Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

பசுமை சிந்தனைகள் 03 - ‘பசுமைக் காவலன்’ எனும் மாறுவேஷம்

தாங்கள் பயன்படுத்துகிற பொருள்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவகையில் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் நுகர்வோரிடையே சமீப காலமாக அதிகரித்துவருகிறது. இது நுகர்வோர் விழிப்புணர்வு என்பதாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் கடைபிடிக்க வேண்டிய அறமாகவும் கருதப்படுகிறது. 1990-களின் முற்பகுதியிலிருந்தே இந்த மனப்பான்மை பரவலாகிவருகிறது எனலாம்.

நுகர்வோரிடம் சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்திருப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், இந்த மனப்பான்மையைப் பெரு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. 2015இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத பொருள்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவை சற்றே விலை கூடுதலாக இருந்தாலும், நுகர்வோர் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த மனப்பான்மையால் லாபம் ஈட்ட நினைக்கும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளம்பர உத்தியாக மட்டுமே பயன்படுத்தும் போக்கைக் கடைபிடிக்கின்றன. உண்மையில் இது பசுமைக் கண்துடைப்பு (Greenwashing) நடவடிக்கைதான்.

சூழலியல் பாதுகாப்புக்காக எந்த முயற்சியையும் முன்னெடுக்காமல், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவோ, தக்கவைத்துக்கொள்வதற்காகவோ சுற்றுச்சூழல் மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் பாவனை இது. 1986இல் அறிவியலாளர் ஜே. வெஸ்டர்வெல்ட் இந்தக் கருதுகோளை அறிமுகப்படுத்தினார்.

போலி கரிசனம்

‘நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நாங்கள் ஒரு மரம் நடுவோம்’ என்று போலியாக விளம்பரப்படுத்துவது, அந்தப் பொருள் சுற்றுச்சூழலைப் பாதிக்காது என்று மக்கள் மனத்தில் பதியவைப்பதற்காக மரங்கள், மலைகள், இயற்கைக் காட்சிகளை விளம்பரங்களில் சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் நிறுவனங்கள் பசுமைக் கண்துடைப்பு செய்கின்றன.

‘குறிப்பிட்ட வாகனம் கரிம உமிழ்வைக் குறைத்து வெளியிடுகிறது’ என்றொரு விளம்பரம் கூறலாம். அது உண்மையாகவே இருந்தாலும், அதன் தயாரிப்பு முறை சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், பொருளின் கரிம உமிழ்வை மட்டுமே விளம்பரப்படுத்தி, தாங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாக வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் நம்பவைக்கின்றன.

வெறும் கண்துடைப்பு

ஆதாரமில்லாத வாக்கியங்களை விளம்பரத் தில் சேர்ப்பது, சொல் விளையாட்டுக்களின் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையை மிகைப்படுத்திக் காட்டுவது, எளிதில் புரிந்துகொள்ள முடியாத வாக்கியங்களால் சுற்றுச்சூழல் அக்கறையை வெளிப்படுத்துவது ஆகியவை பிரபலமான பசுமைக் கண்துடைப்பு உத்திகள். ‘இந்தப் பொருள் சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது’ என்று கூறும் விளம்பர வாக்கியம் பிரபல எடுத்துக்காட்டு. குறிப்பிட்ட பொருள் எந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிக்காமலேயே விற்பனை செய்யும் கண்துடைப்பு உத்தி இது.

விற்பனைப் பொருளே சூழலியலுக்கு எதிரானது என்றாலும், அதைப் பேசுவதைத் தவிர்த்து சூழலியல் சார்ந்த மற்ற முன்னெடுப்பு களைச் செய்வதாகக் காட்டிக்கொள்வது இன்னொரு உத்தி. எண்ணெய் நிறுவனங்கள் காடுகளைப் பாதுகாக்க நிதியுதவி வழங்குவது, பசுமைத் திட்டங்களில் பங்கெடுப்பது ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். எடுத்துக்காட்டாக, ‘எங்கள் பொருள்களை 50 சதவீதம் கூடுதலாக மறுசுழற்சி செய்கிறோம்’ என்று கூறும் விளம்பர வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். எதைவிட 50 சதவீதம் கூடுதல் என்பது இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதேபோல், இக்கட்டான காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதாகச் சுற்றுச்சூழலுக்கு இணக்கமற்ற ஒரு நிறுவனம் கூறுவதும் பசுமைக் கண்துடைப்பு நடவடிக்கைதான்.

எப்படிக் கண்டறிவது?

நட்சத்திரக் குறியிட்டு, ‘நிபந்தனைகளுக்கு உள்பட்டது’ என்று குறிப்பிட்டுச் சூழலியல் பாதுகாப்பு பற்றிய விவரங்களை முன்வைப்பது இன்னொரு உத்தி. சில நொடிகளுக்கே வரும் விளம்பரங்களில், நட்சத்திரக் குறியிட்ட வாசகத்தை நுகர்வோரால் படிக்கவே முடியாது. தவிர, அந்த விளம்பரம் முழுக்கவே இயற்கைக் காட்சிகள், சலசலக்கும் அருவி, பறவைகளின் ஒலியால் நிரம்பியிருக்கும். ஆகவே, நிபந்தனைகள் பற்றிய குறிப்பு வருவதற்கு முன்பே நுகர்வோர் மனத்தில் அந்தப் பொருளின் பசுமை பற்றிய ஒரு பிம்பம் அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது.

அப்படியானால் சூழலியல் பாதுகாப்பை எதிர்பார்க்கிற நுகர்வோராக இருப்பது சாத்தியமே இல்லையா என்கிற கேள்வி எழலாம். கூடுதல் முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் பசுமைக் கண்துடைப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். பொருள்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களின் சூழலியல் சார்ந்த பார்வை, அணுகுமுறையைத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஒருமுறைக்கு இருமுறை தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். விளம்பரங்களை மட்டுமே நம்பிப் பொருள்களை வாங்காமல், பொருள் தயாரிப்பு முறை, அதில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள், தயாரிப்பு முறையில் பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள முயலலாம். வாங்கும் ஒவ்வொரு பொருளின் தயாரிப்பு நிலைகளைத் தெரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால், நிஜமாகவே சூழலியலைப் பாதுகாக்கும் பொருள்களை நம்மால் வாங்க முடியும்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x