

ஆரோக்கியமான உணவைத் தேடி வாங்க வேண்டும் என்னும் புரிதல் மக்களிடையே அதிகரித்து வருகிறது. புறநகர்ப் பகுதியில் இந்தப் பொருட் களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்குச் சென்னை மேடவாக்கம் பகுதியில் இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறி, கனி, தானியங்களை லிங்க பைரவி இயற்கை அங்காடியில் விற்பனை செய்துவருகிறார் தாமோதரன்.
பாரம்பரிய அரிசிகள்
ரசாயனக் கலப்பில்லாத தானியங்களையும் பாரம்பரிய அரிசி வகைகளையும் வாங்குவதற்காக இந்த அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்களே அதிகம். கட்டச் சம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, சோனா மசூரி (கைக்குத்தல் அரிசி), குள்ளக்கார், கிச்சிலி சம்பா, சீரகச் சம்பா போன்ற அரிசி வகைகள் இங்கே கிடைக்கின்றன.
நெகிழி வேண்டாம்
மசூர் பருப்பு, உலர் பச்சைப் பட்டாணி, கருப்பு கொண்டைக்கடலை, வெண் கொண்டைக்கடலை, துவரம் பருப்பு போன்ற தானியங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. எல்லாப் பொருட் களும் தனித்தனியாக, அதற்குரிய தகர டின்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
"வாடிக்கையாளர்களே பையை எடுத்துவந்து பொருட்களை வாங்கு வதற்கு அறிவுறுத்துகிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கிறோம். காகிதப் பைகள், துணிப் பைகளில் பொருட்களைக் கொடுக்கிறோம். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயை வாடிக்கையாளர்கள் எடுத்துவரும் கலன்களில் ஊற்றிக் கொடுக்கிறோம்" என்கிறார் தாமோதரன்.
ஆரோக்கியத் தின்பண்டங்கள்
"ஆரோக்கிய உணவைக் குறித்த விழிப்புணர்வு பெரியவர்களிடமே சமீபகாலமாகத்தான் ஏற்பட்டுவருகிறது. அவர்கள் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு அந்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டும். குழந்தைகள் கேட்கிறார்களே என்பதற்காகப் பதப்படுத்தப்பட்ட உணவையோ, ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையோ கொடுக்காதீர்கள் என்று வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்துகிறோம்," என்கிறார். அப்படியானால் அதற்கு மாற்று?
குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட கமர்கட், எள்ளுருண்டை, அவல் மிக்சர், ராஜமுடி அரிசி முறுக்கு, தினை ரிப்பன் பகோடா, தினை அதிரசம், ஆலிவ் விதை லட்டு போன்றவை இங்கே கிடைக்கின்றன. இயற்கை அங்காடிக்குக் குழந்தை வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதையே முக்கியமாக நினைக்கிறோம் என்று புது உத்தி சொல்கிறார் தாமோதரன்.
தொடர்புக்கு: 98408 73848