Last Updated : 02 Oct, 2021 06:40 AM

 

Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

தேசிய காட்டுயிர் வாரம்: சமீபத்திய சூழலியல் நூல்கள்

தேசிய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படும் நிலையில், அண்மையில் வெளியான சில சூழலியல் நூல்கள் குறித்த அறிமுகம்:

நாட்டு விலங்குகள், கோவை சதாசிவம்

நம் மண்ணின் கால்நடைகள், உள்ளூர் வீட்டு விலங்குகள் கவனம் பெற்றுவரும் காலம் இது. கால்நடைகளிலும் பொருளாதார லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வெளிநாட்டு இனங்களின் இறக்குமதி, பிறகு அவற்றின் உற்பத்தியை அதிரடியாக அதிகரிக்கவும் விற்பனை செய்யவும் செயற்கை வழிமுறைகள் போன்றவை ஆதிக்கம் செலுத்திவருவது கண்கூடு. இந்த நிலையில் நம் நாட்டு உயிரினங்கள், அவை நம்மை வந்தடைந்த கதை, சூழலியல்-பொருளியலில் அவை ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றைப் பற்றி கோவை சதாசிவம் எழுதியுள்ள இந்த நூல் அலசுகிறது.

குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221

****

பறவைகளுக்கு ஊரடங்கு, செழியன். ஜா

தமிழகத்தில் பறவை நோக்கும் செயல்பாடு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் பொழுதுபோக்காக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பறவை நோக்குதலில் ஈடுபடுபவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சூழலியல் எழுத்தில் அடியெடுத்து வைத்துள்ள ஜா. செழியனின் முதல் நூல் இது. பல்வேறு பறவை சரணாலயங்கள், இயற்கையை உற்றுநோக்கிய அனுபவங்கள் இந்த நூலில் பதிவாகியுள்ளன. இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அறிமுக நூலாக இது இருக்கும்.

காக்கைக் கூடு வெளியீடு, தொடர்புக்கு: 90436 05144

***

எங்கெங்கும் மாசுகளாய்… மண் முதல் விண் வரை, ப. திருமலை

சூழலியல் எழுத்து கவனம் பெற்றுவரும் நிலையில், இதழாளர்களும் அது குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நிலம், நீர், காற்று, ஒலி மாசுகளைப் பற்றி இந்நூல் தனித்தனியாகப் பேசியுள்ளதுடன், நியூட்ரினோ திட்டம் பற்றியும் ஒரு கட்டுரை எடுத்துரைக்கிறது. ஞெகிழி ஏற்படுத்தும் ஆபத்தைப் பற்றி விவரித்துள்ள மூன்று கட்டுரைகளின் முடிவாக மஞ்சள் பை தூக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காடுகள், பறவைகள், யானை வழித்தடம் என இயற்கை பாதுகாப்பின் அவசியத்தைச் சுட்டிக்காட்டும் கட்டுரைகளுடன் இந்த நூலைப் படைத்துள்ளார் மூத்த இதழாளர் ப. திருமலை.

என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

***

சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும், மா. அமரேசன்

சுற்றுச்சூழல் சார்ந்த விவாதங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுவருவது ஆரோக்கியமானது. அதேநேரம் தேசிய, மாநில அளவில் ஒருவித மேட்டிமைத்தனத்துடன் சுற்றுச்சூழல் விவாதங்கள் நடப்பதையும் சேர்த்தே உணரலாம். ஏற்றத்தாழ்வும் சாதியமும் ஆதிக்கம் செலுத்தும் நம் நாட்டில் எல்லாப் பிரச்சினைகளிலும் இந்த அம்சங்கள் ஊடுருவியிருப்பதைப் பார்க்க முடியும். சமூகத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றிப் பேசும்போதும், அதன் ஆழ அகலங்களை ஆராய வேண்டியுள்ளது. அந்தத் திசையில் கட்டுரைகளைக் கொண்ட புத்தகம் இது.

அறம் பதிப்பகம், தொடர்புக்கு: 91507 24997

***

வானவாசிகள், பெ. சசிகுமார்

இயற்கையை நோக்கும் அனைவரையும் சட்டென்று வசீகரித்துவிடக்கூடியவை பறவைகள். அவை இருக்குமிடத்தைத் தேடி நாம் செல்லாவிட்டாலும்கூட, நாம் இருக்கும் இடத்துக்கு அவை வருவதுண்டு. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவை பறந்துசெல்லும்போதும்கூட அவற்றைப் பார்க்க முடியும். பறவைகள் எப்படிப் பறக்கின்றன,பறத்தலின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன,இறக்கை அமைப்பு எப்படியிருக்கிறது,இறக்கை அடிக்காமல் எப்படி அவை பறக்கின்றன,ஏன் கூட்டமாகப் பறக்கின்றன? - இப்படிப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332924

மருத்துவத் தாவரங்கள் வண்ணக் கையேடு

தாவரங்கள், குறிப்பாக மருத்துவத் தாவரங்கள் குறித்த வளமான மரபு நமக்கு உண்டு. அதே நேரம், மருத்துவத் தாவரங்களை அடையாளம் காணவோ, அவற்றின் சரியான பெயரை அறியவோ, அவற்றின் பயன்களை அறிவதோ அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. இந்த நிலையில் வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள 954 இந்திய மருத்துவத் தாவரங்களைப் பற்றிப் பேசுகிறது ‘Compendium of Traded Indian Medicinal plants’ என்கிற ஆங்கில நூல்.

இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 178 தாவர இனங்கள், மருத்துவத் தேவைகளுக்காக மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படுபவை. எஞ்சிய 776 தாவரங்களும் சிறிய அளவிலாவது வர்த்தக மதிப்பு கொண்டவை. உள்ளூர் பெயர்கள், விற்பனை செய்யப்படும் பாகம் குறித்த விளக்கம், விற்பனைத் தகவல், வகைப்பாட்டியல் விளக்கம், வாழிடம், இந்தியா-உலகத்தில் பரவிக் காணப்படும் நிலை, மருத்துவப் பயன்கள் போன்றவை இந்த நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, நாட்டு மருத்துவம் என எந்த மருத்துவ முறையில் இந்தத் தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 736 தாவரங்களுக்கு அவற்றின் முழுமையான, பாகங்கள் குறித்த தனித்தனி படங்கள் கொடுக்கப்பட்டிருப்பது, இந்தத் தாவரங்களை எளிதில் அடையாளம் காண உதவும்.

மருந்துப் பொருள் விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல் தாவரவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், காட்டு வளங்கள் சார்ந்து செயல்படுவோர் எனப் பலருக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும். மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் பெங்களூருவைச் சேர்ந்த Foundation for Revitalisation of Local Health Traditions (FRLHT) இந்த நூலைத் தொகுத்து வண்ணத்தில் வெளியிட்டுள்ளது.

Compendium of Traded Indian Medicinal Plants, K. Ravikumar, S. Noorunnisa Begum, D.K. Ved, J.R. Bhatt and G.S. Goraya, தொடர்புக்கு: FRLHT, 74/2, Jarakabande Kaval, Attur Post, via Yelahanka, Bengaluru – 560064, தொலைபேசி: 91 80 28568000

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x