Published : 06 Feb 2016 12:26 PM
Last Updated : 06 Feb 2016 12:26 PM

"விவசாயிகள் தற்கொலைக்கு மட்டும் தீர்வு கண்டால் போதுமா?" - யோகேந்திர யாதவ் நேர்காணல்

“சமூக நீதிக்கான அரசியலின் வெற்றியால் பாதிக்கப்பட்டது வேறு எதுவுமில்லை. அதே சமூகநீதிதான்!” என்று அவர் சொன்னபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்கிறது.

மறைந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் நினைவு சொற்பொழிவு சென்னையில் சமீபத்தில் நடந்தபோது 'ஸ்வராஜ் அபியான்' (சுதந்திரப் பிரசார இயக்கம்) நிறுவனர் யோகேந்திர யாதவ் உதிர்த்த சொற்கள்தான் இவை.

'ஆம் ஆத்மி கட்சி' மூலமாக அரசியலுக்கு வருவதற்கு முன் யோகேந்திர யாதவ் ஒரு பேராசிரியர்; தேர்தல் - தேர்தல் முடிவுகளை அலசும் ஆய்வாளர். 'ஆம் ஆத்மி'யில் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக வெளியேறி பிரசாந்த் பூஷணுடன் இணைந்து 'ஸ்வராஜ் அபியான்' இயக்கத்தை ஆரம்பித்தார். இது அவருடைய ஒரு முகம் மட்டுமே. அவருடைய இன்னொரு முகம் 'ஜெய் கிஸான் ஆந்தோலன்' (விவசாய உத்வேக இயக்கம்) இயக்கத்தின் நிறுவனர். விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இந்த இயக்கம் போராடுகிறது. அவருடன் மேற்கொண்ட உரையாடலில் இருந்து...

நாட்டில் 12 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும், அந்த மாநிலங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தீர்கள். அதற்குப் பதில் கிடைத்ததா?

ஆமாம்... 12 மாநில அரசுகளிடமிருந்து கடைசியாகப் பதில்கள் வந்துவிட்டன. ஆனால் எப்போதும்போல கண்துடைப்பு பதில்கள். ‘ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்', ‘மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கியிருக்கிறோம்' என எப்போதும் சொல்லப்படும், அதே பதில்கள்.

நாங்கள் கேட்டது அதையல்ல. வறட்சியைப் போக்குவதற்காக மாநிலங்கள் எடுத்த சிறப்பு நடவடிக்கைகள் என்ன என்பதுதான் எங்களுடைய கேள்வி. ‘மேனுவல் ஆஃப் டிரொட் மேனேஜ்மென்ட்' என்று மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறை இருக்கிறது. அதேபோல, காலனியாதிக்கத்தின்போது வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய ‘இந்தியன் ஃபமைன் கோட்' என்றொரு வழிமுறையும் உண்டு. இந்த இரண்டின் அடிப்படையில் வறட்சியையும் பஞ்சத்தையும் போக்குவதற்கு மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்று கேட்டால், எந்தப் பதிலும் இல்லை!

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா' குறித்து…

‘தேசிய விவசாயக் காப்பீட்டு திட்டம்', ‘திருத்தப்பட்ட தேசிய விவசாயக் காப்பீட்டு திட்டம்' என்ற பெயர்களில் இரண்டு காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் விவசாயிகளின் இழப்பைச் சரியான விதத்தில் அணுகவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

இப்போது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம், இந்த இரண்டு திட்டங்களையும் அங்கே இங்கே கொஞ்சம் மேற்பூச்சு செய்து, வேறு பெயரில் புதிய திட்டமாகக்கொண்டு வந்திருக்கிறது. அவ்வளவுதான்.

பயிர் இழப்புகளைச் சரியான முறையில் அளவிடுவதற்கு நீங்கள் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?

விளைச்சலில் ஏற்படும் சேதத்தை அளவிடுவது, பருவநிலையை அடிப்படையாகக்கொண்டு சேதத்தை அளவிடுவது என இரண்டு வகைகளில் பயிர் இழப்புகள் தற்போது அளவிடப்படுகின்றன.

இவற்றில் முதல் வகை, ஏதேனும் ஒரு பயிருக்கு ஏற்பட்ட சேதத்தை மட்டும் கணக்கில் கொள்கிறது. இரண்டாவது வகை, எல்லா விவசாயிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றாலும், பல விவசாயிகளுக்கு இதன் கீழ் காப்பீடு பெறலாம் என்பதே தெரியாது.

இவற்றுக்கு மாற்றாக, பயிர் இழப்பை அளவிடும் இரண்டு முறைகளை முன்வைக்கிறோம். முதலாவது வகை, பொதுவான அளவிடும் முறை. இதில் ஒரு பகுதியின் எல்லா விவசாயிகளையும், எல்லா பயிர்களையும், எல்லா விதமான சேதங்களையும், பயிர் வளர்ச்சியின் எல்லா நிலைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு விவசாயி, விவசாயக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருக்கிறாரா, இல்லையா என்பதையெல்லாம் தாண்டி அனைத்து விவசாயிகளும் இதன் மூலம் பயன் பெறுவர்.

காப்பீட்டு திட்டத்தில் ஒரு விவசாயி இணைந்திருந்தால், அவருடைய விளைச்சலில் ஏற்படும் சேதத்துக்கு ஏற்பத் தனியாகக் காப்பீடு வழங்கப்படும். இது இரண்டாவது வகை.

இன்னும் மூன்றாண்டுகளில் விவசாயக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 50 சதவீதம் அதிகரிக்கும் என்கிறது மத்திய அரசு. இது சாத்தியமா?

எப்படிச் சாத்தியமாகும்? இவர்கள் இப்படிச் சொல்வது முதல் முறை அல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து ஏற்கெனவே ஐந்து, ஆறு முறை இதையே திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கிறார்கள்.

வெறுமனே இழப்பீடாக அல்லாமல், நிவாரணத்தை அளிக்கும் காப்பீடாகவும் இந்தத் திட்டங்கள் இருக்க வேண்டும். காப்பீடு அளிப்பது அரசின் கடமையாக மட்டுமல்லாமல், அதைப் பெறுவது விவசாயிகளின் சட்டப்பூர்வமான உரிமையாகவும் மாற வேண்டும்.

‘எங்களுடைய இயக்கம் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறது' என்று சொல்லி வருகிறீர்கள். அதன்மூலம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு முடிவு கட்ட முடியுமா?

அதுதான் எங்களுடைய முதல் நோக்கம். வேளாண் பிரச்சினைதான் இன்றிருக்கும் பிரச்சினைகளிலேயே மிகப்பெரியது. விவசாயிகள் தற்கொலை, அதன் ஒரு அறிகுறி. நாம் இப்போதுவரை அறிகுறிக்குத்தான் மருந்து கொடுக்க முயற்சிக்கிறோம். நோயைக் கண்டுபிடித்துக் குணப்படுத்துவதுதான் அவசரத் தேவை!

மானியங்கள் திறனற்றவை என்றும், அதிகச் செலவை ஏற்படுத்துபவை என்றும் ஒரு முறை சொல்லியிருந்தீர்கள். விவசாய மானியங்கள் கூடவா?

அந்த மானியங்களை அரசு, நேரடியாக விவசாயிகளுக்குக் கொடுத்தால் நல்லது. ஆனால் விவசாயிகளுக்குப் பதிலாக உரக் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது. இதனால், விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டு உர நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

நீங்கள் நடத்திய ‘சம்வேதனா யாத்திரை'யில் விவசாயிகளின் நிலை பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கிடையில் அமைந்திருக்கிறது பூந்தேல்கண்ட் எனும் பகுதி. இங்கிருக்கும் 108 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில் 60 சதவீதக் குடும்பங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன. 39 சதவீதக் குடும்பங்கள் பருப்பைக் கண்ணால் பார்த்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. 40 சதவீதக் குடும்பங்கள் கால்நடைகளை விற்றுள்ளன. பெரும்பான்மையாக ஆதிவாசிகள் வசிக்கும் இந்தப் பகுதி மக்கள், காட்டில் கிடைக்கும் சில பொருட்களைக்கொண்டு ரொட்டி சுட்டு சாப்பிடுகிறார்கள். இப்போதைக்கு அது மட்டுமே அவர்களுடைய உணவு.

இந்தப் பிரச்சினையும் ஆய்வும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. காரணம், வெள்ளத்தைப்போல வறட்சி கவர்ச்சியானதாக இல்லை. நிலநடுக்கத்தைப் போன்று வறட்சியோ, பஞ்சமோ ‘பிரேக்கிங் நியூஸ்' ஆக மாறுவது இல்லையே.

விவசாயமும், விவசாயிகளும்தான் நமது எதிர்காலம்! அவர்கள் இல்லையென்றால் நமக்கு எதிர்காலம் இல்லை!

‘நாட்டில் இன்று சூழலியல் அரசியலுக்கான தேவை உள்ளது' என்று ஒரு முறை குறிப்பிட்டீர்கள். தேர்தல் அரசியலில் இது முக்கியத்துவம் பெறும் என்று நினைக்கிறீர்களா?

தேர்தல் அரசியலில் சூழலியல் கவனம் பெறுவது தேவைதான். ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ள சூழலியல் அரசியலைப் போன்றல்லாமல், நம் நாட்டுக்கான சூழலியல் அரசியலில் ஈடுபட வேண்டும். நம் நாட்டின் சூழலியல் அரசியல் என்பது ஆதிவாசிகள், மீனவர்கள், தலித்துகளுக்கான உரிமைகளைப் பெறப் போராடுவதுதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x