

இணையத்தில் ‘அழிந்துவரும் உயிரினங்கள்’ என்று தேடினால் புலி, காண்டாமிருகம், துருவக்கரடி, திமிங்கிலம், பாண்டா கரடி ஆகிய உயிரினங்களின் படங்களே முதற்பக்கத்தில் இடம்பெறுவது தற்செயலல்ல. பார்ப்பதற்கு அழகாகவும் பெரிதாகவும் வியக்கத்தக்கதாகவும் இருக்கும் உயிரினங்களுடன் மனிதர்களுக்கு ஒரு கூடுதல் பிணைப்பு ஏற்படுகிறது.
15 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்ட ஊனுண்ணிகளும், 100 கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்ட தாவர உண்ணிகளும் பேருயிர் (Megafauna) என வகைப்படுத்தப்படுகின்றன.
‘அழகான’, ‘அரிதான’, ‘வியக்கத்தக்க’, ‘அழிந்துவருகிற’, ‘அளவில் பெரிய’, ‘ஆபத்தான’ போன்ற விவரணைக்குள் அடங்கும் சில உயிரினங்கள் உண்டு. புலி தொடங்கித் துருவக்கரடி வரை 20 வகை உயிரினங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இவை ‘கவர்ந்திழுக்கும் பேருயிர்’ (Charismatic Megafauna) என்று அழைக்கப்படுகின்றன. ஏதோ ஒரு வகையில் நம் மனத்தில் இவை தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இந்த உயிரினங்களோடு உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.
அழகான உயிரினங்கள்!
கவர்ந்திழுக்கும் பேருயிர்களை அடிப்படையாக வைத்தே சூழலியல் பாதுகாப்பு இயக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காடழிப்பைப் பற்றிப் பேசும் ஒரு கட்டுரைக்கு, காட்டுத் தரைப்பகுதியில் காய்ந்த இலைகள், சிறு பூச்சிகள், காளான், புழுக்களால் இயங்கும் நுட்பமான உயிர்வலைப் பின்னலைக் காட்சிப்படுத்துவதைவிட, வெட்டப்பட்ட மரத்தில் உராங்ஊத்தன் குரங்கு அமர்ந்திருப்பதைப் போன்ற ஒளிப்படமே பயன்படுத்தப்படுகிறது. அது சட்டென்று பலரையும் கவர்ந்துவிடுகிறது. ஒரு யானை துன்புறுத்தப்பட்டதாகச் செய்தி வரும்போது பதறும் பலரும், ஓணான் ஒன்று கொல்லப்படுவதைச் செய்தியாகவே பாவிப்பதில்லை.
கவர்ந்திழுக்கும் தன்மையில் ‘அழகு’ என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. 1942-ல் வெளியிடப்பட்ட வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்த ‘பாம்பி’ திரைப்படத்தில், பெரிய கண்களுடன் ஒரு மான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அழகான அந்த உயிரினம் வேட்டையாடப்படும்போது கண்ணீர் விடாத பார்வையாளர்களே இல்லை எனலாம். ‘பாம்பி’ திரைப்படம் வேட்டைக்கு எதிரானது. ஆனால், அழகான அந்த மானுக்குப் பதிலாகக் கவர்ந்திழுக்காத ஒரு உயிரினம் வேட்டையாடப்பட்டிருந்தால், நமக்கு அதே உணர்வு எழுமா என்பது கேள்விக்குறிதான். அழகான உயிரினங்களுக்காக மட்டுமே கவலைப்படும் இந்த உளவியலை ‘பாம்பி விளைவு’ (Bambi effect) என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
ஏன் கவனக்குவிப்பு?
இப்படிக் கவர்ந்திழுக்கும் பேருயிர்களை மட்டுமே முன்வைத்து சூழலியல் பாதுகாப்பை மக்களிடம் முன்னெடுக்கும் வழக்கத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சிக்கலான, நுணுக்கமான சூழலை, ஒரு தனி உயிரினத்துடன் சுருக்கக் கூடாது என்பது சூழலியலாளர்களின் கோரிக்கை. பல நூறு உயிரினங்களாலான மழைக்காடுகளின் பிரதிநிதியாக ஏன் ஓர் உயிரினம் மட்டும் இருக்கிறது என்பது அவர்களின் கேள்வி. ‘பொதுமக்களிடம் அந்தச் சூழலியலைக் கவனப்படுத்துவதற்கான ஒரு பிம்பமாகத்தான் இவை பயன்படுத்தப்படுகின்றன’ என்று பதிலளிக்கிறார்கள் சில சூழல் பாதுகாப்பு நிபுணர்கள். விழிப்புணர்வு கிடைத்த பின்பு எல்லா உயிரினங்களுமே பாதுகாக்கப்படும் என்பது அவர்களது வாதம்.
சில பேருயிர்கள், பல்வேறு உணவுச்சங்கிலி களோடு தொடர்புடைய குடையினங்களாக (Umbrella Species) இருக்கின்றன. அவற்றைப் பேணிக் காத்தாலே, குடைக்குக் கீழ் பலர் வந்து கூடுவதைப் போல் பல உயிரினங்கள் காக்கப்படும். தவிர, சூழலியல் பாதுகாப்புக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு, உலகளாவிய நிதி ஒதுக்கீடு, திட்ட வரையறையாளர்கள், அரசுகளின் பங்களிப்பு ஆகிய எல்லாமே அத்தியாவசியம். ஆகவே, இந்தப் பேருயிர்களை முன்வைத்து சூழலியல் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. ‘யானைகள் பாதுகாப்புக் குழு’வோடு ஒப்பிடும்போது, ‘அலங்குகள் பாதுகாப்புக் குழு’வுக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம்.
அனைத்து இழைகளும் முக்கியமில்லையா?
சில பேருயிர்கள் மட்டுமே குடையினங்களாக இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். பாண்டா கரடிகளைப் பாதுகாக்கும்போது சில வகை காட்டுக்கோழிகளும் செம்மறியாடுகளும் சேர்த்தே பாதுகாக்கப்படுகின்றன. அதே வேளை பாண்டா கரடிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் பனிச்சிறுத்தைகள், ஓநாய்கள், காட்டு நாய்களின் எண்ணிக்கை குறைந்தும் இருக்கிறது. பேருயிர்களை மட்டுமே முன்னிறுத்துவதால் ஒரு சூழலியலுக்கு முக்கியமான மற்ற இனங்கள் கவனிப்பாரின்றி அழிகின்றன. எடுத்துக்காட்டாக, கடல் நட்சத்திரங்கள் அழியும்போது, சிப்பிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி, அந்தச் சூழலே சீர்குலைந்துபோகும் (Ecological collapse) ஆபத்து இருக்கிறது. ஆனால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களாக அவை பேசப்படுவதேயில்லை.
பேருயிர்கள் மீது விழும் அதீத வெளிச்சத்தால் சிற்றுயிர்கள், முதுகெலும்பற்ற உயிரினங்கள் ஆராய்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பதைச் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். சுற்றுச்சூழலின் நுண் அம்சங்களை ஆராய்வதாக இருந்தாலும் ஒரு பெரு விலங்கை ஆராய்ச்சிச் சட்டகத்துக்குள் சேர்த்துக்கொள்ளும் நெருக்கடி அவர்களுக்கு இருக்கிறது. பூச்சியியல் - தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு. சிற்றுயிர்கள், தாவரங்கள் பலவற்றின் சராசரி எண்ணிக்கை நிலவரம்கூட நம்மிடம் இல்லை என்பதே உண்மை நிலவரம். இதனால், அவை அழிந்துவருகின்றனவா என்பதும் தெரிவதில்லை.
கவர்ந்திழுக்கும் பேருயிர்களுக்குச் சூழலியல், பொருளாதார, சமூகச் சிறப்புகள் உண்டு. அவற்றை முன்வைத்து சூழலியல் பாதுகாப்பைப் பேசுவதால் சில நடைமுறை ஆதாயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், காண்டாமிருகங்களுக்கும் பென்குவின்களுக்கும் கிடைக்கிற முக்கியத்துவத்தை இறால்களுக்கும் சாணியுருட்டி வண்டுகளுக்கும் தில்லை மரங்களுக்கும் தரத் தயாராக இருக்க வேண்டும். சில இழைகளை மட்டுமே பாதுகாப்பதன் வழியாக, ஒட்டுமொத்த உயிர் வலைப்பின்னலைக் காப்பாற்ற முடியாது.
கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com