

புளிச் சந்தை
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிப் பகுதியில் அதிக அளவில் புளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் புளிக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் கிராக்கி உண்டு. கிருஷ்ணகிரி பழையபேட்டைப் பகுதியில் ஞாயிறு, வியாழக்கிழமைகளில் புளி விற்பனைச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தையை நடத்துவதற்குக் கட்டமைப்பு ஏதும் இல்லாததால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது, வாடிக்கையாளர்களுக்கும் அசௌகரியம். இதனால், சந்தைக்கான கட்டமைப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும் எனப் புளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உற்பத்தி குறைவால் விலையேற்றம்
மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.5,500க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் ஒரு டன் ரூ.6,250க்கு விற்பனை ஆனது.
கொடுமுடித் தேங்காய்
கொங்குப் பகுதியில் தேங்காய்ப் பருப்புக்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முக்கியமானது கொடுமுடி. இந்த வாரம் அங்கு நடைபெற்ற ஏல விற்பனைக்கு 19,015 கிலோ தேங்காய்ப் பருப்பு வந்தது. முதல் தரம் ரூ.12,539 முதல் ரூ.11,899 வரை ஏலம் போனது. இரண்டாம் தரம் ரூ.12,199 முதல் ரூ.9,532 வரை ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட இந்த வார ஏலத் தொகை ரூ.500 அளவுக்குச் சரிந்துள்ளது.
அருந்தானிய ஆண்டு
ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு 2023ஆம் ஆண்டை அருந்தானிய ஆண்டாக (Year of Millets) அறிவித்துள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுக்குழுவில் இந்தியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தைக் கென்யா, நைஜீரியா, நேபாளம், ரஷ்யா, வங்கதேசம், செனகல் உள்ளிட்ட 70 நாடுகள் ஆதரித்தன. இந்த அறிவிப்பால் அருந்தானிய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.