நல்ல பாம்பு 05: வெள்ளிக்கோல் வரையன்
கட்டுரை, படம்: மா. ராமேஸ்வரன்
நண்பரின் வீடு ரயில் பாதை அருகில் இருக்கிறது. அந்த நெருக்கடியான இடத்தில் கடைசி ரயில் இரவு 9.30 மணிக்குக் கடந்த பிறகு, வீட்டை அமைதி சூழ்ந்துவிடும். அவர்கள் தூங்க ஆயத்தமாகும் நேரம் அது. அன்று நண்பரின் அம்மா முகம் கழுவக் கொல்லைப்புறம் போய் மின்விளக்கைப் போட்டபொழுது, அங்கிருந்த மின்சார பட்டியைப் பற்றியபடி ஒரு அடி நீளமுடைய பாம்பு ஒன்று மெல்ல மேல் நோக்கி ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். நண்பர் வருவதற்குள் அது பரணில் ஏறி மறைந்துவிட, அன்று இரவு அவர்களின் தூக்கம் போனது. அதிகாலையில் எனக்குத் தகவல் கிடைக்க, அங்கு விரைந்தேன். “அந்த பாம்பு ஓரடி நீளத்தில் மெல்லியதாக, கரிய நிற உடலில் குறுக்கு வரிகளுடன் இருந்தது, இயல்பாக அந்த சுவரில் ஏறியது” என்றார் நண்பரின் அம்மா.
அவர் சொல்வது சரியாக இருந்தால் அது வெள்ளிக்கோல் வரையனாகத்தான் இருக்க வேண்டும். அந்தப் பாம்பு இரவே கீழே இறங்கிச் சென்றிருக்கலாம். அங்கேயே இருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். இருந்தாலும் பரணில் ஏறி பாம்பைத் தேடினேன். பரண் முழுக்க பழைய பொருட்கள் நிரம்பியிருந்தன. ஒவ்வொன்றாகக் கவனமாகத் தேடியபோது, பாம்பைப் பார்த்தேன். ஒரு மரச்சாமான் ஊடே சுருண்டிருந்தது. ‘இது வெள்ளிக்கோல் வரையன் (Common Wolf Snake - Lycodon aulicus), நஞ்சற்றது’ என்றேன். அம்மா குறுக்கிட்டு, “இல்லை தம்பி, நான்தான் சொன்னேன்ல உடல் முழுக்க வரிவரியாக இருந்ததுன்னு, இது கட்டுவிரியன் குட்டிதான், நீ பத்திரமாக இரு” என்றார்.
எப்படி வேறுபடுத்தி அறிவது?
உடலில் வரி போன்ற அமைப்பு இருப்பதாலே, நஞ்சுடைய கட்டுவரியன் என நஞ்சற்ற பாம்புகளையும் எண்ணுகிறோம். இந்தப் பாம்பு கொலுபிரிடே குடும்பத்தில் லைகோடான் என்ற பேரினத்தில் ஒன்று. இதுவரை 17 இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன. அதில் ‘ஆயுலிக்கஸ்’ நாடு முழுவதும் காணப்படக் கூடியதாக இருக்கிறது.
இவ்வினம் அதிகபட்சமாக இரண்டரை அடி நீளமே வளரும். பருமனோ சுண்டுவிரல் தடிமனே இருக்கும். உடல் பளபளப்பாகக் காணப்படும். மென்மையான செதில்களுடன் கரிய அல்லது பழுப்பு நிற உடலில் வெள்ளை நிற குறுக்கு வரிகள் 20 வரை இருக்கலாம். முதல் வரி தலையின் பின்பகுதியில் கழுத்தை ஒட்டி ஆரம்பிக்கின்றது. ஆரம்ப வரிகள் தெளிவாகவும் வால் நோக்கிச் செல்ல செல்ல தெளிவற்றும் காணப்படும். இதுவே கட்டுவரியனில் நேரெதிராக இருக்கும். இது இந்த இனங்களைப் பிரித்தறிய உதவும். வெள்ளிக்கோல் வரையனின் தலை தட்டையாக இருக்கும். கண்கள் கருநிறக் கடுகு போன்று வெளியே துருத்திக்கொண்டிருக்கும். ஒல்லியான வால் கூர்மையான நுனியுடன், உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பங்கைப் பெற்றிருக்கிறது.
ஆர்வத் தூண்டல்
நான் பார்த்த வரையன், பல்லியால் கவரப்பட்டு வந்திருக்கலாம். இதன் முக்கிய இரை சிறு ஊர்வன, சிறிய கொறி விலங்குகள். இரையில் பல்லிகள் பிரதானம். இது ஒரு தரைவாழ் பாம்பு என்றாலும் சுவர், மரங்களில் ஏறுவதற்கு ஏதுவாக மரப்பாம்புகளைப் போன்றே வயிற்றுப் பட்டை ‘ப’ வடிவ செதில்களை ஓரளவுக்குப் பெற்றிருக்கிறது. கற்குவியல், மரப்பொந்து, சுவர் பிளவுகள் போன்ற பகுதிகளில் வசிக்கும் இரவாடிப் பாம்பு இது. இப்பாம்பு நஞ்சற்றதாக இருந்தாலும், கவனமாகக் கையாள வேண்டும். எதிர்ப்பு வரும்பொழுது சட்டெனக் கடித்துவிடும் இயல்பைக் கொண்டவை. நீண்ட முன் பற்களால் கடிப்பதால் வலி ஏற்படலாம்.
பாம்பைப் பிடித்த பின் தரையில் விட்டபோது சுருண்டு தன் முழு உடலையும் புரட்டி அடி வயிறு மேலிருக்குமாறு செய்தது. இது இறந்தது போன்ற பாவனை. இப்பொழுது அதன் அடிவயிற்றுப் பகுதியை நன்றாகப் பார்க்க முடிந்தது. வெள்ளை நிறத்தில் பிற பாம்புகளைப் போல் அல்லாமல், ஒளி ஊடுருவும் மெல்லிய தோல் அமைப்பைப் பெற்றிருந்ததால் உடல் உள்உறுப்புகளைத் தெளிவற்று காண முடிந்தது. அதன் வயிற்றில் முட்டைகள் இருந்ததை உணர முடிந்தது. கவனமாக அதை ஒரு டப்பாவில் இட்டு அம்மாவிடம் காண்பித்தேன். ஒரு புறம் பயம் இருந்தாலும் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
பாம்புகளை இனம் கண்டறிவது சற்று கடினம்தான்; ஆனால், அப்படி அறிய வேண்டும் என்கிற ஆர்வத்தைப் பெற்றிருந்தால், அடையாளம் காண்பது அனைவராலும் சாத்தியமே. “அதை எங்கே விடப்போகிறாய்?” என்று நண்பரின் அம்மா கேட்டார். “உகந்த இடத்தில்” என்றேன், “பார்த்து, பாம்பு பத்திரம்” என்றார் அம்மா அக்கறையுடன்.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
