

ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதால் உள்ளூர் மாடுகளின் இனப்பெருக்கம் சீர்குலைந்து எண்ணிக்கை சரியும் என்ற வாதம் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு எதிரான வாதங்களும் ஆக்ரோஷமாக வந்துவிழுந்தன. ஆனால், உள்ளூர் மாட்டினங்களின் அழிவையும் தரமான காளைகளின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலைமையின் தீவிரத்தையும் உணர்த்துவதுபோல் குஜராத்திலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது.
மாடுகளின் சரிவு
நாடு முழுவதும் உள்ளூர் மாட்டினங்களின் எண்ணிக்கை அதிவேகமாகச் சரிந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், தரமான காளைகள் இல்லாமல் இருப்பது. மற்றொருபுறம் காளைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதற்கு மாறாக, செயற்கை கருவூட்டல் முறையில் மாடுகளை இனப்பெருக்கம் செய்வதிலேயே அரசும், வேளாண் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இயற்கையான இனப்பெருக்கத்தில் கிடைக்கும் மரபணு வளம்மிக்க மாடுகளைச் செயற்கை கருவூட்டல் முறைப்படி பெற முடியாது என்றும், உள்ளூர் மாட்டினங்களைப் பாதுகாப்பதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தடுமாறும் கிர் மாடுகள்
இதை நிரூபிப்பதுபோலப் புகழ்பெற்ற கிர் மாட்டினங்களை இனப் பெருக்கம் செய்வதற்காக 10,000 விந்து குப்பிகளைப் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்ய குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ. 50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய கிர் வகை மாட்டினம், அதிகப் பால் தருவதற்காக அறியப்பட்டது. பால் உற்பத்தியை ஊக்குவித்த வெண்மைப் புரட்சியில் கிர் மாட்டினத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஜெர்சி பசு மீதான மோகமும், வெளிநாட்டு மாட்டினங்களின் கட்டுப்பாடு இல்லாத இனப்பெருக்கமுமே கிர் மாட்டினத்தின் சரிவுக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
குஜராத்தில் மொத்தமுள்ள இரண்டு கோடி பால் மாடுகளில், கிர் மாட்டின எண்ணிக்கை வெறும் ஏழு லட்சமாகச் சரிந்துவிட்டது. அதனால்தான் விந்து இறக்குமதி செய்யும் முடிவைக் குஜராத் அரசு எடுத்திருக்கிறது.
அரசு அக்கறை காட்டுமா?
விடுதலைக்கு முன்னதாகப் பாவ்நகர் மகாராஜா நல்லெண்ண நடவடிக்கையாகப் பிரேசிலுக்குக் கிர் மாடுகளை அனுப்பியிருந்தார். அந்த மாடுகளினுடைய வாரிசுகளிடமிருந்தே தற்போது விந்து பெறப்பட உள்ளது.
அதேநேரம் இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த விந்து, கலப்புற்றதாக இருக்கலாம் என்று குஜராத் மாடு நல ஆணையம் சந்தேகிக்கிறது. "அதற்குப் பதிலாக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் ஒரு கிர் காளையை இனப்பெருக்கத்துக்காக அளித்து வருகிறோம். அதுவே உண்மையான பலனைத் தரும்" என்கிறார் குஜராத் மாடு நல ஆணையத் தலைவர் வல்லப் கதிரியா.
விந்து இறக்குமதிக்காக லட்சக்கணக்கில் குஜராத் அரசு நிதி ஒதுக்குகிறது. அதற்கு இணையான அக்கறையை உள்ளூர் மாட்டினங்களை இயற்கையாகப் பெருக்குவதிலும், காளைகளைப் பாதுகாப்பது சார்ந்தும் அரசு காட்டினாலே, நாளடைவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.