

கடந்த ஞாயிறு அன்று அந்தியூரில் கால்நடைச் சந்தை நடைபெற்றது. இங்கு காங்கேயம் காளை மாடு ஜோடி ஒன்று ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை விற்பனையானது. சிந்துப் பசு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை, ஜெர்சிப் பசு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை, பர்கூர் இனப் பசு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை ஆகின.
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிக அளவில் செடி முருங்கை வளர்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் முருங்கைக்காய் உற்பத்தியும் அதிகம். காய் பறிப்புத் தொடங்கியுள்ள நிலையில் முருங்கைக்காய் வரத்து அதிகமாகியுள்ளது. அதனால், முருங்கைக்காய் விலை சரிந்துவருகிறது. கிலோ ரூ.6 வரை விற்கப்படுகிறது. காய் பறிப்புக் கூலி, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, வண்டி வாடகை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இந்த விலை வீழ்ச்சியால் நட்டம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள் உழவர்கள்.
வெற்றிலை விற்பனை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் வெற்றிலை அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்று. இங்கு நடைபெற்ற வெற்றிலை ஏலச் சந்தையில் வெள்ளைக்கொடி வகையில் 104 கவுளி இளம் வெற்றிலை ரூ.7,000-க்கும் முற்றியவை ரூ.4,000-க்கும் இளம் கற்பூர வெற்றிலை ரூ. 6,000-க்கும் முற்றியவை ரூ.3,000-க்கும் ஏலம் போயின. இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் ரூ. 1,000 கூடுதல்.
தக்காளி விலை வீழ்ச்சியும் எழுச்சியும்
சென்னை கோயம்பேடு சந்தையில் இந்த வாரத் தொடக்கத்தில் தக்காளி விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது. கிலோ ரூ.8 வரை விற்கப்பட்டது. இது கடந்த வாரத்தைக் காட்டிலும் ரூ. 2 கூடுதல். அதேநேரம் திண்டுக்கல் பகுதியில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.1.50 வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மீன் விலை உயர்வு
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைக்கு வந்ததால் மீன் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் 15-ல் தொடங்கிய இந்தத் தடை ஜூன் 14 முதல் 61 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும். இதனால் மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்தது.