பாறைக் கழுகின் காதலாட்டம்

பாறைக் கழுகின் காதலாட்டம்
Updated on
3 min read

அது ஒரு அக்டோபர் மாத ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையாதலால் ஏதேனும் ஓர் இடத்திற்கு கானுலா செல்லலாம் என முடிவுசெய்திருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் அல்லது பறவை சரணாலயங்கள் என வழக்கம்போல் செல்லாமல், வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள சிறிய குன்றுகள், பாறை சூழ்ந்த பகுதிகளைத் தேடிச்செல்ல நினைத்து, கோபிசெட்டிபாளையத்துக்கு அருகே உள்ள பெரிய பாறைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த நவமலைக் குன்றினைத் தேர்வுசெய்திருந்தோம்.

அங்கு ஏற்கெனவே பலமுறை கானுலா சென்றிருந்தாலும் பருவ மழைக்காலத்தில் அந்த இடம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வத்தோடு அதிகாலையில் புறப்பட்டோம். காலைக் கதிரவனின் பொன் நிற ஒளியும், ஊர்ப்புறத்துப் பறவைகளின் கீச்சுக்குரல்களும், வெட்டுக்கிளிகளின் ஒலியும் ஈரக்காற்றோடு சேர்த்து எங்களை இயற்கையோடு இணைத்துக் கொண்டன.

வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருந்ததாலும், பவானி சாகர் வாய்க்கால் பாசனப் பகுதி என்ப தாலும், குளம், குட்டைகள் நிறைந்து எங்கும் பசுமையாகக் காட்சியளித்தன. நிலக்கடலை, சோளம், ஆமணக்கு போன்ற மானாவாரி புஞ்சைப் பயிர்களும், நெல், கரும்பு போன்ற வாய்க்கால் பாசன நஞ்சை சாகுபடியும் மிகுந்திருந்ததால் அப்பகுதி பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளித்தது.

முதலில் குன்றுக்கு அருகில் நீர் நிரம்பி வழிந்த குட்டைக்குச் சென்று பறவைகளைப் பதிவுசெய்தோம். வலசைவந்த வாத்துகளையும், உள்ளான்களையும் பார்த்ததோடு வயல்வெளியில் இரை தேடிக் கொண்டிருந்த ஏராளமான சின்ன அரிவாள்மூக்கனையும் ஒரே இடத்தில் பார்த்து மகிழ்ந்தோம். பின்னர் குன்றுப் பகுதிக்குச் சென்றோம்.

பறவைச் செழிப்பு

பெரும் பாறைகளைக் கிடைமட்ட மாக அடுக்கி வைத்ததைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒரு சிறிய குன்றுதான் நவமலை. பிரம்மாண்ட மான பெரிய பெரிய பாறைகளும் அதன் இடுக்குகளில் வளர்ந்துள்ள காட்டு மரங்களும் புதர் செடிகளும் நிரம்பி அவ்விடம் புதர்க்குருவி களுக்கும் ஊர்வனவற்றிற்குமான சரணாலயம்போல் திகழ்ந்தது. வேம்பு, வாகை, ஆல், விடத்தேர் (Dichrostachys cinerea), வெள்வேலம், புளியன், கருவேலமரங்களுடன் ஒருசில பனைமரங்களும் காணப்படும் குன்றில் எப்போதும் பறவைகளின் ஒலி கேட்டுக்கொண்டேயி ருக்கும். குன்றின் அழகை ரசித்தவாறும் அதன் பிரம்மா ண்டத்தைக் கண்டு வியந்தவாறும் அதன் அடிவாரத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கி னோம்.

மயில் அகவலும், மணிப்புறாவின் அனத்தலும், மைனாவின் கீச்சுக்குரல்களும், தவிட்டுக்குருவிகளின் கலகலப்பும் ஓய்வில்லாமல் ஒலித்துக்கொண்டி ருந்தன. செண்பகம், கொண்ட லாத்தி, தவிட்டுப்புறா, கொண்டைக் குருவிகள், பச்சைக்கிளிகள் போன்றவற்றின் ஒலிகளும் அதனூடே கேட்ட படியிருக்க, கருஞ்சிட்டின் இரைதேடும் அழகையும் கண்டு ரசித்தோம். அப்போது உலோகத்தில் யாரோ சுத்தியலால் அடிப்பது போன்று இடைவிடாத சப்தம், ஆம் நாங்கள் நினைத்தது போலவே குக்குறுவான் ஒன்று பக்கத்திலிருந்த ஆலமரத்திலிருந்து கத்திக்கொண்டிருந்தது. அப்போது கிளிங் என்ற ஓசையின் மூலம் வால்காக்கையும் ஆலமரத்தில் தனது இருப்பை உணர்த்தியது.

பெரும் உருண்டை வடிவில் கிடந்த பாறைகளில் ஆங்காங்கே இருந்த பாறைப்பல்லிகள், அதனடி யில் சிறு புதர்களில் அரணைகள், ஓணான்கள், விசிறித்தொண்டை ஓணான் எனப் பலவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டே சென்றபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பாறைக்கழுகின் காதல்

ஆம், குன்றின் பின்புறத்தி லிருந்து ஒரு ஜோடிக் கழுகுகள் திடீரெனப் பறந்துவந்தன. ஆர்வ மிகுதியோடு நாங்கள் அவற்றை உற்றுநோக்கியபோதுதான் தெரிந்தது, அவை பாறைக் கழுகுகள் (Bonelli's eagle -Aquila fasciata) என்று. மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டே அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்தோம். ஓயாமல் பறந்துகொண்டிருந்த அவ் விரண்டும் சேர்ந்து கூடமைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தது, எங்களுக்குச் சிறிது நேரத்திலேயே புலப்பட ஆரம்பித்தது.

பாறைக்கழுகுகள் இரண்டும் ஒன்றையொன்று பின்தொடர்ந்தவாறு நல்ல உயரத்தில் பறந்தபடி வட்டமிட்டுக் கொண்டேயிருந்தன. பெரியளவில் ஏதும் இடையூறு இல்லையென்பதை உணர்ந்ததுபோல் சட்டென்று குன்றின் மீதிருந்த ஒரு பெருமரத்தின் உச்சியில் ஓரளவு தடிமனான குச்சிகளை உடைத்து எடுத்தன. குன்றின் மீதிருந்த உயரமான பனைமரத்தில் அக்குச்சிகளைக் கொண்டு சேர்த்து கூடமைத்துக்கொண்டிருந்தன.

மரங்களும் முட்புதர்களும் அடர்ந்த பாறையொன்றில் சாய்ந்து நின்றவாறு தொடர்ந்து அவற்றின் செயல்களை ரசித்தபோதுதான், அந்த அதிசயக் காட்சியைக் கண்டோம். பறந்து சென்ற பாறைக்கழுகொன்று கூடமைக்க வாயில் கவ்வியிருந்த குச்சியை திடீரெனத் தவறவிட்டது. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கழுகுகள் எதையும் உறுதியாகப் பிடித்து எடுத்து செல்லும் இயல்புடையவை எனக் கேள்விப்பட்டிருக்கிறோமே. ஆனால், இது என்ன திடீரெனத் தவறவிடுகிறது என யோசித்துக்கொண்டிருந்த வேளையில், நொடிப்பொழுதில் அக்கழுகு செங்குத்தாக அந்தரத்தில் கரணமடித்தவாறு அக்குச்சியை மீண்டும் லாகவமாகத் தன் கால்களால் பற்றிக்கொண்டது. மெய்சிலிர்க்கும் இந்தக் காட்சியைச் சிறிது நேரம் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரு முறை அல்ல, இரண்டு மூன்று முறை அப்படிச் செய்தது. சட்டெனச் சுதாரித்து அருமையான அந்த நிகழ்வைப் படமெடுக்க ஆரம்பித்தேன்.

கழுகுகள் இணைசேர்ந்து கூடமைக்கக் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது, காதலூட்டத்தின் மிகுதியால் ஆண் கழுகு பெண்ணைக் கவர்வதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் என்பதை அறிந்திருந்தாலும், அன்று தான் அதைக் காணும் பாக்கியம் கிடைத்தது.

கரடுகளின் தனித்தன்மை

பொதுவாகவே குஞ்சுகளின் பாதுகாப்பு கருதி மிக உயரமான இடங்களையே கழுகுகள் கூடமைக்கத் தேர்வுசெய்கின்றன. அதுபோலவே பாறைக்கழுகுகளும் பெரும்பாலும் பாறை சூழ்ந்த இடத்தையே வாழ்விடமாகத் தேர்வு செய்து, கூடமைத்து வாழ்கின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்குள் கூடமைத்து முட்டையிடும் இக்கழுகுகள், தலா இரண்டு முட்டைகள்வரை இடுகின்றன.

இக்கழுகுகள் பாறை சூழ்ந்த பகுதியில் உயரமான மரங்களைத் தேர்வுசெய்து, ஒன்றின் மீது ஒன்றாகக் குச்சிகளை அடுக்கியே கூடுகளைக் கட்டுகின்றன. இதன்மூலம் தங்களுக்கும் தங்களது குஞ்சுகளுக்கும் பாதுகாப்பானதொரு சூழலை உருவாக்கிக்கொள்கின்றன. மேலும் பாறை சூழ்ந்த கரடுகளில் வாழும் சிறு பறவைகளையும், ஊர்வனவற்றையும் இரையாகக் கொள்வதற்கும் ஏற்ற இடமாகவும் இந்தப் பகுதிகளைத் தேர்வு செய்கின்றன. சிறு குன்றுகளைக் கொங்கு மாவட்டப் பகுதிகளில் கரடு என்றழைப்பர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இக்கழுகுகள் இங்கே இருப்பது பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், இதே மாதங்களில் கூடமைப்பதற்காகக் குச்சிகளை எடுத்துச் சென்றது பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் முதன்முறையாக இவற்றின் காதலாட்டத்தைக் கண்டது அன்றைய பயணத்தின் முக்கிய அம்சம்.

வெறும் கரடல்ல

சிறிய குன்றாக இருந்தாலும், உயிரினப் பன்மை மிகுந்த பகுதி அது. இது போன்ற இடங்கள் பல வகை உயிரினங்களுக்கு, குறிப்பாக இதுபோன்று நீண்ட வாழ்நாளைக் கொண்ட கழுகு முதலான பறவைகள் தொடர்ந்து கூடமைக்கும் சூழலைக் கொண்டிருக்கின்றன.

புதர்செடிகள், பாறைகள் நிரம்பிய குன்றுகளும் கரடுகளும் ஒரு சிலரது பார்வையில் அங்கே பார்ப்பதற்கு ஒன்றுமில்லாததுபோல் தோன்றினாலும், அவை எண்ணற்ற உயிரினங்களின் வாழ்விடமாகவும் காப்பிடமாகவும் இருந்து வருவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர் தொடர்புக்கு: nallsegret@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in