Published : 26 Jun 2021 06:44 PM
Last Updated : 26 Jun 2021 06:44 PM

தமிழ்நாட்டின் மாநில விலங்கும், சோலைப் புல்வெளிகளும்!

விலங்கினங்களில் மலைவாழ் குளம்பினங்கள் (mountain ungulate) வகையை சேர்ந்தவை வரையாடுகள் (Tahr). ‘வரை’ என்றால் ‘செங்குத்தான பாறை பகுதி’. செங்குத்தான பாறை நிறைந்த பகுதிகளில் வாழக்கூடிய ஆடு என்பதனால் வரையாடு என இது பெயர்பெற்றது. இவை, இமயமலைத் தொடர்களில் வசிக்கின்ற இமயமலை வரையாடுகள் (Himalayan Tahr - Hemitragus jemlahicus), அரேபிய மலைத் தொடர்களில் காணக்கூடிய அரேபியமலை வரையாடுகள் (Arabian Tahr - Arabitragus jayakari), தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்ற அரியவகை நீலகிரி வரையாடுகள் (Nilgiri Tahr - Nilgiritragus hylocrius) என மூன்று வகைப்படும். நீலகிரி வரையாடுதான் தமிழகத்தின் மாநில விலங்கு.

வரையாட்டைப் பற்றி தமிழ்ச் சங்க இலக்கியம் பல இடங்களில் எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் ஐந்திணைக் கோட்பாட்டில், குறிஞ்சித் திணையைப் பற்றிய பெரும்பான்மையான குறிப்புகளில் வரையாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரையாட்டின் மற்றொரு சிறப்பு, மலை சோலை-புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பில் (montane shola-grassland ecosystem) மட்டுமே வாழக்கூடியவை. ஓங்கிய சிகரங்களின் பாறை முகடுகளிலும், சரிவுகளிலும் அநாயாசமாக தாவித் திரிபவை. இவ்வகை சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பிற்கு வரையாடு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே வரையாட்டை 'மலைகளின் பாதுகாவலன்' (mountain guardian) என்று அழைக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

சோலை அமைப்பு

தென் இந்தியாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்ற ஒரு இன்றியமையா சுற்றுச்சூழல் அமைப்புதான் மலை சோலை-புல்வெளிக் காடுகள் (montane shola -grassland ecosystem). இது அச்சுறுத்தப்பட்ட நிலப்பரப்பாகும். பரந்து-விரிந்து கிடக்கின்ற புல்வெளிகளும் அதன் பள்ளங்களில் உள்ள குட்டையான, அடர்ந்த விதானம் (canopy) கொண்ட மரங்களை உடைய சோலைவனம் (shola) நிறைந்த தனித்துவப் பகுதிகள் இவை. இந்த சோலை-புல்வெளிகள் பல்வேறு காரணங்களால் பல நூறு ஆண்டுகளாக பரிணாம மாற்றங்கள் நிகழாமல் இருப்பதினால், இங்கிருப்பவை இறுதிநிலைத் தாவரங்கள் (climax vegetation) என்றும் அறியப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில், இந்திய வெப்பமண்டல மலை சோலை- புல்வெளிகளில் (tropical montane shola-grassland) பெரும்பான்மையான இடங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. குறிப்பாக நீலகிரி மலைகளின் புல்வெளிகளிலும், கேரளாவில் உள்ள மூணாறு, திருநெல்வேலி மாஞ்சோலை போன்ற இடங்களில் பெரும் பகுதி புல்வெளிகள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. பின்னர் அயல் மரங்கள் (exotic species), செடிகள் நடவு செய்யப்பட்டன. அதிக பகுதிகள் ஒற்றைத் தாவர வளர்ப்புக் காடுகளாக (monoculture plantations) மாற்றப்பட்டன. இவ்வாறு மாற்றப்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் பல்லுயிர் இழப்பு (biodiversity loss) ஏற்பட்டது என்பது பிற்காலப் புரிதல். இவ்வாறு மாற்றப்பட்ட பெரும் பகுதிகள் நீலகிரி மலைகள், பழனி மலைகள், மூணாறு மலைகளில் அமைந்துள்ளன.

சோலை-புல்வெளி பாதுகாப்பு

மற்ற உயிர்ச்சூழல் அமைப்புகளை காட்டிலும் சோலை-புல்வெளிகளில் உயிரினப் பன்மை (biodiversity) உயர்ந்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள்தான் அதிக அளவிலான நீர் பாதுகாப்பினை உறுதிசெய்கின்றன. மேலும், இங்கேதான் இயற்கையான ஊற்றுகள் சுரக்கின்றன. அவை சிற்றோடைகளாகி, பேரோடைகளாக மாறி, பல பேரோடைகள் ஒன்றுகூடி ஆறுகளாகவும், பேராறுகளாகவும் உருவாகி இந்த மலைகளைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான குடிநீர் - விவசாயத்துக்கான முக்கிய நீராதாரங்களாக அமைகின்றன.

தென்னிந்தியாவில் இமாலய மலைத்தொடர் போன்று பனிபோர்த்திய சிகரங்கள் இல்லை என்றபோதிலும், வற்றாத ஜீவநதிகள் பல உள்ளன. அவை அனைத்தும், மலை உச்சியில் படர்ந்து விரிந்து காணப்படும், சோலை-புல்வெளி காடுகளிலிருந்தே உருவாகின்றன. தென்னிந்தியாவின் தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய, சோலை-புல்வெளிகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 62,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் இயற்கையான சோலை-புல்வெளிகளாக மாற்றுவதற்கு ஏதுவான நிலங்களாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

வரையாடு பாதுகாப்பு

வரையாடு போன்ற அரிய விலங்கினங்கள் பாறைகள் நிறைந்த மலை சோலை-புல்வெளிகளில் மட்டுமே வாழக்கூடிய விலங்கினங்களாகும். இந்த வகை உயிர்ச்சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே, வரையாடுகளைப் பாதுகாக்க இயலும் என்பதும் நிதர்சனம்.

கேரளாவில் உள்ள மூணாறில் 2006இல் உலகளாவிய மலைவாழ் குளம்பினங்களுக்கான மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் தொடர்ச்சியாக 2008இல் வரையாடு பாதுகாப்பின் உத்திகளை வகுக்க, தமிழகம் - கேரளத்தில் உள்ள பெரும்பாலான வல்லுநர்களையும், பாதுகாப்புப் பணியில் இருந்த அன்றைய இரு மாநில வனத்துறை உயர்நிலை அலுவலர்களையும், உலக இயற்கை நிதியம் (WWF India) கோவையில் ஒன்றுகூட்டியது. வரையாட்டின் பாதுகாப்புக்கான உத்திகளை வகுத்து, வரையாட்டின் பாதுகாப்புக்கான முழுமையான ஆய்வில் இறங்கியது.

2008 முதல் ஆராய்ச்சியாளர்களின் குழு வரையாட்டின் வாழ்விடங்களான கேரள - தமிழகத்தில் வடக்கே உள்ள நீலகிரி மலை முதல் தெற்கே உள்ள குமரி மலைகள் வரை பெரும்பான்மையான இடங்களில் ஆய்வு நடத்தி, அதன் தொகை, அதற்கு ஏற்படும் மனிதத் தொந்தரவுகள் ஆகியவற்றை மதிப்பிட்டு 2015இல் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி உலகில் வரையாடுகளின் எண்ணிக்கை 3,122. அந்த ஆய்வில் இதுவரை அறிவியல் உலகம் அறிந்திராத 17 புதிய வரையாடு வாழிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 2021ஆம் ஆண்டிற்கான வரையாடுகளின் தொகையை தமிழகம் முழுவதும் உள்ள வரையாடு வாழ்விடங்களில் மேற்கொண்டுவருகின்றோம். நமது மாநில விலங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளோம். இந்தத் தொடர் பிரச்சாரத்தின் மூலம், வரையாடு போன்ற அருகிவரும் விலங்கினங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க முடியும் என நம்புகிறோம்.

(மு.அ. பிரெடிட், வரையாடு ஆய்வாளர். WWF-India வரையாடு பாதுகாப்பு திட்டத்தின் இணை-ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x