

சீனாவின் கலப்பின அரிசித் தந்தை என்று புகழப்படும் யுவன் லொங்பிங் (91) கடந்த வாரம் மறைந்தார். தமது வாழ்நாள் முழுவதும் கலப்பின அரிசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, சீன மக்களின் பசியைத் தீர்த்த மாபெரும் அறிவியலாளர் அவர். லொங்பிங் இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார்.
சீனாவும் இந்தியாவும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பெரிய நாடுகள். இரு நாடுகளும் உணவுப் பிரச்சினை, விவசாய வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. யுவன் லொங்பிங் சீனாவில் உணவுப் பஞ்சத்தைத் தீர்த்ததன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து வறுமையை ஒழிக்க உதவினார். அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான இந்தியாவும் நலன் பெற அவர் உதவினார்.
இந்தியாவில்...
சீனக் கலப்பின அரிசியின் வணிக வளர்ப்பு 1976ஆம் ஆண்டிலேயே வெற்றி பெற்றிருந்தது. இந்தியா 1989ஆம் ஆண்டில் சுயமாகக் கலப்பின அரிசி வகைகளைக் கண்டறிந்து பயிரிடத் தொடங்கியது. சீனாவில் வெற்றி பெற்ற கலப்பின அரிசித் தொழில்நுட்பத்தை 1990ஆம் ஆண்டில் யுவன் லொங்பிங் இந்தியாவுக்குக் கொண்டுவந்தார்.
அப்போது இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்குச் சராசரி அரிசி உற்பத்தி 3,000 கிலோவாக இருந்தது. இந்திய விவசாயிகளுக்குக் கலப்பின அரிசி நடவு நுட்பங்களை யுவன் லொங்பிங் கற்பித்தார். நடவு செய்வதில் உள்ள சிரமங்களை நேரில் பார்த்துத் தீர்த்து வைத்தார். யுவன் லொங்பிங் - பிற சீன நிபுணர்களின் வழிகாட்டலுடன் கலப்பின அரிசியைப் பயிரிட்ட இந்திய மாநிலங்களில் அரிசி விளைச்சல் 15% முதல் 30% வரை அதிகரித்தது. இந்தியாவில் கலப்பின அரிசி வணிக உற்பத்தியையும் அவர் ஊக்குவித்தார். இந்தியாவின் கலப்பின அரிசி நடவு 1996ஆம் ஆண்டில் 10,000 ஹெக்டேராக இருந்தது.
2014ஆம் ஆண்டில் இந்த நிலப்பரப்பு 25 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியது. ஹெக்டேருக்குச் சராசரி அரிசி உற்பத்தி 6,000 கிலோவாக உயர்ந்தது.
லொங்பிங்குக்கு கவுரவம்
கலப்பின அரிசிப் பயிரிடலை ஊக்குவிக்கும் வகையில் யுவன் லொங்பிங் இந்தியாவுக்கு ஐந்து முறை வருகை தந்துள்ளார். அவருடைய பெயரில் உயர் தொழில்நுட்ப விவசாய நிறுவனம் ஹைதராபாத்தில் 1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது (longpingindia.com). இந்நிறுவனம் சர்வதேசக் கலப்பின அரிசி மாநாட்டை 2012ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் நடத்தியது.
கடந்த ஆண்டில் சீனா, தன் நாட்டில் வறுமையை ஒழித்துள்ளது. தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவும் விரைவில் வறுமையை ஒழித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஃபூ பெலின், கட்டுரையாளர்,
வெளிநாட்டுப் படிப்புகளுக்கான பெய்ஜிங் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மாணவி.