

சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உருவாகும் அச்சுறுத்தல் எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது நாவல் கரோனா வைரஸ். சூழலியல் பிரச்சினைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம் என்றாலும், அவை வேறு எங்கேயோ யாருக்கோ நிகழ்கின்றன என்கிற வகையில்தான் அணுகி வருகிறோம். ஆனால், அது நம் அன்றாட வாழ்வை, வாழ்வாதாரத்தையே முடக்கிப் போடும் அளவுக்குப் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பதை உலகம் இப்போது உணரத் தொடங்கியிருக்கிறது.
பொதுவாக இரவாடிகள் (Nocturnal animals) மீது மனிதர்களுக்கு ஒருவித அச்சமும் விலகலும் உண்டு. மனிதர்கள் தீயை உருவாக்கக் கற்றிராத காலத்தில், இருளைப் பார்த்துப் பயந்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் இருள், அதிலும் குறிப்பாக ஆந்தைகள், வௌவால்களைப் பார்த்து காரணமின்றி அஞ்சுகிறார்கள்.
விலங்குகளிடமிருந்து சிதறிப் பரவுதல் (Spillover effect) மூலமாக நாவல் கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்கிற தகவல் கடந்த ஆண்டு வெளியான பிறகு, வௌவால்கள் மீதான விலகல் சற்றே அதிகரித்தி ருக்கிறது. அறிவியல் அடிப்படையற்ற இந்த எண்ணத்தை மாற்று வதற்கு சூழலியலாளர்கள் முயன்றுவருகிறார்கள். ஒரு விலங்கு குறித்து ஏற்கெனவே படிந்துள்ள பிம்பம், அதைப் பற்றிப் புதுக் கற்பிதத்தைக் கட்டமைப்பதில் எப்படிப் பங்காற்றுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
பார்வைக் குறைபாடு
சீனாவின் வூகான் நகர இறைச்சிச் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்கிற தகவல் கடந்த ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த சூழலியல் சார்ந்த விவாதங்கள் இனவெறி, அந்நியர் வெறுப்பு மனோபாவத்தைக் (Racism and Xenophobia) கொண்டவையாக இருந்தன. காட்டுயிர் வர்த்தகம் (Wildlife trade), தொழில்முறைப் பண்ணைகள் (Industrial farming) ஆகியவற்றைச் சார்ந்த சூழலியல் சிக்கல்கள், காட்டுயிர் வர்த்தகம் பற்றிய சர்வதேச சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள், காட்டுயிர் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் சமூகக் காரணிகள் ஆகியவற்றைப் பற்றி ஓரளவே விவாதிக்கப்பட்டது.
தென்கிழக்காசிய மக்களின் உணவுப் பழக்கம், அவர்களின் சூழலியல் பார்வையில் உள்ள சிக்கல்கள் ஆகியவை பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. ‘நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள்’, ‘கிடைத்ததை எல்லாம் உண்பவர்கள்’ என்பதுபோன்ற சொல்லாடல்கள் பரவின. விவாதம் சற்றே நகர்ந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கும் புதர் இறைச்சி வர்த்தகம் (Bushmeat trade) எவ்வாறு நோய்ப்பரவலுக்குக் காரணமாகிறது என்பதும் பேசப்பட்டது. இப்படியாகக் கீழைத்தேய நாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளுமே அதிகமாகக் குற்றஞ்சாட்டப்பட்டன. இவற்றிலிருந்து சூழலியல் சார்ந்த சர்வதேச விவாதங்களில் மேலை நாடுகளே ஆதிக்கம் செலுத்துவதைப் புரிந்துகொள்ளலாம்.
திசைதிருப்பல்கள்
இந்த விவாதத்தின் இன்னொரு அங்கமாக, சைவ உணவு பற்றிய பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. தொழில்முறை கால்நடைப் பண்ணைகள் சார்ந்த பிரச்சினைகளையும் அவற்றுக்கு வித்திடும் சந்தைக் கட்டமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எளிய மக்களின் உணவுப்பழக்கத்தை மட்டும் குற்றஞ்சாட்டும் போக்கு சூழலியலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூகக் கட்டமைப்பையோ அரசாங்கத்தின் திட்ட முடிவுகளையோ கேள்வி எழுப்பாமல், தனிமனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றினாலே சூழலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்கிற மனப்பான்மை சமீபகாலமாகப் பரவிவருகிறது. அதற்கு இந்த நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.
சூழலியல் பிரச்சினை என்பது வெற்றிடத்தில் உருவாவதில்லை. இனம், மதம், சாதி, வர்க்கம், பாலினம் என்று பல்வேறு அடுக்குகள் நிறைந்த ஒரு சமூக வெளியில்தான் சூழலியல் பிரச்சினையும் உருக்கொள்கிறது. ஆகவே, சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் தாக்கம், சூழலியல் பிரச்சினைகளின் மீதும் படிந்திருக்கிறது. அவற்றுக்கான தீர்வுகள் முன்மொழியப்படும்போதும் விவாதிக்கப்படும்போதும், ஏற்கெனவே கெட்டிப்பட்டுபோன சமூக அவலங்களின் கறை இந்தத் தீர்வுகளின்மீது படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சூழலியல் பாதுகாப்பு சார்ந்த விவாதங்களும் பார்வைகளும் எல்லாருடைய தேவைகளையும் உரிமைகளும் கணக்கில் கொண்டவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் சூழலியல் சார்ந்த சில முக்கியக் கருத்தாக்கங்களை அறிந்துகொள்வது, தெளிவான நிலைப்பாடுகளை நோக்கி நாம் பயணம் செய்ய உதவியாக இருக்கும்.
நவீன உலகில் எப்படிப்பட்ட சூழலியல் கருத்தாக்கங்கள் விவாதிக்கப்படுகின்றன, சூழலியல் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, அவற்றின் தாக்கம் எந்த அளவுக்கு மக்கள் மீது இருக்கிறது என்பதை யெல்லாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com
| நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியல் ஆராய்ச்சியாளர். கடல் - அது சார்ந்த உயிரினங்கள் -சூழலியல் குறித்தும் கால நிலை மாற்றம் குறித்தும் இணைய இதழ்கள், அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். அவருடைய வனவிலங்குகள் குறித்த நூல், 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே'. |