

மக்கள்தொகை பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை விளக்கி, "ஒரு கட்டத்தில் வறியவர்களுக்கு உணவில்லாமல் போகும், பஞ்சம் பட்டினியால் உள்நாட்டுப் போர் நடைபெறும்" என்று இங்கிலாந்து பொருளாதார நிபுணர் தாமஸ் மால்தஸ் 1798-ல் எச்சரித்தார். புவியின் தாங்குதிறனுக்கு மேல் மக்கள்தொகை அதிகரிக்கும்போது, அதைச் சீரமைப்பதற்கு இயற்கையே கொள்ளை நோய்களையும் பேரிடர்களையும் உருவாக்கும் என்றார். இது மால்தஸின் பேரிடர் (Malthusian catastrophe) கோட்பாடு எனப்படுகிறது.
அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்களில் ஒன்றாக மால்தஸின் ‘மக்கள்தொகை கோட்பாடு’ விளங்கியது. உணவு உற்பத்தி அதிகரிக்கும் விகிதத்தோடு ஒப்பிடும்போது, மக்கள்தொகை பன்மடங்கு வேகத்தில் உயர்கிறது என்பதால், ஏதாவது ஒரு கட்டத்தில் உணவுப் பஞ்சம் வந்தே தீரும் என்பது மால்தஸின் வாதம். மால்தஸ் முன்வைத்த அதிக மக்கள்தொகை கருத்தாக்கத்தை (Overpopulation concept) அடிப்படையாகக் கொண்ட பல கருத்தாக்கங்கள் சூழலியல், பொருளாதாரம், சமூகவியலில் அடிக்கடி விவாதிக்கப்படுகின்றன.
கணக்கில் கொள்ளாத கோட்பாடு
மால்தஸின் காலத்துக்குப் பின் வந்த பல நிபுணர்கள், சூழலியல் சீர்கேடுகளுக்கும் அதிக மக்கள்தொகையையே காரணமாகச் சுட்டினர். மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைக்காவிட்டால் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும், அதுவே மனித இனத்தின் அழிவுக்கும் காரணமாகிவிடும் என்று அவர்கள் எச்சரித்தனர். பால் எர்லிக் 1968-ல்எழுதிய Population Bomb என்கிற நூல், இந்த வரிசையில் முக்கியமானது.
உணவு போன்றவை குன்றாத வளங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ அரிசியை எத்தனை பேருக்குப் பங்கிட முடியும்? ஆள்கள் அதிகமாக அதிகமாக, ஒருவருக்குக் கிடைக்கும் அரிசியின் அளவு குறையும். இந்த வகையில் தர்க்கரீதியாகப் பார்த்தால் மால்தஸின் கருத்தாக்கம் சரியானது என்றே தோன்றலாம். ஆனால், நவீன வேளாண் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது மால்தஸின் கருத்தாக்கம். அப்போது உணவு உற்பத்தியில் பெருமளவு மேலைநாடுகள்கூட தன்னிறைவு அடைந்திருக்கவில்லை. தவிர, மக்கள்தொகை என்கிற ஒரு அலகை மட்டுமே முன்வைத்து மால்தஸ் தன் கோட்பாடுகளை வகுத்திருந்தார். மனித மூளையின் சிந்திக்கும் திறன், உணவு உற்பத்தியை அதிகரிக்கும் புதிய நுட்பங்கள், தொழில் முன்னேற்றம் எதுவும் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
கருத்தடைத் திணிப்பு
மால்தஸின் கருத்தாக்கத்தால் வரலாற்றில் இன்னொரு பேராபத்தும் விளைந்தது. அதைத் தட்டையாகப் புரிந்துகொண்ட மேலை நாடுகள், பெரும் கருத்தடைத் திட்டங்களை (Mass Sterilization programmes) முன்வைத்தன. “வறியவர்கள் கணக்கின்றிக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பொறுப்பில்லாமல் நம் வளங்களுக்குப் போட்டிப் போடுகிறார்கள். ஆகவே, பயன்பாடற்ற இவர்களுக்குக் கருத்தடை செய்தால் தவறில்லை என்று நினைத்தார்கள்”என்று குறிப்பிடுகிறார் டேவிட் பெப்பர். அமெரிக்காவில் வாழ்ந்த விளிம்புநிலை மக்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கக் காலனி நாடுகளிலும், அமெரிக்காவிடமிருந்து உதவிபெறும் மற்ற நாடுகளிலும்கூடக் கருத்தடை நடைமுறைக்கு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
“அதிக மக்கள்தொகையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்”என்கிற எண்ணம் 1960-கள், 1970-களில் உலகெங்கும் வேகமாகப் பரவியது. பெரும்பாலும் வறியவர்கள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தொல்குடிகள் ஆகியோர் கட்டாயக் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல பகுதிகளில் மோசமான கருத்தடைச் சாதனங்களால் இறப்புகளும் நிகழ்ந்தன. சூழலியல்சார் அடிப்படைவாதம், இனவாதம் எல்லாம் சேர்ந்த இந்த வன்முறைக்கு, மால்தஸின் கணக்கீடுகளைக் காரணம் காட்டி வாதிட்டார்கள் இனவெறி ஆதரவாளர்கள்.
திசைதிருப்பும் வாதம்
“நமக்குத் தற்போதைய முக்கியப் பிரச்சினை மக்கள்தொகை அல்ல. உணவு -மற்ற வளங்களின் விநியோகத்தில் இருக்கும் பிரச்சினை, லாபத்தை மட்டுமே குறிவைத்து இயங்குகிற சந்தையின் பிரச்சினைகளே முக்கியமானவை” என்கிறது ஹாம்டன் கழகத்தின் ஒரு அறிவியல் கட்டுரை. உலகில் காலம் காலமாகத் தொடரும் ஏற்றத் தாழ்வுகளால், வளங்கள் சமமாக விநியோகிக்கப்படுவதில்லை. உணவு தன்னிறைவு அடைந்த நாடுகளில்கூட, பட்டினியாக உறங்கச் செல்லும் வறியவர்களும், உணவு மீந்துபோய்க் குப்பையில் கொட்டும் செல்வந்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். உலக மக்கள் அனைவரும் அமெரிக்கர்களைப் போல் தீவிர நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றினால், மக்கள்தொகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் உலகத்தால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.
மனிதனின் அடிப்படைத் தேவைகளைத் தொழில்மய சந்தை மூலம் பூர்த்திசெய்ய நினைப்பதை விடுத்து, அடித்தட்டு அளவில் நிறைவேற்ற முயல வேண்டும். செல்வத்தையும் வளங்களையும் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். சில பெருநிறுவனங்களின் குறுகிய கால லாப நோக்கத்துக்காக மண்வளம், நீர்வளம் உள்ளிட்ட அடிப்படை வளங்கள் பெருமளவில் சுரண்டப்படுகின்றன. அவற்றைத் தடுத்து, சரியான வகையில் நிர்வகிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. மற்ற பிரச்சினைகளைக் கணக்கில் கொள்ளாமல் மக்கள்தொகை பிரச்சினையை மட்டும் தனிமைப்படுத்தி பூதாகரமாக்கிக் காட்டுவது, மற்ற அரசியல் பிரச்சினைகளிலிருந்து நம்மைத் திசைதிருப்புவதாகவே இருக்கிறது.
“நம் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்வதற்கான வளங்கள் இந்தப் புவியில் உண்டு. ஆனால், நம் பேராசையைப் புவியால் தாங்க முடியாது” என்கிற காந்தியடிகளின் வரிகள் இந்த இடத்துக்குச் சரியாகப் பொருந்தும். குன்றும் வளங்களான புதைபடிவ எரிபொருள்களின் தேவையைக் குறைத்துக்கொள்வது, முறையான வள மேலாண்மை ஆகியவையே இதற்குச் சரியான தீர்வுகள். மக்கள்தொகை பெருக்கமே அனைத்துக்கும் காரணம் என்று பேசுவது வறட்டு வாதம்.அது சூழலியல்சார் வன்முறையிலேயே சென்று முடியும்.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com