

தமிழ்நாட்டின் தேங்காய் உற்பத்தியில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக குமரிக்கு முக்கியப் பங்குண்டு. இங்கும் அதிகமாகத் தென்னை வேளாண்மை நடைபெற்றுவருகிறது. உள்ளூர்த் தேவை போக, எஞ்சிய தேங்காய்கள் விற்கப் படுகின்றன. ஆனால், அண்மை யில் பொள்ளாச்சி பகுதியிலிருந்து தேங்காய் வரத்து அதிகரிக்க, தேங்காய் விலை சரிவடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ரூ.30 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
நெல் ஜெயராமன் அமைப்புக்குத் தேசிய அங்கீகாரம்
இயற்கை வேளாண் மைத் தரச் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின்கீழ் இயங்கும் ‘பிரித்வி பாரம்பரிய இயற்கை உழவர்கள் அறக்கட்டளை’க்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தச் சான்றிதழைப் பெறுவதன் மூலம் மத்திய அரசு இயற்கை உழவர்களுக்கு வழங்கிவரும் நிதியுதவிகளைப் பெற முடியும். மேலும் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் இந்தச் சான்றிதழ் பயனுள்ளதாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட மாம்பழ சீசன்
மாம்பழத்துக்குப் பெயர்பெற்ற நகரம் சேலம். இதன் சுற்றுவட்டாரப் பகுதி களில்தான் அதிக அளவு மாம்பழ உற்பத்தி நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இங்கு நடைபெறும் மாம்பழச் சந்தைக்குப் பலவிதமான மாம்பழங்கள் வரும். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சேலம் சந்தைக்கு மாம்பழங்கள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா காரணமாக ஊரடங்கு இருப்பதால் மாம்பழ வரத்து குறைந்து, வியாபாரிகள் வருகையும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனாவால் அதிகரிக்கும் தேயிலை விற்பனை
கரோனா காரணமாகத் தேயிலைத் தூள் தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 93 சதவீத தேயிலை விற்பனை நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் தேநீர் அதிகம் பருகப்படுவதால், தேயிலைத் தேவை அதிகரித்துள்ளது. தேயிலை பயிரிடும் வடமாநிலங்களில் இயற்கைப் பேரிடர்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நீலகிரித் தேயிலைக்குத் தேவை அதிகரித்துள்ளது.
வேளாண் நிலத்தில் தொழிற்சாலை
வேளாண்மை செய்துவந்த இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. பல்லடம் அருகே கணபதிபாளையம் என்னும் கிராமத்தில் மஞ்சள், வாழை, காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்பட்டுவந்த நிலத்தை அதன் உரிமையாளர் தொழிற்சாலையாக மாற்ற முயல்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டு உள்ளது. இதற்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.