத் திட்டத்தை அரசுக்குச் சமர்ப்பித்தார்கள். இதற்கிடையே மரங்களை ஏலம் எடுத்திருந்த குத்தகைதாரர் மீதமுள்ள மரங்களை வெட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார், நவம்பர் 2010இல் இந்த வழக்குத் தள்ளுபடியானது.

அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்த நிலையில், ஆளுங்கட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த குத்தகைதாரர், வாகைக்குளத்தில் மீதமுள்ள மரங்களை வெட்டுவதற்கான ஆணையை வனத்துறையிடம் பெற்றிருந்தார். 2011 அக்டோபர் 1ஆம் தேதி மரம் வெட்டுதல் தொடங்கியபோது கிராம மக்களும் இளைஞர்களும் பறவைகளுக்கு வாழ்வளிக்கும் மரங்களை வெட்டக் கூடாது என மறியலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்தல் முடிந்த பிறகே மரங்களை வெட்ட வேண்டும் என அம்பா சமுத்திரம் தாசில்தார் கூறிவிட்டார். பிறகு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு மரங்களை வெட்டு வதற்கு நிரந்தரத் தடையாணைப் பெறப்பட்டது.

அங்கீகரிக்கக் கோரிக்கை

வாகைக்குளத்தில் 120 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 20 சிற்றினங்கள் அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. சராசரியாக 15, 000 உள்ளுர், வலசைப் பறவைகள் இக்குளத்திற்கு ஆண்டு தோறும் வருகின்றன. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், திருப்புடைமருதூரை அடுத்து வாகைக்குளத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இதைப் பெருமையாகக் கருதும் இக்கிராம மக்கள், வாகைக்குளத்திற்கு உரிய வகையில் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று ஒரு தசாப்தமாகக் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

பல்லுயிர் பரவல் சட்டம் 2002இன்படி வாகைக்குளம் பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படத் தேர்வாகியுள்ளதாகத் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியம் 2020 அக்டோபர் மாதமே செய்தி வெளியிட்டது. ஆனால், ஒரு வருடம் கடந்தும் களத்தில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

தீபாவளி வந்துவிட்டாலே பறவைகளுக் காகப் பட்டாசு வெடிக்காத கிராமம் என்பது போன்ற செய்திகளை ஏராளமாகப் பார்க்கி றோம். வாகைக்குளத்தைச் சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகளும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லை. வாகைக்குளம் பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் தீபாவளியைவிட மிகப்பெரிய கொண்டாட்ட மாகக் கிராம மக்களுக்கு அமையும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியம் எடுக்க வேண்டும்.

மேலும், வாகைக்குளம் பொதுப்பணித் துறை நிர்வாகத்தின் கீழ் வருவதால் பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதற்கு அத்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று தேவை. அது இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. அதேநேரம் பல்லுயிர் பாரம்பரிய சின்னம் என்பது அக்குளத்திற்கு வழங்கப்படும் அந்தஸ்து மட்டுமே, குளத்தின் நிர்வாகம் பொதுப்பணித் துறையின் கீழ்தான் இருக்கும். இது சார்ந்த புரிதலை தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியம் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர், அகத்தியமலை மக்கள்சார்

இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: mathi@atree.org

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in