

அமேசானுக்காக சிகோ மெண்டிஸ்
பிரேசில் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலர், அமேசான் காடுகளைப் பாதுகாக்கப் போராடித் தன்னுடைய உயிரை இழந்தவர் சிகோ மெண்டிஸ். உலகின் மிகப் பெரிய காடான அமேசான் காட்டைக் காக்கவும் பிரேசில் நாட்டு விவசாயிகள், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் வாழ்நாள் முழுக்கப் போராடினார் மெண்டிஸ்.
ரப்பர் மரத்தில் பால் வடிக்கும் குழந்தைத் தொழிலாளியாக ஒன்பது வயதிலிருந்து வேலை பார்த்த ஆரம்பித்த அவர்,18 வயதுவரை படிக்கவில்லை. ரப்பர் தொழிலாளிகளுக்குப் படிக்கக் கற்றுக்கொடுத்தால் கணக்கு கேட்பார்கள் என்று முதலாளிகளுக்கு அச்சம்.
அமேசான் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் பிரேசில் அரசிடம் கோரிக்கையை முன்வைத்தார். காடுகளை அழிப்பவர்களிடமிருந்து பல முறை அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. 1988-ம் ஆண்டு டிசம்பர் 22 அன்று அமேசான் காடுகளை அழித்துப் பண்ணை நடத்தும் ஒருவருடைய மகன், சிகோ மெண்டிஸைப் படுகொலை செய்தார். பிரேசில் உயிர் பன்மயப் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சிகோ மெண்டிஸின் பெயரைப் பிரேசில் அரசு வைத்துள்ளது.
ஓகோனி பழங்குடிகளுக்காக கென் சரோ விவா
சுற்றுச்சூழல்-மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிரைத் துறந்தவர் நைஜீரியக் கவிஞர் கென் சரோ விவா.
நைஜீரியாவில் நைஜர் பாசனப் பகுதியில் விவசாயத்தை அழித்து பெட்ரோலிய எண்ணெய் துரப்பணம் செய்யும் வேலையை ராயல் ட ஷெல் நிறுவனம் 1958-ம் ஆண்டு ஆரம்பித்தது. அதனால் இந்தப் பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டால் 5.5 லட்சம் விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அப்பகுதியில் அதிகமாக வாழும் ஓகோனி பழங்குடி மக்களின் தலைவராகச் செயல்பட்ட கவிஞர் கென் சரோ விவா, ‘ஓகோனி பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கம்' மூலம் எண்ணெய் துரப்பணம் செய்வதைக் கடுமையாக எதிர்த்தார். கச்சா எண்ணெய் மூலம் பெற்ற வருமானத்தில் பழங்குடி மக்களுக்குப் பங்கு தர வலியுறுத்தியும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3,00,000 ஓகோனி மக்களுடன் 1993-ம் ஆண்டில் அவர் அமைதி நடைபயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையில் நான்கு ஓகோனி தலைவர்கள் கொல்லப்பட்ட பிரச்சினையில் ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 1995 நவம்பர் 10-ம் தேதி கென் சரோ விவாவும் அவருடைய நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த வழக்கில் கென் சரோ விவா திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டார் என்ற விமர்சனம் உள்ளது.
கொரில்லாக்களுக்காக டியான் ஃபாஸி
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ருவாண்டாவில் மலை கொரில்லாக்களைப் பற்றி 18 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்தவர் அமெரிக்க உயிரியலாளர் டியான் ஃபாஸி. கொரில்லாக்களைப் பற்றிய அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின. கொரில்லாவைக் கடத்துபவர்களுக்கு எதிராகத் தனி நபராகப் போராடிவந்தார். அதுவே அவருடைய உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது. 1985 டிசம்பர் மாதம் 26-ம் தேதி ருவாண்டாவில் உள்ள விருங்கா மலைப் பகுதியில் இருந்த அவருடைய தங்குமிடத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.